Header Ads



காதி நீதிமன்றத்தையும், பலதார திருமணத்தையும் இல்லாமல் செய்யவும் - ஞானசாரரிடம் கோரிக்கை (முழு விபரம்)


காதி நீதிமன்றத்தை இல்லாதொழிப்பதற்கான பரிந்துரைகளை முன்வைக்குமாறு, மேல்நீதிமன்றத்தின் முன்னாள் பதிவாளரான மொஹமட் சுபைர் என்பவர், ஒரே நாடு, ஒரே சட்டத்துக்கான ஜனாதிபதிச் செயலணியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

முஸ்லிம் பெண்களுக்கு நீண்டகாலமாக இழைக்கப்பட்டு வரும் அநியாயத்தைக் கருத்திற்கொண்டே தான் இந்த வேண்டுகோளை முன்வைப்பதாகவும் மொஹமட் சுபைர் தெரிவித்துள்ளார். 

ஒரே நாடு, ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதிச் செயலணியின் கருத்து சேகரிக்கும் நடவடிக்கை, கண்டி மாவட்டச் செயலகத்தில் நேற்று (26) இடம்பெற்ற போதே, அவர் அங்கு வருகை தந்து இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். 

தனிப்பட்ட ரீதியில் தனது கருத்துக்களை முன்வைப்பதற்காகவே தான் இங்கு வந்ததாகத் தெரிவித்த சுபைர் அவர்கள், நீதிமன்றத் துறையில் தனது 40 வருடகாலச் சேவையின் போது கண்ட வருந்தத்தக்க அனுபவங்களை நினைவிற்கொண்டே இந்தக் கோரிக்கையை முன்வைப்பதாகக் கூறினார். 

பல்வேறு தன்னார்வ அமைப்புகள், வெவ்வேறு இனக் குழுக்கள், தொழிற்றுறையினர் அமைப்புகள் உள்ளிட்ட சாதாரண பொதுமக்களும் இங்கு வருகை தந்து, செயலணி முன்னால் கருத்துக்கள் மற்றும் யோசனைகளை முன்வைத்தனர். 

முஸ்லிம் விவாகம் மற்றும் விவாகரத்துச் சட்டம் மற்றும் பலதார மணம் போன்றே மதத்தைப் பல பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு அமைப்புகளை நிறுவுதல் போன்ற நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்த வேண்டுமென்றும், ஜனாதிபதிச் செயலணியின் முன் சுபைர் அவர்கள் சுட்டிக்காட்டினார். 

காதி நீதிமன்றங்களில் பெரும்பாலான சந்தர்ப்பங்களில், நீதிபதியல்லாத காதி ஒருவர் முன்னிலையிலேயே வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன. அந்தக் காதியினால், சட்டத்துக்கு உட்பட்ட ஆவணங்கள் மற்றும் அவ்வாறல்லாத ஆவணங்களை அடையாளம் கண்டுகொள்ள முடியாத பல சந்தர்ப்பங்கள் காணப்பட்டுள்ளன. அதனால், சரியான புரிதலுடனும் பாரபட்சமின்றியும் சரியான தீர்ப்பை வழங்க முடியாத சந்தர்ப்பங்களைப் போன்றே, நீதிமன்றத் தீர்ப்புகள் அமுலாக்கப்படாத பல சந்தப்பங்களும் ஏற்பட்டுள்ளன. அதனால் இந்த நீதிமன்ற முறைமையை இல்லாதொழிப்பதால், பராமரிப்பு வழக்குகளின் போது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும்  பெற்றோருக்கும் நியாயத்தைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பு உள்ளதென்றும், மொஹமட் சுபைர் அவர்கள் எடுத்துரைத்தார். 

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தின் மூலம் சக்திவாய்ந்த சமூக மற்றும் சட்ட அநீதிகள் நடைபெறுகின்றன என்றும் எடுத்துக்காட்டிய சுபைர் அவர்கள், தற்போது காதி நீதிமன்றங்களுக்கு வரும் பராமரிப்பு வழக்குகளை, நீதவான் நீதிமன்றங்கள் ஊடாகவும் விவாகரத்துக்கான மாவட்ட நீதிமன்றங்கள் ஊடாகவும், நியாயமாகவும் பாரபட்சமின்றியும் தீர்த்துக்கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

பலதார மணம் செய்வதற்கான அனுமதியையும் இல்லாதொழிக்க வேண்டுமென்று குறிப்பிட்ட சுபைர் அவர்கள், அதற்கான காரணங்களைக் குர்ஆன் வசனங்களை முன்வைத்து விளக்கினார். 

