Header Ads



கொரோனா இல்லை - 25 நாட்களின் பின் ஜனாஸா கையளிப்பு - நீதிமன்றில் நடந்த போராட்டம் வெற்றி


கடந்த 2020-12-21ஆம் திகதி மரணமடைந்த சாய்ந்தமருதைச் சேர்ந்த முஹம்மட் இஸ்மாயீல் முஹம்மட் ஹனிபா என்பவரின் ஜனாஸா, நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று வெள்ளிக்கிழமை (15) இரவு கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இருந்து விடுவிக்கப்பட்டு, குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவித்து, அவரது ஜனாஸா குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படாமல், கடந்த 25 நாட்களாக வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அவர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணிக்கவில்லை என்ற வாதத்தை முன்வைத்து, அவரது பி.சி.ஆர்.அறிக்கை வெளிப்படுத்தப்பட வேண்டும் எனவும் அந்த அறிக்கையின் பிரகாரம் தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டால் ஜனாஸாவை நல்லடக்கம் செய்வதற்காக குடும்பத்தினரிடம் ஒப்படைக்குமாறும் உத்தரவிடக்கோரி கல்முனை மாநகர முதல்வரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஏ.எம்.றகீப் முறைப்பாட்டு மனுவொன்றை தாக்கல் செய்திருந்த அதேவேளை இன்று திடீர் மரண விசாரணைக்கான நகர்த்தல் மனுவொன்றும் அவரால் தாக்கல் செய்யப்பட்டது.

இம்மனு சார்பாக இன்று கல்முனை நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கமைவாக அந்த ஜனாஸா குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த 2021-01-08 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட குறித்த நபரின் பி.சி.ஆர். அறிக்கையின் பிரகாரம் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கவில்லை என்ற விடயம் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

இம்மனு சார்பில் சட்டத்தரணிகளான ரொஷான் அக்தர், சி.ஐ.சஞ்சித் அஹமட் ஆகியோரும் ஆஜராகி, முக்கிய பங்காற்றியிருந்தனர்.

(அஸ்லம் எஸ்.மௌலானா)


1 comment:

  1. So, those who lied in this matter left go free ? No punishment for their wrong act ?

    ReplyDelete

Powered by Blogger.