Header Ads



யாழ்ப்பாண முஸ்லிம்களின் சமூகத் தீமைகளுக்கு எதிரான மக்கள் பிரகடனம்


யாழ் முஸ்லிம்களாகிய நாம் இத்தால் சகலருக்கும் அறியத்தருவதாவது,

எமது தேசத்தில் கடந்த 3 தசாப்தங்களாக நிலவிய யுத்தம் தற்போது நிறைவடைந்து அமைதியான சூழல் உருவாகிக்கொண்டிருக்கின்றது. இந்த யுத்தமற்ற அமைதியான சூழலைப்பயன்படுத்தி எமது தேசத்தின் இனத்துவங்களிடையே நல்லிணக்கமும், பரஸ்பர புரிந்துணர்வும், கௌரவமான வாழ்வும் உருவாக்கப்படவேண்டும்.

இந்த நாட்டின் சிறுபான்மை சமூகங்கள் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்கான முயற்சிகளில்; தாமும் எல்லா மக்களைப்போன்றும் சரிசமமாக மதிக்கப்படுகின்ற, வளங்களைப் பகிர்ந்துகொள்கின்ற, வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்கின்ற ஒரு நல்ல சூழ்நிலைக்காக தொடர்ந்தும் முயற்சிகளில் ஈடுபட்டுக்க் கொண்டிருக்கின்றார்கள்.

இந்தவேளையில் பல்லின சமூகங்கள் வாழ்ந்த, வாழ்கின்ற யாழ்ப்பாணம் போன்ற சிறுபான்மைகள் பெரும்பான்மையாக வாழ்கின்ற பூமியில் அண்மைக்காலமாக சமூகவிரோத செயல்கள் வகைதொகையின்றிப் பெருகியுள்ளமை எம்மை மிகுந்த வருத்தமடையச் செய்கின்றது.

நீண்டகாலம் யுத்தமொன்றை சந்தித்த சமூகங்கள், நீண்டகால இடப்பெயர்வை சந்தித்த சமூகங்கள் இவ்வாறான சமூகவிரோத செயற்பாடுகளால் பாதிப்புக்குள்ளாகுவது மரபு, என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன, இருப்பினும் அத்தகைய தீமைகளுக்கு எதிராக மக்கள் விழிப்புணர்வடைந்து அவற்றை இல்லாதொழிக்க முன்வரவேண்டும், இது ஒரு சமூகக் கடைமையாகும்.

அந்தவகையில் யாழ் மண் பல்வேறு சமூகவிரோத செயற்பாடுகளை இதுவரை சந்தித்துள்ளது, இன்னும் அவ்வாறான நிகழ்வுகள் இடம்பெற வாய்ப்பும் இருக்கின்றது, எனினும் இந்த மண்ணின் மைந்தர்களாகிய நாம் இவற்றுக்கு எதிராக செயற்பட்டு எமது மண்ணின் கௌரவத்தைக் காப்பாற்ற திடசங்கற்பம் பூணுகின்றோம்

19-05-2012 அன்று யாழ் மாவட்டத்தின் காரைநகர்ப் பகுதியில் மாற்றுத்திறன்கொண்ட யுவதியொருவரின் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் வல்லுறவு குறித்த்த செய்தியை செவியுற்ற நாம் மிகுந்த மனவேதனையடைகின்றோம், இதன் நிமித்தம் அத்தகைய ஈனச்செயலை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். அத்துடன் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உச்ச அளவிலான தண்டனை பெற்றுக்கொடுக்கப்படுவதை நாம் வலியுறுத்துகின்றோம்.

எதிர்வரும் காலங்களில் யாழ் முஸ்லிம் வட்டாரத்தில் இத்தகைய சமூகவிரோத செயற்பாடுகள் இடம்பெறாவண்ணம் தடைசெய்வதற்குரிய சமூகப்பொறிமுறையாக யாழ் முஸ்லிம் சிவில் பாதுகாப்பு கவுன்ஸில் என்னும் அமைப்பை யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தின் கீழ் நிறுவி அதனை ஒரு வினைத்திறம் மிக்க பொறிமுறையாகவும் அறிமுகம் செய்கின்றோம்.

இவ்வண்ணம்
யாழ் முஸ்லிம்கள்

மேற்படி பிரகடனம் குறித்த ஈனச்செயலைக் கேள்வியுற்று ஆத்திரமும் கவலையுமடைந்த யாழ் முஸ்லிம் வட்டாரத்தைச் சேர்ந்த சுமார் 200க்கும் அதிகமான முஸ்லிம்கள் யாழ் ஒஸ்மானியா கல்லூரி வளாகத்தில் ஒன்று கூடி எடுக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் வரையப்பட்டாதாகும்.

