Header Ads



தடுப்பூசி வழங்கலுக்கு டிஜிட்டல் அடையாள அட்டையை அறிமுகப்படுத்த நடவடிக்கை


மிகவும் செயற்திறன் மிகுந்த கொவிட் தடுப்பூசி வழங்கலுக்கு நவீன தொழில்நுட்பத்தில் டிஜிட்டல் அடையாள அட்டையை அறிமுகப்படுத்த இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு நடவடிக்கை

சுகாதார அமைச்சு மற்றும் தகவல் தொழில்நுட்ப மற்றும் தொடர்பாடல் நிறுவனத்துடன் (ICTA) மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் பிரதிபலனாக கொவிட் தடுப்பூசி ஏற்றலை மிகவும் செயற்திறன் மிகுந்ததாக்குவதற்கு எதிர்வரும் நாட்களில் நவீன தொழில்நுட்பத்திலான டிஜிட்டல் அடையாள அட்டையை பொதுமக்களுக்கு விநியோகிப்பதாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ நாமல் ராஜபக்ஷ அவர்கள் இன்று தெரிவித்தார்.

தடுப்பூசி வழங்கல் தொடர்பான தகவல்களை உள்ளடக்கிய இந்த புதிய டிஜிட்டல் அடையாள அட்டை ஊடாக ஒவ்வொரு நபருக்கும் அரசாங்கம் கொவிட் தடுப்பூசி வழங்கிய திகதி, இடம், நேரம் மற்றும் தடுப்பூசி வகை மற்றும் அது தொடர்பான தகவல்கள் மற்றும் இரண்டாவது தடுப்பூசி வழங்க வேண்டிய திகதி, இடம், நேரம் உள்ளிட்ட அத்தியவசிய தகவல்கள் பல நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக வெளிப்படுத்தப்படும் என கௌரவ அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தில் மக்களை மையமாகக் கொண்ட டிஜிட்டல் அரச அமைப்பு குறித்து தெளிவாக விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், இது முதன்முறையாக நடைமுறைக்கு கொண்டு வந்து தடுப்பூசி தொடர்பான தகவல்களை உள்ளடக்கிய புதிய டிஜிட்டல் அடையாள அட்டை மூலம் தொழில்நுட்பம் மற்றும் இணைய பயன்பாட்டினூடாக தடுப்பூசி தொடர்பான சிக்கல்களை தவிர்க்க எதிர்பார்க்கப்படுகிறது. 

டிஜிட்டல்மயமாக்கல் என்பது பொது சேவைகளை திறம்பட செய்வதற்கான எதிர்கால சந்ததியினரின் எதிர்பார்ப்பாகும்.

கொவிட் தடுப்பூசிக்காக வழங்கப்படும் புதிய டிஜிட்டல் அடையாள அட்டை குறித்து கௌரவ அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

தொற்று நிலைமையின் சிரமங்களை சமாளிக்க நாட்டின் மக்களின் நலனுக்காக புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த வேண்டும். இந்த நாட்டில் புதிய தலைமுறையினரின் நம்பிக்கை இதுதான். எனவே, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு நாட்டின் இளைஞர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொறுப்புள்ள அமைச்சு என்ற வகையில் இதனை ஆரம்பித்துள்ளது.

கொவிட் தொற்றுநோய் பரவலையும், நாட்டின் பொருளாதார மற்றும் சமூக ரீதியில் நாட்டை அபிவிருத்தி நோக்கி முன்னோக்கி கொண்டு செல்வதற்கான வழிமுறைகளை நாம் ஆராய வேண்டும்.

இதை உணர்ந்து, நாங்கள் சுகாதார அமைச்சு மற்றும் தகவல் தொழில்நுட்ப மற்றும் தொடர்பாடல் நிறுவனத்துடன் கலந்துரையாடினோம்.

கொவிட் பரவலைக் கட்டுப்படுத்தவும், கொவிட் தடுப்பூசியை வெற்றிகரமாக்குவதற்கும், பொதுமக்களின் வசதிக்காக தடுப்பூசி குறித்த தகவல்களைக் கொண்ட டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டது.

அதற்கமைய எதிர்வரும் நாட்களில் சுகாதார அமைச்சு மற்றும் தகவல் தொழில்நுட்ப மற்றும் தொடர்பாடல் நிறுவனம் எம்முடன் இணைந்து காவிட் தடுப்பூசி குறித்த தகவல்களை உள்ளடக்கிய இந்த புதிய டிஜிட்டல் அடையாள அட்டையை பொதுமக்களுக்கு வழங்க முடியும் என நான் எதிர்பார்க்கின்றேன்.

அத்துடன் தடுப்பூசி வழங்கலை செயற்திறன் மிகுந்ததாக்கும் மற்றும் துரிதமாக்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு தன்னிச்சையாக பங்களிக்குமாறு நாட்டின் மீது அன்பு கொண்ட இளைஞர் யுவதிகளிடம் நான் கேட்டுக்கொள்கிறேன். சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி தடுப்பூசி வழங்கும் இடத்தை அதற்காக தயார்ப்படுத்தல், பொது சுகாதார பரிசோதகர்களுக்கு தேவையான ஆதரவை பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகளின் ஊடாக எமக்கு இந்த வேலைத்திட்டத்திற்கு பங்களிப்பு செய்ய முடியும் என கௌரவ அமைச்சர் தெரிவித்தார்.

ஊடக பிரிவு

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு


No comments

Powered by Blogger.