Header Ads



தான் சார்ந்த சமூகத்தில் அக்கறையற்றவன் மனிதன் அல்ல - கவிஞர் யாழ் அஸீம்

கவிஞர் யாழ் அஸீம்

எல்லாப் பெற்றோருக்குமே தமது பிள்ளைகளை வைத்தியராக, பொறியியலாளராக உருவாக்க வேண்டுமென்ற ஆசையுண்டு. இது விடயத்தில் உங்களது தந்தை எப்படி இருந்தார்?

எனது தந்தை அப்துல் காதர் அவர்களும் ஒரு எழுத்தாளர்தான். நிறைய எழுதியிருந்தார். ஆனால் அவற்றை வெளிக்கொணர்வதற்கான சந்தர்ப்பமும் வாய்ப்பும் அப்போது இருக்கவில்லை. நிறையப் புத்தகங்கள் வாங்கி வருவார். எங்களை வாசிக்கத் தூண்டுவார். என்னை எப்படியேனும் ஒரு வைத்தியராக்க வேண்டும் என்றே அவர் ஆசை கொண்டிருந்தார். நான் ˆO/L எழுதிவிட்டு பெறுபேரை எதிர்பார்த்திருந்த வேளை மாரடைப்பின் காரணமாக அவரை வைத்தியசாலையில் செர்த்தோம். கடைசித் தருவாயில் கூட என் கைகளைப் பற்றிக் கொண்டு நீ வைத்தியராக வேண்டும் எனக் கூறினார். இன்று நினைத்தாலும் அது கண்ணீர்தரக் கூடிய நினைவுதான்.

சமூக விவகாரங்களில் உங்களை நெருக்கமாக இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்வு எப்படி வந்தது?

நானும் சமூகத்தில் ஓர் அங்கமாக இருக்கிறேன். உடம்பில் எங்காவது ஒரு வலி வந்தால் உடம்பு முழுக்கத்தான் வலிக்கிறது. அதுபோலத்தான் சமூகத்திற்கு ஏதும் வரும்போது அது என்னையும் காயப்படுத்துகின்றது. ஒவ்வொரு மனிதனும் சமூகத்தின் ஓர் அங்கமாக இருக்க வேண்டும். தான் சார்ந்திருக்கின்ற சமூகத்தின் முன்னேற்றத்திலும் அபிவிருத்தியிலும் அக்கறையில்லா விட்டால் அவன் தூய்மையான இலக்கியவாதியுமல்ல, மனிதனுமல்ல. அந்தவகையில் முடியுமான சமூகப் பணிகளில் என்னையும் இணைத்துப் பணியாற்றி வருகிறேன்.

யாருக்காக எழுதுகிறீர்கள்?

எழுத்துக்கள் சமூக மாற்றத்திற்குப் பயன்பட வேண்டும். அப்படி இல்லாத எழுத்துக்கள் வெறும் பதர்கள்தான். நான் புதிய தலைமுறைக்குச் சொல்வதும் இதனைத்தான். இலக்கியம் என்றால் அதற்கு ஒரு இலக்கு இருக்க வேண்டும். அப்போதுதான் அது காலத்தை, சமூகத்தை செழுமையாக்கும். எமது படைப்புக்கள் சமூக மாற்றத்திற்குப் பங்காற்ற வேண்டும். அதற்காகத்தான் எழுத நினைக்கிறேன்.

உங்களது எழுத்துத் துறை பிரவேசம் பற்றி ...

கா.பொ.த. (உயர்தரம்) படித்துக் கொண்டிருந்த காலப் பகுதியில் எழுதத் தொடங்கிவிட்டாலும் 1990 ஒக்டோபரில் வட மாகாணத்தில் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதன் பின்னர் ஏற்பட்ட பிறந்த மண்ணின் இழப்பும் அகதி வாழ்க்கையின் வலிகளும், அவலங்களும் என்னை வேகமாக எழுத வைத்தன.

வடமாகாண முஸ்லிம்கள் புலிகளால் வெளியேற்றப்பட்டமையானது ஒரு பலவந்த வெளி யேற்றமாக மட்டுமே பேசப்பட் டது. இதில் முஸ்லிம்களது சகல சொத்துக்களும் கொள்ளையிடப்பட்டன. இந்தக் கொள்ளைச் சம்பவமானது இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற பாரிய கொல்லைச் சம்பவமாகும். அது வரலாற்றில் போதுமானளவு உள் வாங்கப்படவில்லை.

இலங்கையின் பிற மாகாணங்களில் வாழும் முஸ்லிம்கள், யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் வாழ்ந்தனரா என்று ஆச்சரியத்துடன் வினவியிருக்கிறார்கள். எனவே எம்மீது நிகழ்த்தப்பட்ட இன அழிப்புக்குச் சமனான நிகழ்வைப் பதிவு செய்வது வரலாற்றுத் தேவை என உணர்ந்தேன். இன அழிப்புக்கு (Genocide) எதிரான ஐ. நா. சாசனத்தின்படி சோந்த வாழ்விடங்களில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்படுவதும், பண்பாட்டு வாழ்வியலின் தனித்துவ அடையாளங்களை அழித்தலும் இன அழிப்புக்குச் சமனான குற்றங்களாகும். இவை இரண்டுமே வடமாகாண முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்டன. 

"எந்த ஒரு சமூகம் தனது சொந்த வரலாற்றை அறிந்திருக்கவில்லையோ அந்த சமூகம் அழிந்துவிடும்‘‘ என்ற அல்லா மா இக்பாலின் கூற்றுப்படி எமது வரலாற்றை ஆதாரபூர்வமாக எதிர்வரும் சந்ததிகளுக்கு உரிய முறையில் கடத்தி வைக்க வேண்டியது நமது தார்மீகக் கடமையாகும் என்ற உணர்வே இன்னும் என் பேனாவை இயக்கிக் கொண்டிருக்கிறது.

உங்களது 20 வருடகால போரியல் வாழ்வு குறித்து என்ன சோல்ல விரும்புகிறீர்கள்?

போரின் வலிகளை, அதன் அவலங்களை நான் நேரடியாக அனுபவித்தவன். உறவினர்கள், நண்பர்கள், அயலவர்கள் என பல உயிர்களைப் பறித்துச் சென்றுவிட்ட இந்தப் போர் மிகக் கொடியது.

ஒருநாள் இரவு நான் உறங்கிக் கொண்டிருந்த வேளை ஹெலி கெப்டரில் இருந்து சுடப்பட்ட துப்பாக்கி ரவைகள் எமது வீட்டுக் கூரையையும் துளைத்துக் கொண்டு சுவரில் பட்டுத் தெறித்து மயிரிழையில் உயிர் தப்பியிருக்கிறேன்.

1990 ஒக்டோபர் முஸ்லிம்களை வெளியேற்ற சில வாரங்களுக்கு முன் போர் உக்கிரமடைந்தவேளை விமானக் குண்டு வீச்சில் இருந்தும் ஷெல் தாக்குதல்களில் இருந்தும் தப்புவதற்காக புதுப் பள்ளிவாசலுக்கு அண்மையில் உள்ள மாடிவீட்டில் பலர் கூடியிருந்தனர். அப்போது வானில் வட்டமிட்ட விமானத்தை நோக்கி புலிகள் பள்ளிவாசலுக்கு அருகில் இருந்து தாக்கினர். பதிலுக்கு விமானத்தில் இருந்து போடப்பட்ட குண்டு அந்த மாடி வீட்டின் மீது வீழ்ந்து வெடித்ததில் குழந்தைகள், பெண்கள் உட்பட 10 பேர் அவ்விடத்திலேயே பலியாகினர். வார்த்தைகளால் கூறமுடியாத அவலங்கள் அவை.

அது மட்டுமன்றி எனது தங்கையின் கணவர் ஜலீல் ஆசிரியரை புலிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலி கொடுத்திருக்கிறேன்.

