May 24, 2021

பாயிஸ் மரணம், கைதான மூவரில் இருவர் விடுவிப்பு - புத்தளம் முழுவதும் சோகம், சிங்கள அரசியல்வாதிகளும் வீட்டுக்கு சென்று துக்கம் தெரிவிப்பு


(எம்.எப்.எம்.பஸீர்)

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், பிரதி அமைச்சரும் புத்தளம் நகர சபைத் தலைவருமான கே.ஏ.பாயிஸ் நேற்று (23.05.02021)  இடம்பெற்ற விபத்து ஒன்றில் சிக்கி காலமானார். மரணிக்கும் போது அவருக்கு வயது 52.

புத்தளத்தை அண்மித்த வனாத்துவில்லு பிரதேசத்திலுள்ள தனது தோட்டத்துக்கு நண்பர்களுடன் பொழுதைக் கழிக்கச் சென்ற அவர், இறால் மடு  குளத்தில்  குளித்துவிட்டு திரும்பும்போது,  குறுக்கு வீதியொன்றிலிருந்து எலுவன்குளம் பிரதான வீதிக்குள் பிரவேசிக்கும் போது  இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

திறந்த கெப் வண்டியின் பின்புறமாக அமர்ந்து பயணித்த அவர், வாகனத்திலிருந்து வெளியே வீசப்பட்டதாகவும் அதனால் அவரது முகத்திலும் தலையிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டதாகவும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் பொலிசாருக்கு வாக்குமூலமளித்துள்ளனர்.

எனினும் சம்பவம் இடம்பெற்ற சமயம் நகர பிதா கே.ஏ. பாயிஸுடன் பயணித்த அவரது சாரதி உள்ளிட்ட மூவரை பொலிசார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

சம்பவத்தில் காயமடைந்த கே.ஏ.பாயிஸ் உடனடியாக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது அவர் மரணித்துவிட்டதை வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் புத்தளம் மற்றும் வணாத்தவில்லு பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன் பி.சி.ஆர். மற்றும் பிரேத பரிசோதனைகளுக்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன.

இதனையடுத்து, நகர பிதா பாயிஸுடன் குறித்த கெப் வண்டியில் பயணித்திருந்த  சாரதி உள்ளிட்ட மூவரை வனாத்துவில்லு  பொலிஸார் இன்று  அதிகாலை கைது செய்தனர்.

புத்தளம் பிரதிப் பொலிஸ்  மா அதிபர் நிமல் பெரேரா மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜே.ஜி.எஸ். ஜயமஹ ஆகியோரின் மேற்பார்வை மற்றும் ஆலோசனைக்கு அமைய,  கைது செய்யப்பட்ட மூவரிடமும் வனாத்துவில்லு பொலிசாரும் புத்தளம் பொலிசாரும் விஷேட விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அத்துடன்  சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படும் இடமும், புத்தளம்  பொலிஸ் விஷேட தடயவியல் பிரிவினரால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், புத்தளம் நகர சபைக்கு சொந்தமான விபத்துடன் தொடர்புடைய கெப் ரக வாகனமும் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட மூவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு மேலதிகமாக சம்பவத்தை நேரில் கண்டவர்களின் வாக்கு மூலங்களையும் பொலிசார்  பதிவு செய்தனர். கைது செய்யப்பட்ட மூவரும் குடி போதையில் இருந்தமை மருத்துவ அறிக்கை ஊடாக உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் அனைத்து சாட்சியங்களையும் பகுப்பாய்வு செய்த பொலிஸார், பிரேத பரிசோதனை அறிக்கையினையும் ஒப்பீடுச் செய்து பார்த்தனர்.

இதன்போது, புத்தளம் நகர  பிதா பாயிஸ் கெப் வாகனத்தில் இருந்து விழுந்தமையால், தலையில் பலத்த காயத்துக்கு உள்ளானமையும் அதுவே  மரணத்தை ஏற்படுத்தியுள்ளமையும் தெரியவந்துள்ளது.

