Header Ads



7 நாட்களாவது நாட்டை முடக்கவும் - PHI


நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள தீவிர கொவிட் -19 வைரஸ் தொற்று நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டுமாயின் குறைந்தபட்சம் 7 நாட்களாவது நாட்டை முற்றாக முடக்க வேண்டுமென பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

“நாடு மிகவும் ஆபத்தான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. புத்தாண்டுக்கு முன்னர் தினமும் 250 கொவிட் நோயாளர்களே எமது நாட்டில் பதிவாகியிருந்தனர். ஆனால், கடந்த 27ஆம் திகதி முதல் தினமும் ஆயிரத்திற்கும் அதிகமான கொவிட் நோயாளர்கள் பதிவாகி வருகின்றனர். தொற்றாளர்களின் எண்ணிக்கை 70 சதவீதத்தால் உயர்வடைந்துள்ளது.

நாட்டை முடக்குவதற்கு தேவையான கோரிக்கைகளை சுகாதாரத்துறை சார்ப்பாக முன்வைத்துள்ளோம். பரவலை கட்டுப்படுத்தாவிடின் ஒரு வார காலத்தில் நெருக்கடியான நிலைமையை நாம் எதிர்கொள்ள வேண்டியேற்படும். ஆகவே, தொற்றாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர கட்டாயம் குறைந்தபட்சம் 7 நாட்களுக்காவது நாட்டை முடக்கியே ஆகவேண்டும்.

நாட்டை முடக்குவது தொடர்பில் இராணுவத் தளபதியுடன் நாம் கலந்துரையாடல்களை நடத்தினோம். என்றாலும் நாட்டை முற்றாக முடக்கினால் 60 சதவீதமாகவுள்ள குறைந்த வருமானம் பெறுபவர்கள் பாதிக்கப்படுவார்கள். அதிகளவான தொற்றாளர்கள் பதிவாகும் இடங்களை மாத்திரம் முற்றாக முடக்கி நிலைமையை கட்டுக்குள் கொண்டுவருவோமென அவர் கூறினார். அந்த நிலையில்தான் நாம் இப்போது பயணித்துக்கொண்டிருக்கிறோம்.

பொருளாதார நிலைமையை முகாமைத்துவம் செய்துக்கொண்டு நாட்டை ஏழு நாட்களுக்காவது முடக்கினால் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முடியுமென நாம் எதிர்பார்க்கிறோம்” என்றும் அவர் கூறியுள்ளார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments

Powered by Blogger.