Header Ads



எல்-நினோ காலநிலை பாதிப்புகள் குறித்து ஜனாதிபதி தலைமையில் ஆராய்வு


எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எல்-நினோ காலநிலை நிலைமையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் அதனை எதிர்கொள்வதற்காக நிறுவனங்கள் கொண்டுள்ள திட்டங்கள் குறித்து ஆராயும் கலந்துரையாடலொன்று, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (11)  ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.


இந்த முறை ஏற்படும் எல்-நினோ நிலைமையானது 2016-2017 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட நிலைமைக்கு மிகவும் நெருக்கமானதாக இருக்கக்கூடும் என இங்கு சுட்டிக்காட்டிய அதிகாரிகள்,  அதற்கேற்ப விசேடமாக நீர் முகாமைத்துவத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். இதன்கீழ், 2026 ஆம் ஆண்டின் சிறுபோக  விவசாய நடவடிக்கைகளை சுமார் ஒன்றரை மாதங்களுக்கு முன்னதாகவே ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்  சுட்டிக்காட்டினர்.


ஏற்படக்கூடிய சூழ்நிலைக்கு மத்தியில் எதிர்வரும் சில மாதங்களில் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்தல், விவசாய நடவடிக்கைகள் மற்றும் உணவுப் பாதுகாப்பைப் பேணுதல் குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டதோடு மின் உற்பத்தி மற்றும் எதிர்வரும் சிறுபோகத்திற்குத் தேவையான நீரை வழங்குதல், குடிநீர் பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகியவற்றுக்கான தேவையான திட்டங்களைத் தயாரித்து சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

No comments

Powered by Blogger.