Header Ads



தடுப்பூசியைப் பெறாதவர்கள் 'மனித வெடிகுண்டாகவே' தொழிற்படுகின்றோம் என புரிந்துகொள்ளவேண்டும்


கொவிட் - 19 தடுப்பூசியைப் பெறுவதால் கருவுறமுடியாது அல்லது பாலியல் ரீதியான சிக்கல்கள் ஏற்படலாம் என்ற எவ்வித அடிப்படைகளுமற்ற நிலைப்பாடுகளினால் பல இளைஞர், யுவதிகள் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாமல் இருக்கின்றார்கள்.

இத்தகைய தவறான நிலைப்பாடுகளினால் தடுப்பூசியைப் பெறாமல் இருக்கும் எந்தவொரு நபரும் தாம் 'மனித வெடிகுண்டாகவே' தொழிற்படுகின்றோம் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

ஏனெனில் அவர் எந்தவொரு தருணத்திலும் கொவிட் - 19 வைரஸ் தொற்றுக்குள்ளாகும் அச்சுறுத்தலில் இருப்பதுடன் அதன் காவியாகவும் தொழிற்படுவார் என்று விசேட வைத்தியநிபுணர் பிரியங்கர ஜயவர்த்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகவே நாடளாவிய ரீதியில் தடுப்பூசி வழங்கப்படும் வயதுப்பிரிவில் உள்ளடங்குகின்ற அனைவரும் தமது நலனையும் சமுதாயத்தின் நலனையும் கருத்திற்கொண்டு விரைவில் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

'நிச்சயமாக வசந்தம் உதயமாகும்' என்ற தலைப்பில் ஊடக அமைச்சுடன் இணைந்து இலங்கை இலத்திரனியல் ஊடக அமையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் நிகழ்வில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

முதற்தடவை கொவிட் - 19 வைரஸ் தொற்றுக்குள்ளாகும் ஒருவர் அதனால் தீவிரமாக நோய்வாய்ப்படும் நிலைக்குள்ளானால், அவர் தொற்றிலிருந்து முழுமையாகக் குணமடைந்ததன் பின்னரும் இளைப்பு, சுவாசிப்பதில் கடினத்தன்மை போன்ற அறிகுறிகள் (கொவிட் - 19 இற்குப் பின்னரான அறிகுறிகள்) காணப்படலாம்.

அதேவேளை தொற்றுக்குள்ளான வேளையில் தீவிர பாதிப்புக்களை எதிர்கொள்ளாதவர்களில் பெரும்பாலானோர் அதிலிருந்து முழுமையாகக் குணமடைந்ததன் பின்னர் சுமார் இருவாரங்கள் வரையில் தலைவலி, வாந்தி, உணவு உட்கொள்வதில் விருப்பமின்மை போன்ற பல்வேறு அறிகுறிகள் தென்படுவதாகக் கூறுகின்றனர். இருப்பினும் இக்காலப்பகுதியில் தமக்கு பாரதூரமாக ஏதேனும் நேர்ந்துவிடும் என்று வீணாக அச்சமடைவதைத் தவிர்த்துக்கொள்ளவேண்டும். அதன் தொடர்ச்சியாக அநாவசியமான பரிசோதனைகளை மேற்கொள்வதையும் தவிர்க்கவேண்டும்.

அடுத்ததாக பலர் மத்தியிலும் தடுப்பூசி தொடர்பான தவறான அபிப்பிராயங்கள் காணப்படுகின்றன. தடுப்பூசியைப் பெறுவதால் கருவுறமுடியாது என்றும் பாலியல் ரீதியான சிக்கல்கள் உருவாகலாம் என்றும் சில இளைஞர், யுவதிகள் கருதுகின்றனர். ஆனால் இத்தகைய போலியான நம்பிக்கைகள் எவ்வித அடிப்படைகளும் அற்றவையாகும். அத்தகைய தவறான நிலைப்பாடுகளினால் தடுப்பூசியைப் பெறாமல் இருக்கக்கூடிய எந்தவொரு நபரும் தாம் 'மனித வெடிகுண்டாகவே' தொழிற்படுகின்றோம் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

ஏனெனில் அவர் எந்தவொரு தருணத்திலும் கொவிட் - 19 வைரஸ் தொற்றுக்குள்ளாகும் அச்சுறுத்தலில் இருப்பதுடன் அதன் காவியாகவும் தொழிற்படக்கூடிய நிலையிலிருப்பார். ஆகவே நாடளாவிய ரீதியில் தடுப்பூசி வழங்கப்படும் வயதுப்பிரிவில் உள்ளடங்குகின்ற அனைவரும் தமது நலனையும் சமுதாயத்தின் நலனையும் கருத்திற்கொண்டு விரைவில் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தினார்.

- வீரகேசரி,  நா.தனுஜா


No comments

Powered by Blogger.