Header Ads



ஜனாதிபதியின் பங்கேற்புடன் அரச பொசன் விழா - மிஹிந்தலை ஒளியேற்றப்பட்டது


அரச பொசன் விழா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பங்கேற்புடன், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மிஹிந்தலை புண்ணிய பூமியில் இன்று (24) இடம்பெற்றது. 

இவ்வருட பொசன் நோன்மதித் தினத்துடன், மஹிந்த தேரர் இலங்கைக்கு வருகைத் தந்து 2329 வருடங்கள் நிறைவடைகின்றன. “உலகவாழ் அனைத்து மக்களுக்கும் நலம் கிட்டும்” என்பதே இவ்வருட அரச பொசன் விழாவின் கருப்பொருளாகும். 

மிஹிந்தலை புண்ணிய பூமியை மையமாகக் கொண்டு, 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை இடம்பெறும் பொசன் வாரத்தில், ரத்னசூத்திர உரை, சமய உரைகள், கலந்துரையாடல்கள் உள்ளிட்ட பல்வேறு சமய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

மிஹிந்தலை புண்ணிய பூமிக்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்கள், புனித தந்தத்தை வழிபட்டு ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார். மிஹிந்தலை ரஜமகா விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய வலவா ஹெங்குன வெவே தம்மரத்ன நாயக்க தேரரினால் அரச பொசன் விழா பற்றிய உரை நிகழ்த்தப்பட்டது.

அரச பொசன் விழாவுடன் இணைந்ததாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மிஹிந்தலை ஒளி விளக்கு பூஜையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆரம்பித்து வைத்தார். 

லேக் ஹவுஸ் நிறுவனத்தினதும் இலங்கை மின்சார சபையினதும் இணை அனுசரணையில் 59ஆவது தடவையாக இந்த புண்ணிய நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

ஜனாதிபதி ஊடகப் பிரிவு  2021.06.24

No comments

Powered by Blogger.