February 12, 2021

எங்கெல்லாம் அரச மரம் இருக்கின்றதோ, அங்கெல்லாம் புத்த சிலை வைக்கின்றீர்களோ..? கோவிந்தன் Mp


அரச மரம் எந்தளவிற்கு புத்த பெருமானுடன் தொடர்புபட்டதோ, எங்கெல்லாம் அரசமரம் இருக்கின்றதோ அங்கெல்லாம் புத்த சிலை வைக்கின்றீர்களோ, அதேபோல் குருந்தைமரம் சிவபெருமானுக்கு உரிய மரம் என்பதே வரலாறு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். 

பாராளுமன்ற அமர்வில் நேற்று (11) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தொவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டிருந்தார். இந்த நாட்டில் ஏற்றுமதி நடக்கின்றதோ, இல்லையோ ஆனால், இறக்குமதியை நிறுத்தியிருப்பது முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா அவர்களின் 1970 ஆம் ஆண்டு மூடிய பொருளாதாரக் கொள்கையாக நாங்கள் பார்த்தாலும், இந்த அரசாங்கம் அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியையும் நிறுத்தியிருப்பது பொது மக்களின் மீது விலைச் சுமையைக் கூட்டுவதாகத் தான் நாங்கள் அறிகின்றோம். 

குறிப்பாகத் தமிழ் மக்கள் அதிகளவில் பாவிக்கும் மஞ்சள், உழுந்து போன்றவற்றின் விலைகள் மக்கள் எதிர்பார்க்காத அளவிற்கு மிகவும் கூடுதலான விலையில் இங்கு விற்கப்படுவது மாத்திரமல்லாமல், பொருட்களின் கள்ளக் கடத்தலை ஊக்குவிப்பதாகவும் இங்கு அமைகின்றது. 

மஞ்சள் என்பது மருத்துவப் பொருள் மாத்திரமன்றி, இந்த கொவிட் 19 கால கட்டத்திலே பலர் மஞ்சளை ஒரு தொற்று நீக்கியாகப் பாவிக்கும் இந்த நேரத்தில் அதன் விலை ரூபா 5,000 ஐத் தாண்டியிருப்பது மாத்திரமல்லாமல் கள்ளக் கடத்தல் மூலமாகப் பிடிபடும் மஞ்சள் கூட போதைப் பொருட்களைப் போன்று எரியூட்டுவதையும் நாங்கள் சந்தேகக் கண் கொண்டு பார்க்க வேண்டி இருக்கின்றது. சுமார் 1,000 கிலோ பிடிபட்டால் 100 கிலோவை எரித்து விட்டு ஏனையவை எங்கு செல்கின்றதோ என்றும் சந்தேகம் எழும் அளவிற்கு இந்த நாடு இருக்கின்றது. குறிப்பாக தமிழ் மக்களின் உணவுப் பொருட்களில் சேர்க்கக் கூடிய உழுந்து ரூபா 1,000 ஐத் தாண்டி விற்கப்படும் போது அதனால் தயாரிக்கப்படும் பொருட்கள் விலையும் அதிகரித்து விற்கப்படுகின்றது. 

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரதமரால் இந்த நாட்டு மக்களுக்கு முக்கியமாகத் தேவைப்படும் மலசலகூடப் பொருட்கள் இறக்குமதி தொடர்பில் வர்த்தமானி வெளியீடு மேற்கொள்ளப்பட்டும் 4 மணித்தியாலத்திலே அந்த வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் செய்யப்பட்டது. 

ஏழை மக்களுக்கு மலசலகூடம் அமைத்துக் கொடுத்தாலும் அதற்கான கொமட்டுகள் இல்லாத நிலைதான் இந்த நாட்டிலே நிலவுகின்றது. 

1970 ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா கொண்டு வந்த மூடிய பொருளாதாரக் கொள்கையினால் அதனை அடுத்து 77 ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலிலே வெறுமனே 10 ஆசனங்கள் பெறுமளவிலான நிலைமையே அந்த அரசாங்கத்திற்கு ஏற்பட்டது. அதே நிலைமை அடுத்த பாராளுமன்றத் தேர்தலிலே தற்போதைய அரசாங்கத்திற்கும் ஏற்படுமா என்ற சந்தேகமே மக்கள் மத்தியில் இருக்கின்றது. 

