Header Ads



உங்களை பாராட்டிய மில்லியன் கணக்கான மக்கள், இலங்கையில் உள்ளனர் - இம்ரானை புகழ்ந்து மகிந்த ஆற்றிய உரை


பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் உத்தியோகப்பூர்வ விஜயத்தின் போது, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஆற்றிய உரை


“வணக்கம்!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவினரை இன்று 2021.02.23 வரவேற்க கிடைத்தமை குறித்து மகிழ்ச்சியடைகிறேன்.

கௌரவ பிரதமர் அவர்களே, நீங்கள் இலங்கை மக்களுக்கு புதிதானவர் அல்ல. பாகிஸ்தானின் தேசிய கிரிக்கெட் அணியின் தலைவர் என்ற வகையில் கிரிக்கெட் மைதானத்தில் உங்களது தலைமைத்துவத்தை பாராட்டிய மில்லியன் கணக்கான மக்கள் இந்நாட்டில் உள்ளனர்.

உங்களது நாடு நீண்ட காலமாக இருதரப்பு பங்காளராக விளங்குவதுடன், இலங்கை எப்போதும் பாகிஸ்தானை நெருங்கிய மற்றும் உண்மையான நண்பராக கருதுகிறது. எமது மக்களும் பாகிஸ்தானை மிகவும் மதிக்கிறார்கள்.

பாகிஸ்தானது மிகவும் அத்தியவசியமான தருணத்தில் இலங்கைக்கு ஆதரவு நல்கிய நெருங்கிய நட்பு நாடாகும். நான் ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் மிகவும் ஆபத்தான பயங்கரவாத அமைப்புடன் போராடுவதற்கு எமக்கு நேர்ந்தது. 2009 மே மாதம் அந்த பயங்கரவாத அமைப்பை முழுமையாக தோல்வியடைய செய்வதற்கு பாகிஸ்தான் நல்கிய ஆதரவிற்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.

இன்று இடம்பெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது, கௌரவ பிரதமர் இம்ரான் கான் அவர்களும் நானும், இரு நாடுகளுக்கிடையிலான பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு, அறிவியல், தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் கல்வி ஆகிய துறைகளில் இணைந்து பணியாற்றுவதற்கு ஒப்புக்கொண்டோம்.

பாகிஸ்தான்-இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் கட்டமைப்பிற்குள் வழங்கப்பட்ட வாய்ப்புகளைத் தொடர நாங்கள் ஒப்புக்கொண்டோம்.

எமது கலந்துரையாடலின் போது கொவிட் தொற்றுநோய் உள்ளிட்ட பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையில் சுற்றுலா மற்றும் விமானச் சேவை துறைகளின் செயற்பாட்டை அதிகரிக்கவும் நாம் ஒப்புக்கொண்டோம்.

பாகிஸ்தானின் பண்டைய பௌத்த பாரம்பரியத்தை இலங்கையர்கள் பார்வையிடுவதை சாத்தியமாக்கிய பாகிஸ்தான் அரசுக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

பாகிஸ்தான்-இலங்கை நாடாளுமன்ற நட்புக் குழு மூலம் நாடாளுமன்ற தொடர்புகளை மீண்டும் தொடங்குவது, நாம் முன்னெடுத்த மற்றுமொரு முக்கியமான தீர்மானமாகும்.

தெற்காசியாவின் நிலையான அபிவிருத்தி, பொருளாதார வளர்ச்சி மற்றும் செழிப்பை அடைவதற்கு அரசியல் ஸ்திரத்தன்மையும் பிராந்திய அமைதியும் முக்கியமாகும் என இலங்கை நம்புகின்றது.

எமது அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலில் ஒரு முக்கிய அங்கமான வறுமை மற்றும் சமூக-பொருளாதார சமத்துவமின்மையைப் போக்குவதற்கு கௌரவ பிரதமர் இம்ரான் கான் முன்னெடுக்கும் முயற்சிகளை நான் பாராட்டுகிறேன்.

பயங்கரவாதம், மத அடிப்படைவாதம் மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு நாம் தொடர்ச்சியான ஒன்றிணைந்து செயற்படுவோம்.

சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகம், ஆயுதக் கடத்தல் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க உரிய முகவர் நிறுவனங்கள் மூலம் தகவல்களை பரிமாறிக்கொள்வதற்கு தற்போதைய பொறிமுறைகளுடன் முன்னோக்கி செல்வதற்கு எமது கலந்துரையாடல்களில் ஒப்புக்கொண்டுள்ளோம்.

விளையாட்டுத் துறைக்கான ஒத்துழைப்பு மற்றும் நாட்டின் விளையாட்டு பயிற்சி வசதிகளை மேம்படுத்துவதற்கு ஆதரவளித்தமைக்கு பாகிஸ்தானுக்கு நன்றி கூறுகின்றோம்.

பாகிஸ்தானின் ஒரு உயர்மட்ட பல்துறை வணிகக் குழுவுடன் கௌரவ  பிரதமர் இம்ரான் கான் அவர்கள் நாளைய தினம் ஒரு வணிக மற்றும் முதலீட்டு மாநாட்டிற்கு தலைமைதாங்கவுள்ளார்.

இலங்கையுடன் ஏற்படுத்திக் கொள்ளப்படும் இந்த நேரடி வர்த்தக உறவினூடாக இரு நாடுகளுக்கும் இடையிலான முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கின்றோம்.

இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டமை தொடர்பில் கௌரவ பிரதமர் இம்ரான் கான் அவர்களுக்கும், பாகிஸ்தான் தூதுக்குழுவினருக்கும் நன்றி தெரிவிப்பதுடன், உங்களது வருகை இலங்கைக்கு கிடைத்த கௌரவமாக கருதுகிறோம்.

நன்றி”


3 comments:

  1. பாகிஸ்தான் அணிக்கு முஸ்லிம்கள் ஆதரவு செய்கிறார்கள் என வஞ்சித்த சந்தர்ப்பங்களையும் நினைவூட்டியிருக்கலாமே.

    ReplyDelete
  2. Sri Lankan muslims minds are burning as the government cremate muslims by denying the burial rights. Pakistani premier Imran khan knows this issue. Will he talk about.

    ReplyDelete
  3. Imran should have postponed his trip to SL indefinitely saying “The visit is postponed until such time that the parliament is pandemic free and it is safe to address there”. Gota would have got the message.

    ReplyDelete

Powered by Blogger.