உரிமைக்கான போராட்டங்கள் தவிர்க்கப்பட முடியாதவை. ஆனால் அந்தப் போராட்டங்களின் தூய வடிவம் கெட்டுவிடும் போது அது அழிவுக்கே இட்டுச் செல்லும் என்பதற்கு விடுதலைப் புலிகளின் வீழ்ச்சி ஒரு வரலாற்றுச் சான்றாகும். சிறுபான்மை உரிமைக்காக போராடுவதாகக் கூறிக்கொண்டு இன்னொரு சிறுபான்மையான முஸ்லிம்களை வடமாகாணத்தில் இருந்து இனச்சுத்திகரிப்புச் செய்தது மட்டுமன்றி அவர்களின் அசையும், அசையா சொத்துக்களை கொள்ளையடித்து, கிழக்கில் ஆயிரக் கணக்கான முஸ்லிம்களைப் படுகொலை செய்தமை அவர்களது போராட்டத்தை களங்கப்படுத்திவிட்டது.

மீள்குடியேற்ற நடவடிக்கைகள் எந்த நிலையில் உள்ளன?

வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் பற்றிக் கூறுவதாயின் உண்மையில் ஆக்கபூர்வமான மீள்குடியேற்றம் எந்தத் தரப்பாலும் மேற்கொள்ளப்படவில்லை என்றே கூறவேண்டும்.

அரசும் வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் அக்கறையற்று இருக்கின்றது. இறுதி யுத்தத்தில் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் மீள்குடியமர்த்தப்பட வேண்டியது அவசியமே. எனினும் சர்வதேச அழுத்தத்தின் காரணமாக அதனை அவசரமாக மேற்கொண்ட அரசு புலிப்பயங்கரவாதிகளால், துப்பாக்கி முனையில் வெளியேற்றப்பட்ட வடபுல முஸ்லிம்களின் விடயத்தில் பாராமுகமாக உள்ளது.

அரச சார்பற்ற நிறுவனங்களும், சர்வதேச நாடுகளும், மனித உரிமை நிறுவனங்களும், ஐ.நா. அகதிகள் அமைப்பும் வடமாகாண முஸ்லிம்கள் விடயத்தில் ஒருதலைப் பட்சமாகவே நடந்து கொள்கின்றன. இறுதி யுத்தத்தில் இடம்பெயர்ந்த தமிழ் அகதிகளை மீளக்குடியேற்ற அழுத்தம் கொடுக்கும் ஐ.நா. அமைப்புக்கள், மனித உரிமை நிறுவனங்கள், சர்வதேச நாடுகள் இரு தசாப்தங்களாக இடம்பெயர்ந்து வாழும் வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்காக ஒரு போதும் வலியுறுத்தவில்லை. 

இந்திய அரசின் உதவியுடன் நிர்மாணிக்கப்படும் 50,000 ஆயிரம் வீட்டுத்திட்டத்திலும் வட மாகாண முஸ்லிம்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டனர். பழைய அகதிகள், புதிய அகதிகள் எனப்பாகுபாடு காட்டப்பட்டு 2008 இற்குப் பின் இடம்பெயர்ந்தவர்களுக்கே இந்த வீடுகள் வழங்கப்படுவதால் வடபுல முஸ்லிம்கள் தந்திரமாகத் தவிர்க்கப்பட்டுள்ளனர்.

வடபுல முஸ்லிம்களை அவர்களது தாயக மண்ணில் இருந்து புலிகள் விரட்டியதை தவறு எனக் கூறுகின்ற தமிழ் அரசியல் வாதிகளும் கூட வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்காக இதுவரை குரல் கொடுக்காமல் இருப்பதும் வேதனைக்குரியது.

இத்தகைய புறக்கணிப்புகளுக்கு மத்தியிலும் எம்.எப்.சி.டி. நிறுவனம் யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்காக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயமே.

No comments

Powered by Blogger.