Header Ads



அந்நியச் செலாவணியை ரூபாவாக மாற்றுவது தொடர்பான வர்த்தமானியை இரத்தாக்குமாறு மனு தாக்கல்


வௌிநாடுகளில் இருந்து அனுப்பப்படுகின்ற அந்நியச் செலாவணியை ( Forex Reserve) ரூபாவாக மாற்றுவதை கட்டாயமாக்கி மத்திய வங்கி ஆளுநர் விடுத்த வர்த்தமானியை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (14) எழுத்தாணை மனு தாக்கல் செய்தது.

சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், உப தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தேகொட ஆகியோர் சார்பில் சட்டத்தரணி ஜி.ஜி. அருள்பிரகாசம் இந்த மனுவை தாக்கல் செய்தார்.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோரது பெயர்களும் மத்திய வங்கியின் நாணய சபையும் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.

அந்நியச் செலாவணியை இலங்கை ரூபாவிற்கு மாற்றுவது தொடர்பிலான ஏற்பாடுகளும் விதிமுறைகளும் தாம் உள்ளிட்ட சட்டத்தரணிகள் இதுவரை அனுபவித்து வந்த சிறப்புரிமைகளை மீறுவதாக அமைந்துள்ளதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சட்டத்துறையில் பணியாற்றுவோர் வௌிநாடுகளில் உள்ள தமது சேவை பெறுநர்களிடம் பெற்றுக்கொள்ளும் கட்டணங்களை, அந்நியச் செலாவணியாக பெற்றுக்கொள்வதற்கோ அல்லது வங்கிக் கணக்கில் வைப்பிலிடுவதற்கோ இதுவரை காலம் இருந்த சந்தர்ப்பம் புதிய விதிமுறையினால் அற்றுப்போயுள்ளதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, குறித்த வர்த்தமானி அரசியலமைப்பிற்கும் இயற்கை நியதிக் கோட்பாட்டிற்கும் முரணானது என தீர்ப்பளிக்குமாறு மனுதாரர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments

Powered by Blogger.