Header Ads



நிஸா டீச்சர்


1990 களின் பிறகு யாழில் இருந்து மள்வானைக்கு வந்து குடும்பமாக குடி பெயர்ந்தவர். மள்வானை அல் முபாரக் மத்திய கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். இறுதியாக அல் முபாரக் கனிஷ்ட பாடசாலையிலும் தற்காலிக இணைப்பு பெற்று அல் மஹ்மூத் வித்தியாலத்திலும் கற்பித்தலில் ஈடுபட்டார். 


கடந்த சில வருடங்களாக நீரிழிவு அவரை கடுமையாக பாதித்து வந்த நிலையில் வீட்டில் சறுக்கி விழுந்து கால் உடைந்து plate மாற்ற வேண்டிய நிலையில் சிறுநீரக பாதிப்பும் ஏற்பட்டு கட்டிலோடே இருக்க வேண்டிய நிலையில் 1/6/2026 இல் வபாத் தாகியுள்ளார். அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னிக்கட்டும். இந்த புனித மாதத்தின் திங்கள் தினத்தில் தன் பக்கத்தில் அழைத்துள்ளான். அவரது நிரந்தர மண்ணறை வாழ்வை மலர்ச்சியானதாக மகிழ்ச்சியானதாக மாற்றட்டும்


யாழில் இருந்து வந்து இங்கு ஆசிரிய பணியாற்றிய போது நான் 1997 களில் 7ம் வகுப்பில் இருந்தேன். அப்பொழுது மிக அழகாக தமிழ் கற்பித்தார். அவர் கற்பித்த அணியிலக்கணம் வேற்றுமை உறுப்புகள் இன்னும் மனதில் ஆழமாக பதிந்து இருக்கின்றன. அவரது பிள்ளைகளுக்கும் ஆரம்ப பிரிவிலும் உயர் தர கலைப் பிரிவிலும் கற்பித்துள்ளேன். சுமார் 15 ஆண்டுகள் தொழில் சார்ந்தும் அதைவிட அதிகமாக குடும்ப உறவு போலவும் வாழ்ந்துள்ளோம். நீங்கள் எனக்கு தம்பி போல என்று தான் கூறுவார். அவரது வீட்டில் என்ன விஷேசம் என்றாலும் ஒரு பங்கு வந்து சேரும். இப்படி நினைவுகளின் சாரலில் நிறையவே எழுதலாம். இன்று அவர் நாளை நாம் அவ்வளவு தான் வாழ்வு.


கஷ்டத்துக்கு மத்தியில் தாயகம் துறந்து இங்கு மள்வானை வந்து கண்ணியமாக வாழ்ந்தவர். அடுத்தவர்களுக்கு எப்போதும் தன் செல்வத்தால் உதவி செய்யக்கூடிய பண்பு அவரிடம் இருந்தது. கடன் கொடுப்பது, கஷ்டத்தில் கை கொடுப்பது அவரின் பிறவிக் குணம். 


2015 களின் இறுதியில் வாடகை வீடின்றி நான் அலைந்து திரிந்த போது, தனது வீட்டை தயக்கமின்றி ஐந்து மாதங்கள் வரை இலவசமாக தந்து முதல் நாளே எமக்கு சாப்பாடும் தந்து வாராந்தம் வெள்ளி சிறப்பு விருந்தும் அனுப்பி வைப்பார். 


தற்றுணிவான பெண். எந்த விடயமானாலும் பின்னால் கதைப்பதே இல்லை. ஆளுக்காள் நேருக்கு நேர். Cut and right  பலருக்கும் பல வழிகளில் உதவியிருக்கிறார்.


அழகான கையெழுத்தோடு நிறைவான கண்கவர் சித்திரமும் வரையும் ஆற்றல் பெற்றவர். தனது குடும்பத்துக்காகவே இறுதிவரை வாழ்ந்தவர். அன்னாரின் பாவங்களை மன்னித்து நிறைவான கூலியை வழங்கி கௌரவிப்பானாக.


துல் ஹிஜ்ஜா மாத இறுதியில் திங்கள் தினத்தில் அடியார்கள் குறித்த பட்டோலை அலசப்படும் நாளில் பூரண திருப்தியோடு அன்னாரை ஏற்றுக்கொள்வாயாக.


அவரது கல்விப்பணிகளை ஏற்று மண்ணறையை ஒளியூட்டி சுவனப்பூஞ்சோலையாக ஆக்குவாயாக.


 MMA Bisthamy

01/06/2026

No comments

Powered by Blogger.