Header Ads



சஜித்தின் ‘மூச்சு’ திட்டத்தைக் கண்டு கவரப்பட்ட சீனா - 196 இலட்சத்தை அள்ளிக்கொடுத்தது


நாட்டில் உள்ள வைத்தியசாலைகளின் சுகாதார நலன்களை மேம்படுத்தும் நோக்கில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் எண்ணக்கருவின் பிரகாரம் அமைந்த ‘ஐக்கிய மக்கள் சக்தியின் மூச்சு’ நிகழ்ச்சித் திட்டத்திற்கு தனது நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவித்த வன்னம் சீன அரசாங்கம் இராஜதந்திர மட்டத்தில் இத்திட்டத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியது.

இதன் பிரகாரம்,சிறுநீரகம் தொடர்பான நோய்களுக்கான பரிசோதனைக்கு அத்தியாவசியமான சிறு நீரக டயலிசிஸ்(Kidney Dialysis Machine) இயந்திரத்திற்காக சீன அரசு இன்று (22) நூற்று தொண்ணூற்று ஆறு இலட்சம் ரூபா பெருமதியான நிதியுதவியை வழங்கியது.

கொழும்பில் உள்ள சீனத் தூதுவர்  கீ.சென்ஹோங் உள்ளிட்ட சீன தூதுக்குழுவினர்களால் இன்று (22) கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்து இந்த நன்கொடை வழங்கி வைக்கப்பட்டது.

இது முழுக்க முழுக்க கடனாக இல்லாது நன்கொடையாகவே வழங்கப்பட்டது என சீன பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இந்த உதவியைப் பெறுவது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சீனாவுடனான கலந்துரையாடலின் போது, தமது நாட்டுப் பிரஜைகளுக்காக கடனுக்குப் பதிலாக நன்கொடைகளை வழங்க வேண்டியதன் அவசியத்தையே அவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.

இத்திட்டத்தின் வெளிப்படைத் தன்மையால் தாம் ஈர்க்கப்பட்டதாகவும் இதனாலயே குறித்த நன்கொடையை வழங்குவதாகவும் சீன தூதுவர் இதன் போது தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் எண்ணக்கருவின் பிரகாரம் செயற்ப்படுத்தப்படும் “ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து மூச்சு”திட்டத்திற்கு இணைவாக ஆரோக்கியமான நாட்டை உருவாக்கும் நோக்கில் 'ஜன சுவய' திட்டத்தின் கீழ் “சத்காரய” நிகழ்ச்சித் திட்டங்கள் இது வரை 34 கட்டங்கள் வரை இடம் பெற்றுள்ளன.

இதன் மூலம் மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் மருத்துவமனைகளுக்கு அத்தியாவசிய மருத்துவமனை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதோடு,குறித்த செயற்பாடுகள் முறையாகவும் உகந்ததாகவும் முன்னெடுக்கப்படுவதை தாம் அவதானித்துள்ளதாகவும் கொழும்பிலுள்ள சீனத் தூதுவர் கீ.சென்ஹோங் தெரிவித்தார்.

சீன அரசாங்கம் இது தொடர்பில் அவதானம் செலுத்தி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் கலந்துரையாடி இந்த நன்கொடையை வழங்க தீர்மானித்திருந்தது.

இந்நாட்டு மக்களின் நலனுக்காகவும், சுகாதார மேம்பாட்டிற்காகவும் சீனா ஆற்றிவரும் இந்த பங்களிப்புக்கு இலங்கை சார்பில் நன்றி தெரிவிப்பதாக கூறிய எதிர்க்கட்சித் தலைவர்,ஒரு சம்பிரதாய எதிர்க்கட்சியின் வகிபாகத்தில் இருந்து விலகி நாட்டிற்கு பெறுமானம் சேர்க்கும் இராஜதந்திர அர்ப்பணிப்புக்கு ஐக்கிய மக்கள் சக்தி ஒரு எடுத்துக்காட்டு என்றும் அவர் கூறினார்.

வரலாற்றில் எந்தவொரு எதிர்க்கட்சியும் மேற்கொள்ளாத பல அபிவிருத்திப் பணிகளை அதிகாரம் இல்லாவிட்டாலும் தமது கட்சியால் முன்னெடுக்க முடிந்ததாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,அரசியலுக்கு பதிலாக தேசத்திற்கான சேவையையே தான் மேற்கொள்வதாகவும் கூறினார்.

கொரோனா பெருந்தொற்று காரணத்தால் பாதிப்புக்குள்ளாகியுள்ள மக்களுக்கு சுகாதார ரீதியாக நிவாரணங்களை வழங்கும் பொருட்டு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் குழு, அமைப்பாளர்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் வெளிநாட்டுக் கிளைகள், உள்நாட்டு வெளிநாட்டு ஆதரவாளர்கள் "ஜன சுவய" கருத்திட்டத்தில் இணைந்து கொண்டு  'எதிர்க்கட்சியின் மூச்சு" நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றனர்.

இது வரை 34 கட்டங்களில் 1016 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதி வாய்ந்த மருத்துவமனை உபகரணங்களை ஐக்கிய மக்கள் சக்தியால் வழங்க முடிந்துள்ளது.

1 comment:

Powered by Blogger.