August 10, 2021

பெற்றோருக்கு எதிராக தீர்மானம் - கொட்டகலை பிரதேச சபையில் விசித்திரம்


18 வயதுக்குக் குறைந்த சிறுவர்களை வீடுகளுக்கோ அல்லது கடைகளுக்கோ வேலைக்கு அனுப்பி வைக்கும் பெற்றோருக்கு எதிராகவும், அவர்களை வேலைக்கு அமர்த்துகின்றவர்களுக்கு எதிராகவும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதென கொட்டகலை பிரதேச சபையில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

கொட்டகலை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று (10) கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் தலைவர் ராஜமணி பரசாத்தலைமையில் நடைபெற்றது. 

இந்த கூட்டத்திற்கு 16 உறப்பினர்களும் சமூகமளித்திருந்தார்கள். இதில் தலைவர் ராஜமணி பிரசாந்த் கொண்டு வந்த சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு எதிரான பிரேரணை உறுப்பினர்களால் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. 

அவர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், 

எமது நாட்டில் 14 வயது வரை கட்டாயக் கல்வி பெற வேண்டும் என்று சட்டம் இருந்தாலும் அதை உரிய முறையில் அமுல் படுத்தாமல் இருப்பதால் தான் அண்மையில் மலையகத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் கொழும்பில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இன்னும் வெளியில் வராத உண்மைகள் எத்தனையோ இருக்கலாம். 

எனினும், இனிமேல் இத்தகைய சம்பவங்கள் நிகழாமல் இருப்பதற்கு இந்தச் சிறுமியின் மரணம் எல்லோருக்கும் படிப்பினையை ஏற்படுத்தியுள்ளது. நாம் நீதி கோரி ஆர்ப்பாட்டங்கள் செய்வதோடு மாத்திரம் நின்று விடாமல் எமது சமூகத்தின் பொறுப்பை உணர்ந்து விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டியது அவசியமாகும். 

மலையக மாணவர்கள் கல்வியறிவைப் பெற வேண்டும் என்பதற்காக அமரர்களான சௌமமூர்த்தி தொண்டமான், ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் பாடசாலைகளுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுப்பதில் மிகவும் கவனம் செலுத்தி வந்தார்கள். 

இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானும் அக்கறை காட்டி வருகின்றார். இருந்தும் எமது பெற்றோர்கள் தமது வறுமை நிலையை காரணம் காட்டி பிள்ளைகளை வெளியிடங்களுக்கு வேலைக்கு அனுப்பி வைக்கும் கலாசாரத்தைக் கட்டுபடுத்த முடியாமல் உள்ளது. 

எமக்குக் கிடைக்கின்ற செல்வத்திலேயே மிகச் சிறந்த செல்வம் குழந்தைச் செல்வமாகும். அதை இழந்து விட்டால் மீண்டும் பெற முடியாது என்பதை உணர்ந்து அவர்களின் கல்வியில் கரிசனை காட்ட ஒவ்வொருவரும் உறுதி பூண வேண்டும். 

அந்த வகையில் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது பிரதேச சபையின் கடமையாகும். எனவே, சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவோருக்கு எதிராகவும், அதற்கு உடந்தையாக இருப்போருக்கு எதிராகவும் கடுமையான சட்ட நடவடிக்கை கொட்டகலை எடுக்க பிரதேச சபை ஏற்பாடுகளைச் செய்துள்ளது. 

மேலும் கொவிட் 19 தோற்று வேகமாகப் பரவி வருவதால் தடுப்பூசி ஏற்றுவதில் அரசாங்கம் கூடுதலான அக்கறை செலுத்தி வருகின்றது. 

எமது பிரதேச சபைக்கு உட்பட்ட 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது போல, 30 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி பெற்றுக் கொள்வதில் மிகவும் ஆர்வம் குறைந்தவர்களாக காணப்படுகின்றார்கள். அவரவர் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதோடு, சமூகத்தின் நலனைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். 

இது தொடர்பான விழிப்புணர்வு வேலைத் திட்டம் கொட்டகலை பிரதேச சபையின் ஊடாக மேற்கொள்ளப்படும். அத்தோடு, விசேட உதவி தேவைப்படுவோர் தடுப்பூசி பெற்றுக் கொள்வதற்கு வசதியாக பிரதேச சபையின் ஊடாக போக்குவரத்து வசதிகளைச் செய்து கொடுக்கவும் தயாராக இருகின்றோம். 

கொமர்சல் பிரதேசத்தை அண்டியுள்ள பிள்ளைகள் கல்வி கற்பதற்கு வசதியாக ஆரம்பப் பாடசாலை ஒன்றை அமைப்பதற்கு மத்திய மாகாண ஆளுநர் அனுமதி வழங்கியுள்ளார். விரைவில் பணிகள் ஆரம்பமாகவுள்ளன. 

சுமார் 4 மில்லியன் ரூபா செலவில் எமது பிரதேசத்தில் குடிநீர், பாதை அபிவிருத்தி, வடிகால் அமைப்பு போன்றவை மேற்கொள்ளப்படவுள்ளன. இவை தவிர, உள்ளூராட்சி அமைச்சின் ஊடாக 2022 ஆம் ஆண்டு நடைமுறைப் படுத்துவதற்கான சுமார் 100 மில்லியன் ரூபாவுக்கான வேலைத் திட்டங்கள் தொடர்பான முன்மொழிவுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

அதேபோல், மலையகத்தில் மது பாவனையைக் கட்டுப் படுத்துவதற்கான பிரசாரங்களும் மேற்கொள்ளப்படும் என்றார். 

-மலையக நிருபர் சுந்தரலிங்கம்-

1 கருத்துரைகள்:

Ithu Enna Visithiram? Enna Thalaippu ithu?

Post a Comment