மதம் பிரிக்கப்படக் கூடாது என்று குர்ஆனில் கூறப்பட்டுள்ளது எனத் தெரிவித்த சுபைர் அவர்கள், அதற்கான வாய்ப்புகளை அனுமதிப்பதானது, பல்வேறு தீவிரவாத அமைப்புகள் உருவாக வழிவகுக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

“ஒரே நாடு, ஒரே சட்டம்” என்ற கருத்தினை இலங்கையில் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பல்வேறு தரப்பினரின் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை ஆராய்ந்து பிரேரணைகளை முன்வைப்பது சங்கைக்குரிய கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான ஜனாதிபதி செயலணிக்கு வழங்கப்பட்ட பொறுப்பாகும். 

இதற்கு முன்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் செய்து, அந்த மாகாணங்களில் வசிக்கும் மக்களின் கருத்துக்களையும் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகள் மற்றும் தனிநபர்களின் கருத்துகளையும் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்  அமைந்துள்ள அலுவலகத்தில் வைத்து அச்செயலணி கேட்டறிந்துகொண்டது. 

மத்திய மாகாண மக்களின் கருத்துகளைக் கேட்டறியும் பணி, இன்றைய தினம் (27) நுவரெலியா மாவட்டச் செயலகத்தில் முன்னெடுக்கப்பட்டது. 

குழுவின் முன் கருத்து தெரிவிக்க விரும்பும் எவரும் கீழே உள்ள தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொண்டு, அதற்கான திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்து கொள்ளலாம். பின்வரும் முகவரிக்குத் தபால் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ கருத்துக்களைத் தெரிவிக்க முடியும் என குழுவின் செயலாளர், ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் திருமதி ஜீவந்தி சேனாநாயக்க தெரிவித்தார். 

குழுவின் உறுப்பினர்களான பேராசிரியர் ஷாந்தி நந்தன விஜேசிங்க, சிரேஷ்ட விரிவுரையாளர் சுமேத வீரவர்தன, சட்டத்தரணி சஞ்சய மாரம்பே மற்றும் பானி வேவல ஆகியோரும் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டிருந்தனர். 

தொலைபேசி இலக்கம் - 011 2691775, 

முகவரி -     அறை இலக்கம் 3G-19,

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம், பௌத்தலோக  மாவத்தை, 

கொழும்பு - 07. 

மின்னஞ்சல் - ocol.consultations@gmail.com

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

27.12.2021

5 comments:

  1. What a nice Munafeeq of Our Society.... Taking the help of Terror MONK of LK....

    ReplyDelete
  2. மக்களின் கடும் உழைப்பினால் பெறப்பட்ட 40, 50 இலட்சம் ருபா பணத்தினை செலவழிக்குமுகமாக நிறுவப்பட்டதே ஞானசாரர் தலைமையிலான இந்த செயலணியாகும். இதுவரை முஸ்லிம்கள் பற்றியே இவ்வணியினால் பேசப்பட்டு (தாக்கப்பட்டு) வருகின்றது. இனிமேலும் பேசப்படும். நாட்டிற்கு தேவையில்லாத சுமை அதுவும் பெரும் சுமை இச்செயலணியாகும். இவற்றையெல்லாம் விட்டுவிட்டு ஒரேயடியில் முஸ்லிம்களை வீழ்த்துமுகமாக சட்டங்களை இயற்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்றினாலும் யாரும் கேட்கப்போவதில்லை. செலவும் மிகக் குறையும். பல தசாப்தங்களுக்கு முன்னர வெளியாகிய "வீரபாண்டிய கட்டபொம்மன்" என்ற தமிழ்ப்படம் ஒன்றினைப் பார்த்த ஞாபகம் இருக்கின்றது. பல தமிழ்ப் பேசும் வாசகர்களும் பார்த்திருப்பர். அதில் வரும் வெள்ளைக்காரத்துரை கட்டபொம்மனிடம் இவ்வாறு கூறுகின்றார். "குற்றவாளியாகிய நீ ஏதேனும் சமாதானம் கூறி குற்றத்தை குறைத்துக் கொள்ளப் பார். நாங்கள் ஒரு நாயைக் கொல்வதானாலும் சட்டப்படி குற்றம் காணாமல் கொல்லமாட்டோம். We believe in the rule of law ----------"

    ReplyDelete
  3. தவறுகளைத் திருத்திக் கொள்ள தமக்கிருந்த வாய்ப்புக்களைத் தவற விட்ட ஒரு சமூகத்தின் அவலம்.

    ReplyDelete
  4. திருந்தாத சமூகம்

    ReplyDelete

Powered by Blogger.