Header Ads



15 ஆம் திகதி வரை காத்தான்குடி, தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக நீடிப்பு


- ரீ.எல்.ஜவ்பர்கான் - 

காத்தான்குடி பிரதேசம், இம்மாதம் 15ஆம் திகதி வரை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக நீடிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட கொவிட் 19 கட்டுப்பாட்டு பணிகளை ஒருங்கிணைக்கும் அதிகாரி மேஜர் ஜெனரல் சீ.டீ ரணசிங்கவின் பங்குபற்றுதலுடன், மாவட்டச் செயலகத்தில் நேற்று (03) மாலை நடைபெற்ற கூட்டத்தில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாவட்டச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் டொக்டர் நா.மயூரன், கொவிட் 19 தடுப்பு கிழக்கு மாகாண இணைப்பாளர் டொக்டர் முத்துலிங்கம் அச்சுதன் உட்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது எதிர்கொண்டுள்ள தொற்றை எவ்வாறு கட்டுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு விடயங்கள் இதன்போது ஆராயப்பட்டன.

காத்தான்குடி பிரதேசத்தில் தனிமைப்படுத்தல் அமுலில் உள்ளபோதிலும் மக்கள் எல்லைகளைக் கடந்து வெளியிடங்களுக்கு சென்றுவருவதாக இக்கூட்டத்தில் சுட்டிக்காட்டியதையடுத்து, இன்று (04) முதல் காத்தான்குடி எல்லைகளில் காவல் அரண்களை அமைக்க மேஜர் ஜெனரல் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், எந்தவோர் அரசியல் அழுத்தங்களுக்கும் அடிபணியாது, மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றைப் போக்க சுகாதார அதிகாரிகள் தங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென, இக்கூட்டத்தில் மேஜர் ஜெனரல் சீ.டீ ரணசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

No comments

Powered by Blogger.