அதுமட்டுமல்ல, இன்று இந்த நாட்டிலே தொல்பொருள் ஆராய்ச்சி என்ற செயலணிகள் உருவாக்கப்பட்டு அதிலும் கிழக்கில் ஒன்று, வடக்கில் ஒன்று விதத்தில் உருவாக்கி அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. குருந்தூர் மலையிலே என்ன நடைபெற்றது. அங்கு அகழ்வாராய்ச்சி நடாத்தும் போது தாராலிங்கம் என்ற சிவலிங்கக் கல் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அகழ்வாராய்ச்சியினர் கூறியிருக்கின்றார்கள். 

குருந்தை மரங்கள் நிறைந்த அந்த குருந்தூர் மலையிலே சிவனின் திருவுருவங்கள் தான் கிடைக்கும். ஏனெனில் அரச மரம் எந்தளவிற்கு புத்த பெருமானுடன் தொடர்பு பட்டதோ, எங்கெல்லாம் அரசமரம் இருக்கின்றதோ அங்கெல்லாம் புத்த சிலை வைக்கின்றீர்களோ, அதேபோல் குருந்தைமரம் சிவபெருமானுக்கு உரிய மரம். குருந்தை மர நிழலில் இருந்து தான் சிவபெருமான் மாணிக்கவாசககரை ஆட்கொண்டதாக வரலாறுகள் கூறுகின்றன. 

அத்துடன், குசலானன்மலை, வெடுக்குநாறி, பங்குடாவெளி, கன்னியா போன்று இந்துக்களுக்குச் சொந்தமான வழிபாட்டிடங்கள் தொல்பொருள் ஆராய்ச்சி என்ற ரீதியில் பறிக்கப்படுவதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கின்றது. 

தமிழர்கள் தங்கள் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக அகிம்சை வழி, ஆயுதவழிப் போராட்டங்கள் நடத்தினோம். கடந்த 2009 ஆம் ஆண்டு இந்த நாட்டில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதை அடுத்து 12 வருடங்களாக மாறி மாறி வந்த அரசாங்கங்கள் எங்களது உரிமைகளைத் தருவார்கள், அதிகாரங்களைப் பரவலாக்குவார்கள், வடகிழக்கை இணைப்பார்கள், அங்கு சுயநிர்ணய உரிமையுடன் கூடிய ஆட்சியை அமைப்பார்கள் என்று எதிர்பார்த்திருந்தோம். நடக்கவில்லை, ஏமாற்றப்பட்டோம். 

தற்போது மீண்டும் ஒரு அகிம்சைப் போராட்டம் நடாத்தப்பட்டிருக்கின்றது. பொத்துவில்லில் இருந்து பொலிகண்டி வரை ஒரு பேரணி நடைபெற்றிக்கின்றது. யாரும் எதிர்பார்க்காத வகையில் அந்தப் பேரணி மக்களால் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது. ஒரு ஜனநாயக நாட்டிலே ஒரு இனம் தங்களது ஜனநாயக உரிமையைக் கேட்டு ஜனநாயகப் பேரணியை நடாத்தும் போது ஒரு ஜனநாயக நாட்டுக்குரிய பண்போடு எமது மக்களைக் கவனிக்கின்றார்களா? ஒவ்வொரு பொலிஸ் பிரதேசங்களிலும் ஒவ்வொரு தனிநபர்களுக்கும் எதிராகத் தடையுத்தரவினைப் பெறுகின்றார்கள். போராட்டத்திலே பங்குபற்றிய அரசியற் பிரமுகர்கள், பாராளுமன்ற உரிப்பினர்களின் சிறப்புரிமைகளை நீங்கள் பறிக்கின்றீர்கள். 

குறிப்பாக எமது சக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதை ஏற்றுக் கொண்டு பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஆனால் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் முடிவுற்றதும் அந்தப் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது. 

நாங்கள் ஒருமித்த நாட்டுக்குள்ளே சந்தோசமாக வாழ்வதற்கே விரும்புகின்றோம். எங்களை இந்த நாட்டின் பிரஜைகளாக மதித்து ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்குவதன் மூலம் அதிகாரப் பரவலாக்களை செய்து இந்த நாட்டை வளம்பெறச் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். 

-மட்டக்களப்பு நிருபர் குகதர்ஷன்-

0 கருத்துரைகள்:

Post a comment