Header Ads



அடகு வைக்கப்படுகின்றனவா ஜனாஸாக்கள்..?


- கம்மல்துறை இக்பால் -

உடல்களுக்கு தீ மூட்டுகிறார்கள்

உயிரோடு நாங்கள் எரிகிறோம்

வெந்து போவது உடல்களேயானாலும்

நொந்து போகிறோம் உள்ளம் உருகி


எதிர்பார்த்ததே எதிரொலிக்குது

எரிப்பது என்ற பிடிவாதத்துக்கு முன்னாள்

எதுவுமே எடுபடப்போவதில்லை

எதிர்ப்புகளுக்கும் எல்லை தாண்ட அனுமதியில்லை


கொஞ்ச நஞ்ச நம்பிக்கைகளுக்கும்

கொள்ளி வைத்துவிட்டார்கள்

அள்ளி அணைக்காவிட்டாலும்

கிள்ளியாவது கருணை காட்டலாகாதா


இறைமையை காத்துக்கொள்ள

இரையாகவும் தயாராகவுள்ளோம்-ஆனால்

இலக்குகளை அடைந்து கொள்ள அல்லவா

இலக்கு வைக்கப்படுகிறோம் நாங்கள்


நோக வைப்பதற்காகவே

வேகவைக்கிறார்கள்

தாகத்தை தீர்த்துக்கொள்ள எங்கள்

தேகமல்லவா தேவைப்படுது அவர்களுக்கு


அத்தனை அதிகாரங்களும்

மொத்தமாக குவிந்திருந்தும்

அடுத்தவர் துயர்போக்கும் எண்ணம்

அறவே இல்லையென்பதே யதார்த்தம்


சிறுபான்மையை சிறுமைப்படுத்தும்

பெரும்பான்மை பலம் என்ற அஸ்திரம் -அதுகண்டு

சிறுபொறியாய் சிலபோது பிறப்பெடுத்து

பெரு வெறுப்பாய் நெருப்பெடுக்கும் பத்திரம்


இடித்துரைக்கும் இழிச்சொற்களும்

படித்தவர்களின் பாரா முகமும்

அடிவயிற்றில் சொருக்கப்பட்ட அக்கினி யாய்

ஆன்மாவையே எரிக்குது


அடிப்படைக் காரணங்கள் எல்லாமே

அடிப்பட்டுப் போனபின்னர்

அரசியல் பழிவாங்களுக்காக 

அடகு வைக்கப் படுகின்றனவா ஜனாஸாக்கள்..?


2 comments:

  1. கவிதை அருமை. நன்றி. அடகு
    மட்டுமல்ல. அதுக்கும் மேலால் அந்த வட்டியில்
    இனவாத அரசியல் முதலீடும் உள்ளது.

    ReplyDelete
  2. Excellent. Iqbal is my cousin and I am proud of him.

    ReplyDelete

Powered by Blogger.