இந் நிலையில் குடிபோதையில் வாகனம் செலுத்தி ஒருவரின் மரணத்துக்கு காரணமாக இருந்தமை தொடர்பில்  கெப் சாரதி நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார். ஏனைய இருவரும் விசாரணைகளின் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சாரதியை எதிர்வரும்  28 ஆம் திகதிவரை  விளக்கமறியலில் வைக்க  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்றையதினம் பி.சி.ஆர். பரிசோதனையில் கொவிட் தொற்றில்லை என உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, பிரேத பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு நகர பிதா பாயிஸுஇன் ஜனாஸா உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

இன்று மாலை அவரது இல்லத்துக்கு கொண்டு வரப்பட்ட ஜனாஸா அங்கு உறவினர்களின் பார்வைக்காக மாத்திரம் வைக்கப்பட்டு, அங்கிருந்து புத்தளம் உள்ளக விளையாட்டரங்கிற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. பின்னர் அங்கேயே தொழுகையும் நடாத்தப்பட்டு இன்றிரவு 8 மணியளவில் புத்தளம் பகா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் உட்பட பிரமுகர்கள் பலரும் பாயிஸின் இல்லத்துக்கு விஜயம் செய்ததுடன் ஜனாஸா நல்லடக்கத்தில் கலந்து கொண்டனர். கொவிட் 19 கட்டுப்பாடுகள் காரணமாக பெருந்திரளானோர் ஜனாஸா நல்லடக்கத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.

இராஜாங்க அமைச்சர்களான அருந்திக பெர்ணான்டோ, சனத் நிஷாந்த உள்ளிட்ட அரசியல்வாதிகள் பலரும் இன்றையதினம் தினம் கே.ஏ.பாயிஸின் வீட்டுக்கு விஜயம் செய்து ஜனாஸாவை பார்வையிட்டனர்.

நாடளாவிய ரீதியிலான பயணத் தடை மற்றும் கொவிட் 19 சுகாதார கட்டுப்பாடுகள் காரணமாக வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பிரமுகர்களும் கட்சியின் ஆதரவாளர்களும் ஜனாஸாவைப் பார்வையிடவோ நல்லடக்கத்தில் கலந்து கொள்ளவோ வருகை தரவில்லை. இதேவேளை கட்சியின் ஆதரவாளர்களை ஜனாஸாவை பார்வையிடவோ நல்லடக்கத்தில் கலந்து கொள்ளவோ வர வேண்டாம் என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் வேண்டுகோள்விடுத்திருந்தார்.

மூன்று தடவைகள் அவர் உள்ளுராட்சி மன்ற தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டார். தனது அரசியல் அதிகாரங்களின் ஊடாக புத்தளம் மாவட்டத்தின் அபிவிருத்திக்கு கே.ஏ. பாயிஸ் பாரிய பங்களிப்பைச் செய்துள்ளார். இன, மத பேதமின்றி துணிச்சலுடன் சேவையாற்றிய அவரது மறைவையடைத்து புத்தளம் மாவட்டம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. அவரது மறைவு தொடர்பில் அரசியல் தலைவர் பலரும் அனுதாபச் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.

(வீரகேசரி)

3 கருத்துரைகள்:

அல்லல்பட்டு ஆறாது அழுத கண்ணீருடன் வந்த வடபகுதி முஸ்லிம்கள் அகதிகள் இளைப்பாறும் நிழலாக வாழ்ந்து சரிந்த ஆலமமே உன்னை பணிந்து அஞ்சலிக்கிறேன்.

Didn't Puttalam Municipality have any laws about passengers wearing seat belts while travelling? If so, while being the Mayor, why he broke the law of his own Municipality? It is an unfortunate and regrettable accident but part of the blame should go to the victim for not wearing the seat belt and travelling in a truck with a drunk driver.

Consuming alcohol and driving, Traveling during imposes striction time. rushing to hospital without considering COVID19. Very good example given to others

Post a Comment