Header Ads



முஸ்லிம்களின் உடல்களை அடக்கம், செய்வதற்கான அனுமதியை வழங்குங்கள் - வேலுகுமார் Mp உருக்கம்


" அரசியல் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக மட்டும் முஸ்லிம் அரசியல்வாதிகளை வளைத்துப்போடும் கோட்டாபய அரசாங்கம் , இன்னும் முஸ்லிம் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை கைவிடவில்லை." - என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் இன்று (04) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளவை வருமாறு, 

" சிறுபான்மையின மக்களை அடக்கி ஒடுக்கி, அவர்கள் தொடர்பில் பெரும்பான்மையின மக்கள் மத்தியில் இனவாதத்தை விதைத்து தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம், தொடர்ந்தும் சிறுபான்மையின மக்களுக்கு எதிரான போக்கை கடைப்பிடித்து வருகின்றது. 

கொரோனா வைரஸ் தாக்கம் என்ற நெருக்கடியான சூழ்நிலையிலும்கூட இனவாதத்தையும், குறுகிய அரசியல் நோக்கங்களையும் ஆட்சியாளர்கள் கைவிடுவதாக இல்லை.உலகில் ஏனைய நாடுகளில் அனைவரும் ஓர் சமூகமாக இணைந்து இந்த சவாலை எதிர்கொள்கின்றனர். ஆனால் இங்கு சமூகங்கள் பிரிக்கப்படுகின்றன, பழிவாங்கப்படுகின்றன. 

முதலாம் அலையின்போது முஸ்லிம் மக்களே வைரஸை பரப்புகின்றனர் என்ற விம்பம் உருவாக்கப்பட்டது, அதுமட்டுமல்ல கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்த முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்குகூட அனுமதி மறுக்கப்பட்டது. பலவந்தமாக சடலங்கள் எரிக்கப்பட்டன. திடீரென உயிரிழந்தவர்களின் சடலங்கள்கூட கொரோனா சந்தேகத்தில் எரிக்கப்பட்டன. இது முஸ்லிம் மக்களின் மத விவகாரங்களுக்கு முரணானச் செயலாகும். 

கொரோனா தொற்றாளர் ஒருவர் உயிரிழந்தால் அவரின் சடலத்தை அடக்கம் செய்யலாம் இல்லாவிட்டால் எரிக்கலாம் என இரண்டு நடைமுறைகளையும் உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளது. விஞ்ஞானப்பூர்வமான ஆய்வுகளின் பின்னரே இந்த யோசனை முன்வைக்கப்பட்டது. ஆனால் உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையைக்கூட கருத்திற்கொள்ளாமல் முஸ்லிம் மக்களை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்தும் சடலங்களை இந்த அரசாங்கம் எரித்துவருகின்றது. 

தேர்தல் காலத்தில் ராஜபக்சக்களாலும் அவர்களின் சகாக்களாலும் கொடூரமானவர்கள் என சித்தரிக்கப்பட்ட முஸ்லிம் அரசியல்வாதிகளிடம், 20 ஐ நிறைவேற்றுவதற்கு உதவிபெற்றுள்ளனர். அதாவது அரசியலுக்காக தாங்கள் எதையும் செய்வோம் என்ற செய்தி இதன்மூலம் வழங்கப்பட்டுள்ளது. 

மறுபுறத்தில் சமூகத்தை வதைக்கும் இந்த அரசாங்கத்துக்கு முஸ்லிமபாராளுமன்ற உறுப்பினர்கள் நேசக்கரம் நீட்டியமை வேதனையளிக்கின்றது. குறைந்தபட்சம் கொரோனாவால் ஒருவர் மரணித்தால்கூட அவரின் சடலத்தை அடக்கம் செய்வதற்கான அனுமதியை பெற்றுக்கொடுத்திருக்கலாம். அதனை செய்யாமல் ஆதரவு வழங்கிவிட்டு தொடர்ந்தும் கையேந்தும் நிலைமை காணப்படுகின்றது. 

அதேவேளை, முஸ்லிம் மக்களின் மத நம்பிக்கை, பண்பாடுகளுக்கு மதிப்பளித்து, உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகைளையும் கருத்திற்கொண்டு சடலங்களை அடக்கம் செய்வதற்கான அனுமதியும் வழங்கப்படவேண்டும்." - என்றார்.

1 comment:

  1. Why cant other non muslim brothers raise this matter.some times muslim politicians go wrong.muslim people like MP's like Velukumar.

    ReplyDelete

Powered by Blogger.