திருடப்பட்ட இடத்திற்கே கொண்டு வந்து விட்டுச் சென்ற வினோத சம்பவம்
எச்.எம்.எம். பர்ஸான்
திருடிய மோட்டார் சைக்கிளை மீண்டும் திருடப்பட்ட இடத்திற்கே கொண்டு வந்து விட்டுச் சென்ற வினோத சம்பவம் ஒன்று வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி, தபாலக வீதியில் இடம்பெற்றுள்ளது.
ஓட்டமாவடி தபாலக வீதியிலுள்ள வீடொன்றின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை அடையாளம் தெரியாத இருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (14) அதிகாலை 2.30 மணியளவில், திருடிச் சென்றனர். இந்தத் திருட்டுச் சம்பவம், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி (CCTV) கெமராவில் தெளிவாகப் பதிவாகியிருந்தது. இக்காட்சிகளின் அடிப்படையில், திருடர்களைக் கைது செய்வதற்கான தீவிர விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டிருந்தனர்.
இந்நிலையில், பொலிஸாரின் தேடுதல் வேட்டை ஒருபுறமிருக்க, தாங்கள் திருடிச் சென்ற மோட்டார் சைக்கிளை, அதன் ஆவணங்கள் மற்றும் தலைக்கவசம் (Helmet) ஆகியவற்றுடன் பத்திரமாக திங்கட்கிழமை (15) அதிகாலை மீண்டும் அதே வீட்டிற்கு வந்த திருடர்கள் வீட்டு வாசலில் நிறுத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
அதிகாலை வேளையில் வெளியே வந்த வீட்டு உரிமையாளர், தனது மோட்டார் சைக்கிள் மீண்டும் அதே இடத்தில் இருப்பதைக் கண்டு வியப்பிலும் மகிழ்ச்சியிலும் உறைந்து போனார். திருடர்கள் ஏன் மீண்டும் வந்து வண்டியை விட்டுச் சென்றார்கள் என்பது மர்மமாக உள்ள நிலையில், இது குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
திருடர்களின் இந்தத் திடீர் மனமாற்றம் அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தையும், பலவிதமான விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment