Header Ads



சஹ்ரானுக்கு மேலால் இருந்து, வழி நடத்தியவரைக் கைது செய்யும்வரை அச்சுறுத்தல் நீங்காது - ஓய்வுபெற்ற CID பிரதானி


(எம்.எப்.எம்.பஸீர்)

உயிர்த்த ஞாயிறு தினம் நடத்தப்பட்ட தற்கொலைகு் குண்டுத் தாக்குதல்களுடன் சர்வதேச பயங்கர்வாத அமைப்பான ஐ.எஸ். அமைப்பு தொடர்புபடவோ அல்லது உதவிகளை அளித்திருக்கவோ இல்லை.

இந்த விடயம் இது தொடர்பான விசாரணைகளில் தெரிய வந்ததாக, குறித்த தாக்குதல்கள் தொடர்பில் விசாரித்த சிஐடியின் பிரதானியாக செயற்பட்ட ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து சாட்சியமளித்த அவர், இந்தத் தாக்குதல்களுக்கு நிதியளித்தமை தொடர்பில் 41 வங்கிக் கணக்குகளை நாம் அடையாளம் கண்டு முடக்கினோம். அவற்றில் வெளிநாட்டு கணக்குகளுடன் தொடர்புபட்டவை எதுவும் இல்லை. பிரதான நிதிப் பங்களிப்பு இப்ராஹீம் சகோதரர்களால் செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து பணம் வந்தமைக்கான எந்தத் தகவல்கலும் இல்லை.

மேலும், விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு அமைய, ஸஹ்ரானின் அடிப்படைவாத நடவடிக்கைகள் 2014 முதல் இடம்பெற்றுள்ளன. தாக்குதல்கள் அல்லது வன்முறைகளை நடத்துவது தொடர்பில் 2018 அல்லது 2017 இன் போதே முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தாக்குதல், வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் அனைவரையும் நாம் கைது செய்து விட்டோம். எனினும் அதன் ஊடாக அச்சுறுத்தல் முழுமையாக நீங்கிவிட்டது என்பது அர்த்தமல்ல.

ஸஹ்ரானுக்கு மேலால் இருந்து அவரை வழி நடத்தியவரைக் கைது செய்யும்வரை அச்சுறுத்தல் நீங்காது. அதுவரை அந்த அச்சுறுத்தல் தொடரும். கண்டிப்பாக ஸஹ்ரானின் பின்னனியில், அவருக்கு மேல் ஒருவர் இருந்து இந்த தாக்குதல்கள் தொடர்பில் செயற்பட்டுள்ளார்.’ என பதிலளித்தார்.

No comments

Powered by Blogger.