Header Ads



முஸ்லிம் எதிர்ப்பு வன்முறைகளை கட்டுப்படுத்த, முகாமில் இருந்த படையினரின் எண்ணிக்கை போதுமானதாக இருக்கவில்லை


(எம்.எப்.எம்.பஸீர்)

ஏப்ரல் 21 தற்கொலை தாக்குதல்களை தொடர்ந்து, வட மேல் மாகாணத்தில் இடம்பெற்ற முஸ்லிம் எதிர்ப்பு வன்முறைகளை கட்டுப்படுத்த, தமது முகாமில் இருந்த படையினரின் எண்ணிக்கை போதுமானதாக இருக்கவில்லை என வட மேல் மாகாணத்தின் 143 ஆவது இராணுவ படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் பிரியந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் மற்றும் அதன் பின்னரான  முஸ்லிம் எதிர்ப்பு வன்முறைகள் தொடர்பில்  விசாரணை செய்துவரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு முன்னிலையில் நேற்று சாட்சியம் வழங்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

21/4 உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்களை மையப்படுத்தி அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க 1948 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க  விசாரணை ஆணைக் குழுக்கள் சட்டத்தின் (393 ஆம் அதிகாரம்) 2 ஆம் அத்தியாயத்தின் கீழ் கடந்த 2019 செப்டம்பர் 21 ஆம் திகதி நியமிக்கப்பட்ட ஐவர் கொண்ட ஜனாதிபதி  விசாரணை ஆணைக் குழுவின்  சாட்சி விசாரணைகள் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள ஆணைக் குழுவில்  இடம்பெற்று வருகின்றது.

ஆணைக் குழுவின் தலைவர் மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி  ஜனக் டி சில்வாவின் தலமையிலான மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி  நிசங்க பந்துல கருணாரத்ன,  ஓய்வுபெற்ற நீதிபதிகளான  நிஹால் சுனில் ராஜபக்ஷ,  அத்தபத்து லியனகே பந்துல குமார அத்தபத்து, ஓய்வுபெற்ற அமைச்சு செயலர் டப்ளியூ.எம்.எம். அதிகாரி ஆகியோர் முன்னிலையில் இடம்பெற்று வருகின்றது.

இதன்போது அவர்  தொடர்ந்தும் சாட்சியமளிக்கையில்,

எனது பொறுப்பிலிருந்த படையணியில் 600 படை வீரர்களே இருந்தனர். 7,888 சதுர கிலோ மீற்றர்களுக்கு பாதுகாப்பளிக்க இந்த படையினரின் எண்ணிக்கை போதாது.

நாங்கள் மத ஸ்தலங்களுக்கு பாதுகாப்பினை வழங்கினோம். நாம் பொலிஸாரிடம் எமது பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உதவுமாறு கோரிக்கையும் முன்வைத்தோம்.

எமது படையணியின் இரு படைக் குழுக்களை பல பகுதிகளுக்கும் அனுப்பினோம். எனினும் வன்முறையாளர்களைக் கட்டுப்படுத்த அது போதுமானதாக இருக்கவில்லை.

2019 மே 12 ஆம் திகதி, புத்தளம் கஜபா ரெஜிமென்ட்டின் கீழ் வரும் 16 ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரி, சிலாபத்தில் முஸ்லிம் ஒருவரின் கடை ஒன்று தாக்கப்பட்டதாக அறிவித்தார். 

2019 மே 12, 13 ஆம் திகதிகளில் மாகாணத்தின் பல பகுதிகளில் பல்வேறு சம்பவங்கள் பதிவாகின. அச்சம்பவங்கள் தொடர்பில்  தேடிப் பார்க்கவும், பொலிசாருக்கு உதவவும் அவர்  பல இடங்களுக்கு சென்றிருந்தார்.' என சாட்சியமளித்தார்.

இதன்போது சாட்சியை நெறிப்படுத்திய அரச சிரேஷ்ட சட்டவாதி,  இந்த வன்முறைகளின் போது இராணுவம் எவரையேனும் கைது செய்ததா என வினவினார்?

அதற்கு பதிலளித்த பிரிகேடியர் திஸாநாயக்க, இராணுவம் எவரையேனும் கைது செய்திருந்தால் அதற்கான ஆவணங்கள் இருந்திருக்கும். எனினும் அவ்வாறு எவரையேனும் கைது செய்தமைக்கான ஆவணங்கள் எதுவும் இல்லை. என பதிலளித்தார்.

' எங்களிடம் உள்ள ஆவணங்கள் பிரகாரம் இரும்புக் கம்பிகள், பொல்லுகள், கத்திகளுடன் இருந்தவர்கள் பொலிசரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை பிங்கிரிய பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து செல்ல இராணுவ வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.' என இதன்போது குறித்த பிரிகேடியர் சாட்சியமளித்தார்.

அத்துடன் 2019 மே 13 ஆம் திகதி குளியாபிட்டி பொலிஸ் நிலையத்தை சூழ மக்கள் திரண்டிருந்ததாகவும், அவர்கள் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்குமாறு  நிபந்தனை விதித்ததாகவும் சுட்டிக்காட்டிய பிரிகேடியர் திஸாநாயக்க, தான் அங்கு சென்ற போது,  கைதானோரை விடுவிக்க பொலிஸ் மா அதிபர் பூஜித் அறிவுறுத்தியதாக குளியாபிட்டிய பொலிஸ் பொறுப்பதிகாரி தன்னிடம் தெரிவித்ததாக குறிப்பிட்டார்.

3 comments:

  1. this man is crazy and stupid .
    He tires to fool public

    ReplyDelete
  2. உங்கள் அறிக்கை நாட்டின் இறையாண்மைக்கு சரியில்லை.

    ReplyDelete
  3. என்ன நியாயமும் வாதமும். இறைவா நீயே பார்த்துக் கொள்வாயாக

    ReplyDelete

Powered by Blogger.