Header Ads



தந்தையின் கனவை நனவாக்க, வைத்தியராக வருவதே எனது எதிர்கால இலட்சியம்


முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு சிறீ சுப்பிரமணியா வித்தியாசாலை மாணவியான கிசானிகா லோகேஸ்வரன் தனது தந்தை இறந்து நான்கு மாதத்தில் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றி பரீட்சையில் சாதித்துள்ளார்.

குறித்த மாணவி வெளியாகிய தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் 181 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

குறித்த மாணவி தனது தந்தையின் கனவை நனவாக்க ஒரு வைத்தியராக வருவதே எனது எதிர்கால இலட்சியம் எனவும் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம் பகுதியில் வசித்துவரும் குறித்த மாணவியின் குடும்பத்தில் தந்தை, தாய், இரண்டு சகோதரர்கள் என 5 பேர் வசித்து வந்திருந்தனர். பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்ட தந்தையான லோகேஸ்வரன் வியாபாரம் செய்து தனது குடும்பத்தை கொண்டு நடத்தி தனது பிள்ளைகளை கற்பித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இவ்வருடம் தை மாதம் முதல் சுகவீனமுற்ற லோகேஸ்வரன் சிகிச்சைகள் எவையும் பலனளிக்காது 2020-05-31 அன்று உயிரிழந்துள்ளார்.

தந்தையின் இறப்பு ஒருபுறம் நாட்டில் நிலவிய கொரோனா நிலவரத்தினால் பாடசாலை கல்விகள் சீராக இடம்பெறாமை உள்ளிடட பல்வேறு சவால்களுக்கும் முகம்கொடுத்து கல்வி கற்ற மாணவி தந்தையை இழந்து நான்கு மாதங்களில் பல்வேறு தரப்பினரின் ஆறுதல்படுத்தலில் புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றியிருந்தார்.

குறித்த மாணவி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

சித்தியடைந்ததையிட்டு மகிழ்வடைவதாகவும் அதற்காக முதலில் இறைவனுக்கு நன்றி தெரிவிப்பதோடு தன்னை வழிநடத்திய அதிபர் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு தனது துன்பமான சூழ்நிலையில் தன்னை ஆறுதல்படுத்தி பரீட்சை எழுத வைத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்தார்.

எதிர்காலத்தில் தனது தந்தையின் கனவை நனவாக்கி வைத்தியராக வந்து எனது மாவட்ட மக்களுக்கு சேவையாற்றுவேன் எனவும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.