Header Ads



தமிழருக்கு அரசியல் தீர்வு கிட்ட முஸ்லிம்களின் ஆதரவு தேவையாம்

இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு ஏற்படுவதற்கு சர்வதேசம் தமிழ் மக்களுக்குப் பலமாகவிருக்கும் இவ்வேளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுடன் நடத்தும் பேச்சு வார்த்தைக்கு ஆதரவு வழங்கி தீர்வைப் பலமுள்ளதாக மாற்ற முஸ்லிம் தலைவர்களும் மக்களும் முன்வரவேண்டும். என யாழ்.மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளருமான மாவை சேனாதிராஜா கூறினார்.

கல்முனை மாநகரசபைத் தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கல்முனை இரண்டாம் பிரிவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். கூட்டத்தில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;

சர்வதேச சமூகம் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டுமென்று அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது. இவ்வேளையில் இந்நாட்டில் இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு உருவாக வேண்டுமானால் முஸ்லிம் தலைமைகளும் எமக்கு ஆதரவு வழங்க வேண்டும். இதற்கென தமிழர்களும், முஸ்லிம்களும் ஒன்றுபட்டுத் தமது குரலை எழுப்ப வேண்டும். அதற்காக அரசிடம் வாதாடுவதன் மூலம் ஏன் மக்கள் போராட்டம் நடத்த வேண்டுமானால் அதிலும் நாம் இறங்க வேண்டும்.

அரசியல் தீர்வு எட்டப்படுவதற்கு சர்வதேசம் தமிழ் மக்களுக்கு பலமாக இருக்கும் இச் சந்தர்ப்பத்தில் தமிழர்கள் அப்படியொரு அரசியல் தீர்வை எட்டும் நேரத்தில் கிழக்கில் குறிப்பாக பரவலாக முஸ்லிம் மக்களின் ஆதரவு எமக்குத் தேவையாகவுள்ளது. அதேவேளை முஸ்லிம் மக்களும் இந்த நாட்டில் ஆட்சி உரிமை, அரசியல் உரிமை, சுயநிர்ணய உரிமை கொண்டவர்களாக தங்களை நிரூபிக்க வேண்டுமானால் தங்கள் மண்ணில் தாங்களே ஆளுபவர்களாக இருக்க வேண்டுமானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுடன் நடத்தும் பேச்சுவார்த்தைக்கு ஆதரவு தர வேண்டும்.

அந்த அரசியல் தீர்வில் பங்காளிகளாக மாறி அத்தீர்வைப் பலமுள்ளதாகவும் மாற்றி ஒன்று பட்ட வடக்குக் கிழக்குத் தாயகத்தில் ஆளுவோம் என்ற நிலைப்பாட்டை உறுதிப்படுத்தவும் முஸ்லிம்கள் முன்வரவேண்டும். அப்படி நடக்க வேண்டுமென நான் நினைக்கின்றேன். வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்தில் அங்குள்ள தமிழ் , முஸ்லிம் மக்கள் தங்கள் மண்ணை, தங்கள் நிலத்தில், தங்கள் பிரதேசத்தில் தாங்களே ஆளுகின்ற ஒரு அரசியல் தீர்வையே நாம் வேண்டிநிற்கின்றோம்.

அந்த தன்னாட்சி அரசியல் தீர்வில் முஸ்லிம் மக்கள் உரிமை அங்கீகரிக்கப்பட்டு அவர்களும் சம உரிமைகளோடு தங்கள் மாநிலத்தில் தங்கள் பிரதேசத்தில் ஆளுகின்றவர்களாக மாற கல்முனைமாநகர சபைத் தேர்தலும் முக்கியமாகும். முஸ்லிம் மக்கள் தாங்கள் சார்ந்திருக்கின்ற எந்தக் கட்சியாகவிருந்தாலும் முஸ்லிம் பிரதிநிதிகளும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளும் ஒன்று பட்டு அபிவிருத்தி மட்டுமல்ல தமது உரிமைகளை நிலைநாட்டுவதற்கும் கல்முனை மாநகர சபை ஓர் உதாரணமாகத் திகழும்.

No comments

Powered by Blogger.