7 comments:

  1. நல்ல முன் மாதிரி,அங்கு வாழக்கூடிய முஸ்லிம் மக்களின் சமூக சிந்தனையுடன் கூடிய இந்த முயற்சிக்கு
    எங்கள் வாழ்த்துகள் .
    Daoud Tharik

    ReplyDelete
  2. mahir paris1621/05/2012, 16:21

    அந்த இருவரும் சட்டத்தின் கையிலிருந்து தப்பிவ்டாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது யாழ் கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தின் பொறுப்பு அதே நேரம் பதிக்கப்பட்ட பெண்ணுக்கு உதவிசெய்ய யாழ் முஸ்லிம்களாகிய நாம் கடமைப்பட்டு இருக்கின்றோம் .
    இதில் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில்வாழும் யாழ் முஸ்லிகளையும் இணைத்துக்கொள்வது நல்லது

    ReplyDelete
  3. ஆம் மிக நல்ல முன்மாதிரி !
    ஆனால் முஸ்லிம் சிவில் பாதுகாப்பு கவுன்சில் என்பது ஏன் என நாங்கள் ‘ஆதரவு’ கொடுக்கும் அரசு எம்மைக்கேட்கலாம் அல்லவா? தமிழர்கள் பொலிஸ் அதிகாரம் கேட்கும் போது அதனைக்கொடுக்க மறுக்கும் அரசுக்கு ஆதரவு அளிக்கும் நாம் ஏன் எமக்கு ‘சிவில்’ பாதுகாப்பு கவுன்சில்?
    ஆகவே வடகிழக்கு மாகாணத்துக்கு பொலிஸ் , காணி அதிகாரம் வ்ழங்கும் தமிழரின் கோரிக்கைக்கு ஆதரவு கொடுத்தல் நல்ல ஆரம்பமாக இருக்கும்!

    ReplyDelete
  4. தம்மிடம் உள்ளதை ஒரு சமுதாயம் மாற்றிக் கொள்ளாத வரை அச்சமுதாயத்தில் உள்ளதை அல்லாஹ் மாற்ற மாட்டான் (13:11)

    எந்தவொரு தனி மனிதனாக இருந்தாலும்,அல்லது ஒரு அமைப்பாக இருந்தாலும் தாம் தவறில் இருக்கிறோம் என்று தெரிந்தால் அவர்கள் அந்தத் தவரை திருத்திக் கொள்ள வேண்டும்.

    அவர்களாக திருத்திக் கொள்ளாத வரை அல்லாஹ்வும் அவர்களை திருத்தமாட்டான் என்று தெளிவாகவே இறைவன் கூறியிருப்பதை மேற்கண்ட திருமறை வசனம் நமக்கு உணர்த்துகிறது.

    Meraan

    ReplyDelete
  5. இது போன்றவர்களுக்கு தீர்ப்பு விசாரனை என்று காலத்தை கடத்தாமல்
    இழுத்து வச்சு அறுத்து விட வேண்டியதுதான்
    யாழ் குரு

    ReplyDelete
  6. கற்பழிப்பு கடுமையான குற்றம், தண்டிக்கப் பட வேண்டியது.
    சட்டம் தன் வேலையை பார்த்துக் கொள்ளட்டும்.

    சிலர் வேலை இல்லாமல்,
    இது மட்டும் தான் இலங்கையில் நடைபெற்ற ஒரே ஒரு கற்பழிப்பு என்பது போல எழுதிக்கொண்டும்,
    கருத்து பதிந்துகொண்டும் இருக்கின்றனர்.

    ஓவராக வழிய வேண்டாம், அது உடம்புக்கு நல்லதல்ல. கிளிநொச்சி யாழ் முஸ்லிம் சம்மேளனம்
    சொனகதேருவில் இருக்கின்ற அடிப்படை தேவைகளியே சரி செய்ய இயலாமல் திண்டாடும் நிலையில்,
    கற்பழிப்பு கேஸ்களை எல்லாம் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு திண்டாட, அவர்கள் என்ன போலிஸ்
    படையா இல்லை சட்டமா அதிபர் திணைக்களமா?

    வெளிநாட்டில் உள்ளவர்கள் எல்லாம் நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்றெல்லாம் எழுதுவது
    அவ்வளவு நன்றாக இல்லை, நீங்கள் ஓவராக வழிவதை பார்த்தால், எதோ கிளிநொச்சி யாழ் முஸ்லிம் சம்மேளனம்
    சொல்லிக் கொடுத்து கற்பழித்ததாக பார்க்கின்றவர்கள் நினைத்துக் கொள்ளப் போகின்றார்கள்.

    எதுவும் அளவோடு இருப்பதுதான் நல்லது.

    காணி போலிஸ் அதிகாரத்தை கொடுத்துவிட்டால்???
    எதையும் கொடுக்காமலே மன்னார் ஆயர் இந்த ஆட்டம் ஆடுகின்றார்,
    காரை நகர் பிரதேச தலைவர் ஆனைமுகத்தான் பழைய இரும்பு வாங்க பொருளாதாரத் தடை விதிக்கின்றார்,

    இப்பொழுது சொல்லுங்கள், என்ன குறைச்சல் வந்து விட்டது என்று காணி, போலிஸ் அதிகாரத்தை கொடுக்க சொல்லுகின்றீர்கள்?

    ReplyDelete
  7. jaffna moor street21/05/2012, 23:48

    நன்மையை ஏவி தீமையை தடுப்பது பற்றி அல்லா குர் ஆனில் பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறான். அந்த வகையில் யாழ் முஸ்லிம்கள் மேற்கொண்ட இம்முடிவு பாராட்டுக்குரியதே. எமது முன்னோர்களின் நற்பண்புகளின் மூலமே இஸ்லாம் இந்த அளவிற்கு இலங்கையில் நிலைத்திருப்பதற்குரிய காரணமாகும். எமது அஹ்லாக்குகளை நாம் சீர்படுத்தினால் நமது மீள்குடியேற்றம் இன்னும் சிறப்பாக அமையும் இன்ஷா அல்லாஹ்.

    ReplyDelete

Powered by Blogger.