எனக்கு பெரும் ஆச்சரியமாக இருந்தது
அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க,
“ இந்த பகுதியை சேர்ந்த ஒருவர் அமைச்சர் ஆனதால் விஞ்ஞான ஆய்வு இல்லாமல் ஒலுவில் துறைமுகம் கொண்டு வரப்பட்டது; அதன் விளைவாக கடலரிப்பு அதிகரித்துள்ளது” என்ற கருத்துப்பட கூறியிருந்தார். இந்த கருத்து முஸ்லிம் சமூகத்திலும், குறிப்பாக மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் அரசியல் பாரம்பரியத்தை மதிக்கும் மக்களிடையிலும் பல்வேறு வாதப் பிரதிவாதங்களையும் கவலைகளையும் தோற்றுவித்துள்ளன.
உண்மையில் ஜனாதிபதி அவர்களுக்கு ஒலுவில் துறைமுகத்தின் முழுமையான வரலாறும் அதன் பின்னணியும் சரியாக அறிந்திருக்காமல் இருக்கலாம் என நான் கருதுகின்றேன். ஏனெனில், மறைந்த பெருந்தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் ஒலுவில் பகுதியில் துறைமுகம் அமைப்பது குறித்து சிந்தித்திருந்தாலும், அது விஞ்ஞான ரீதியாக சாத்தியமானதா, மக்கள் பயன்பாட்டுக்கு உகந்ததா, எதிர்காலத்தில் பாதிப்புகளை ஏற்படுத்துமா என்பதனை ஆய்வு செய்த பின்னரே அதற்கான இறுதி முடிவை எடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்.
ஒலுவில் துறைமுகம் சம்பந்தமான முதல்கட்ட சாத்தியவள அறிக்கை சாதகமாக வராததால் துறைமுகத்துக்கான உட்கட்டமைப்பு அலைத்தடுப்பு அணை (Breakwater) வேலைத்திட்டத்தை அவர் ஆரம்பிக்க வில்லை. அதற்கு பதிலாக இந்த பிராந்திய இளைஞர், யுவதிகளின் தொழிநுட்ப அறிவை பெற துறைமுக அதிகார சபையின் மஹாபொல தொழிநுட்ப கல்லூரியை நிறுவினார். மீனவ நலனுக்காக ஒலுவில் வெளிச்சவீட்டை நிறுவினார். கிழக்குக்கு வரும் அமைச்சர்கள் தங்க தங்குமிட விடுதியை நிறுவினார். இவ்வளவும் தான் துறைமுகம் அமைச்சராக அவருடைய பணியாக இருந்து.
அவருடன் நெருக்கமாக பணியாற்றியவர்களும், ஒலுவில் பிரதேச புத்திஜீவிகளும், பள்ளிவாசல் நிர்வாகிகளும் இதனை நன்கு அறிவார்கள். அவர் உயிருடன் இருந்த காலப்பகுதியில் ஒலுவில் துறைமுகத் திட்டத்தை நடைமுறைப்படுத்த எந்த ஆரம்ப நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பது வரலாற்று உண்மை.
அவர் நினைத்திருந்தால் துறைமுக அதிகார சபையின் நிதியை பயன்படுத்தி திட்டத்தை ஆரம்பித்திருக்க முடியும். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. அதற்கு பதிலாக திருகோணமலையில் “அஷ்ரப் டெர்மினல்” என அறியப்படும் புதிய Terminal ஒன்றை பல பில்லியன் ரூபாய் செலவில் உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தார். ஒலுவில் துறைமுகத் திட்டம் உண்மையில் 2008 ஆம் ஆண்டில் அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலேயே ஆரம்பிக்கப்பட்டது. எனவே இன்று உருவாகியுள்ள பிரச்சினைகளுக்கான பொறுப்பை மர்ஹூம் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் மீது சுமத்துவது வரலாற்று உண்மைகளுக்கு முரணானதாகும்.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்கள் ஜனாதிபதியாக வருமுன்பு பாராளுமன்றத்தில் (எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது) என்னிடம் பல சந்தர்ப்பங்களில் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களைப் பற்றி நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலப்பகுதியில் சிலாகித்து தலைவர் அஸ்ரப் பற்றிய உயர்ந்த மதிப்பை வெளிப்படுத்தி என்னிடம் பேசியிருக்கிறார். குறிப்பாக பாராளுமன்ற தேர்தல் முறையில் 12 வீதமாக இருந்த வெட்டுப்புள்ளியை ஐந்து வீத வெட்டுப்புள்ளியாக குறைத்தது அஸ்ரப் தான் என்பதையும் ஜே.வி.பி.யின் பாராளுமன்ற பிரவேசத்திற்கு தலைவர் அஸ்ரப் வழிவகுத்ததாக அவர் பலமுறை என்னிடம் கூறியிருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல், அவர் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த சமயத்தில் அம்பாறைக்கு பிரச்சார நடவடிக்கைகளுக்கு வருகை தந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் என்னிடம் தொலைபேசி மூலம் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் தொடர்பான பல விடயங்களை கேட்டறிந்துள்ளார். பல பொதுக்கூட்டங்களிலும் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் அரசியல் தொலைநோக்கையும் சமூகப்பணிகளையும் பாராட்டி பேசியுள்ளார். இப்படியான ஒருவர் அம்பாறை அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அவ்வாறு பேசியது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் உரிமைக்காகவும், அபிவிருத்திக்காகவும், முழுத்தேசத்தத்தின் அபிவிருத்திக்காகவும் தன்னலமின்றி பணியாற்றிய வரலாற்றுத் தலைவர். எனவே அவர்மீது சுமத்தப்படும் தவறான குற்றச்சாட்டுகளை நீக்க வேண்டிய பொறுப்பு அனைத்து முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கும் உள்ளது. குறிப்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட முஸ்லிம் கட்சித் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து ஜனாதிபதியை சந்தித்து இவ்விடயத்தின் உண்மை நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என இந்த சந்தர்ப்பத்தில் வலியுறுத்த விரும்புகின்றேன்.
சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ்

Post a Comment