Header Ads



முஸ்லிம்களின் முதுகில் குத்திக் குளிர்காயும், எட்டப்பர்களை கண்டால் காறி உமிழ வேண்டும் - சேகு


- ஏ.பி.எம்.அஸ்ஹர் -

எரிக்கப்பட்ட ஜனாஸாக்களுக்கு நினைவுத் தூபிகள் அமைக்கப்பட வேண்டும் என முன்னாள் அமைச்சர் வேதாந்தி சேகு இஸ்ஸதீன்  பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முஸ்லிம் ஜனாஸாக்கள் திட்டமிட்டு எரிக்கப்படுவது தொடர்பில் வெளியிட்டுள்ள தனது கண்டன அறிக்கையிலேயே இவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் தனது அறிக்கையில்: 

சுகாதாரத் துறையின் சிபாரிசுகளோ, உலக நாடுகளின் முன்மாதிரிகளோ, முஸ்லிம்களின் முழு மூச்சான எதிர்ப்போ, அடுத்த மதத்தவர்களின் அனுசரணை சிபாரிசுகளோ, நடுநிலைமைச் சிந்தனையாளர்களின் பக்கம் சாரா வேண்டுதல்களோ என்று எதுவும் பலனளிக்காது கொரோனாவால் உயிரிழந்த முஸ்லிம் குஞ்சுப் பிள்ளை தொடங்கி மூதாட்டிவரை அரசாங்கம் முஸ்லிம் ஜனாஸாக்களை எரிப்பதில் தனது வெற்றி வீறாப்பை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.

‘பேயரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்’ என்பது எவ்வளவு யதார்த்தமானது என்பதைக் கண்கூடாகக் காண முடிகிறது. இலங்கை சகல மனிதர்களின் சுகநாடு என்பது மாற்றப்பட்டு சந்தர்ப்பவாதிகளின் சுடுகாடு என்று உருக்கெடுக்கப்பட்டு வருகிறது.

கொடூரமான கொரோனாவால் உயிரிழந்ததாகக் கூறப்படும் சொந்தங்களின் இறுதிக் கிரிகைகளை கொழுந்து விட்டு எரியும் நெருப்பிலும் கொடூரமான மின்சாரப் பிசாசுகளுக்குப் பலிகொடுப்பதைக் தடுக்க உற்றாரும் உறவுகளும் நெஞ்சம் பற்றிப் பதற மாண்டெழ வேண்டியுள்ளது.

கொரோனாவால் உயிரிழந்தவர்களை எரிக்காது மண்ணுள் அடக்குவதனை சுமார் 185க்கு மேற்பட்ட நாடுகள் இன்னும் அனுமதிதக் கொண்டிருக்கும்போது சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக நம்பப்படும் இலங்கையில் மரித்த உடலை முஸ்லிம் மார்க்க முறைப்படி மண்ணுள் அடக்க இடம்தராத ஒரு இதயமற்ற அரசாங்கம் இருப்பதை இஸ்லாமியர்கள் இன்னும் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்.

முஸ்லிம்களின் வாக்குப் பலத்தால் நாடாளுமன்ற உறுப்பினர்களாக முஸ்லிம் கட்சிகளில் தெரிவு செய்யப்பட்ட பல எம்பிக்கள் இந்த இஸ்லாமிய விரோத அரசாங்கத்துக்கு எவ்வாறு கச்சை கட்டிக் கொண்டு காவடி எடுக்கிறார்கள் என்பது இன்று கண்கூடு.

கொரோனாவால் உயிரிழந்ததாகக் கூறப்படும் அனைத்து முஸ்லிம்களுக்கும் அவரவர் பிரதேசத்தில் முஸ்லிம் மையவாடிகளில் நினைவுத் தூபிகள் எழுப்பப்பட்டு இந்த முஸ்லிம் அரசியல் சண்டாளர்களின் இரத்தத்தால் அவர்கள் பெயரும் இரங்கல் பிரார்த்தனையும் பொறிக்கப்பட வேண்டும்

முஸ்லிம் கட்சிகளில் இன்னும் ஒட்டிக் கொண்டிருக்கும் இவர்களை கட்சியிலிருந்து களைபிடிங்கி வெளியேற்றி பதவிகளையும் பறித்தெடுக்க வேண்டும். முஸ்லிம்களின் முதுகில் குத்திக் குளிர்காயும் இந்த எட்டப்பர் கூட்டத்துக்கு இதன் பின்னர் முஸ்லிம்கள் எவரும் வாக்களித்தல் ஹராமானதாக இருக்கும்.

ஒவ்வொரு பகுதியையும் சேர்ந்த இன உணர்வுகள் உள்ள முஸ்லிம் தாய்மார், தந்தைமார், இளைஞர்கள் அனைவரும் இவர்களைக் கண்ட இடத்தில் காறி உமிழ வேண்டும். முஸ்லிம் தேசிய முழக்கத்தை வானுயர ஒலிக்கச் செய்ய வேண்டும்.

இந்த எரிக்கும் நிலையை இந்த அரசாங்கம் நிறுத்தாமல் தொடரும் பட்சத்தில் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் வடகிழக்கு தமிழர்களுக்கு என ஒரு தமிழ்த் தேசியமும் கிழக்கு முஸ்லிம்களுக்கு என ஒரு முஸ்லிம் தேசியமும் உருவாக்கும் நீண்ட காலப் போராட்டத்துக்கு முஸ்லிம்களும் தமிழர்களோடு ஒன்றிணைந்து போராடத் தயாராக வேண்டும். இந்த நாட்டு தமிழ், முஸ்லிம்களின் தன்மானம் இன்று சமூகப்பற்றுள்ள இளைஞர்களின் கைகளிலேயே தாரைவார்த்துத் தரப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.