Header Ads



நாட்டைச் சுற்றி வந்து கொண்டிருக்கும் மலக் கப்பல் - எதிர்கட்சி தலைவர்


தைரியமான தலைமையும் அரசியல் ஸ்திரத்தன்மையும் இருப்பதாக வரவுசெலவுத் திட்டத்தின் போது கூறினாலும் ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு கிட்டத்தட்ட ஒரு மலக்கப்பல் நாட்டைச் சுற்றி வந்து கொண்டிருப்பதாகவும் இதனை தடுக்க முடியாத அரசாங்கம் எவ்வாறு ஒரு தைரியமான அரசாங்கமாக இருக்கும் என எதிர்கட்சி தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கலாநிதி தனவர்தன குருகே உத்தியோகபூர்வமாக ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொள்ளல் மற்றும் அங்கத்துவ ஊக்குவிப்பு நிகழ்ச்சி இன்று (15) குருகே நேட்சர் பூங்காவில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்றது.இந் நிகழ்வில் பங்கேற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிரபல வர்த்தகர்,சமூக சேவகர்,தொழில்சார் வல்லுநர் மற்றும் எழுத்தாளரான திரு.தனவர்தன குருகே,ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினராகவும்,தொழில் வல்லுநர்கள் மன்றத்தின் உறுப்பினராகவும்,பௌத்த மத விவகாரங்களுக்கான ஆலோசகராகவும் எதிர்க்கட்சித் தலைவரின் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந் நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாட்டுப் பிரதானி ஹரின் பெர்னாண்டோ,நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன மற்றும் பிரதேச மக்கள் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

மக்களால் வாழ முடியுமான வலுவான வரவு செலவுத் திட்டமொன்றையே நாட்டு மக்கள் எதிர்பார்த்ததாகவும், வெளியிடப்பட்டுள்ளது  வெற்று ஆவணமே என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்டத்தை கொண்டு வருவதற்கு முன் அரசாங்கம் தற்போதைய நிதியமைச்சரிடம் "புதையல்" உள்ளது என்று கூறியது. அவரிடம் "அலாவுதீனின் அற்புத விளக்கு" இருப்பதாக கூறியது. அற்புதமான ஒரு வரவு செலவுத் திட்டத்தை கொண்டுவருவதாகவே கூறினர்.வரவு செலவுத் திட்டம் காரணமாக எதிர்க்கட்சிகள் கலக்கமடைந்து விடுவதாகவும் கூறினர். எவ்வாறாயினும், சமர்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் முழு நாட்டுக்கும் நன்மை பயக்கும் வகையில் அமையாத ஒரு வரவு செலவுத் திட்டம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அபிவிருத்தியடைந்த நாடுகளில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தைப் போன்று எமது நாட்டிலும் மக்களின் வாழ்க்கைத் தரம் சிறப்பாக உள்ளதாக தனது வரவு செலவுத் திட்ட உரையில் அமைச்சர் தெரிவித்த போதிலும் அது அப்படியல்ல எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், ஊட்டச்சத்து குறைபாட்டால் சிறு குழந்தைகள் வாழும் நாட்டில்,இணைய வசதிகள் இல்லாமல் குழந்தைகள் பெருமூச்சு விடும் நாட்டில், மூன்று வேளையில் ஒரு வேளையேனும் சாப்பிடுவதற்குக் கூட வருமானம் இல்லாத நாட்டில், வரவு செலவுத் திட்ட உரை கற்பனை உலகத்தை உருவாக்கும் ஒன்றாக உள்ளதாக அவர் கூறினார்.

அதி சிறந்த சர்வதேச உறவுகளையும் அணிசேரா வெளியுறவுக் கொள்கையையும் கொண்டிருப்பதாக அரசாங்கம் பெருமை பேசினாலும், நாட்டின் தேசிய வளங்கள் நாளுக்கு நாள் அற்ப விலைக்கு விற்கப்படுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாட்டின் வளங்களை கொள்ளையர்களுக்கு விற்கும் அரசாங்கம் இரகசியமாக உடன்படிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

புதிய தொழி நுட்பத்துடன் விவசாயத்திற்கு புது உத்வேகம் கொடுத்துள்ளதாக வரவு செலவுத் திட்டத்தின் மூலம் கூறினாலும், தரமற்ற உரத்தை நாட்டுக்குள் கொண்டு வந்து நிறுவனங்களிடம் மண்டியிட்டது யார் என எதிர்க்கட்சித் தலைவர் வினவினார்.

No comments

Powered by Blogger.