Header Ads



சுகாதார அமைச்சு அனுமதித்தால், இறுதிச்சடங்கில் குடும்பத்தினர் 2 பேருக்கு அனுமதி, உடல் குடும்பத்திடம் ஒப்படைக்காமல் அடக்கம் செய்யப்படும்

- தினகரன் பத்திரிகை -

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மரணமடைந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதா? அல்லது எரிப்பதா என்பது தொடர்பில் அரசாங்கம் அல்ல சுகாதார அமைச்சே தீர்மானிக்குமென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் இம்முறை அமைச்சரவையில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ள நிலையில் சுற்றாடல் அமைச்சர் என்ற வகையில் தாமும் அதில் பங்கேற்றதாக குறிப்பிட்ட அமைச்சர், மேற்படி விடயம் தொடர்பில் சர்வதேச வழிகாட்டலுக்கமைய சுகாதார அமைச்சே அதற்கான தீர்மானத்தை எடுக்குமென்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக மரணமடைபவர்களுடைய இறுதிக்கிரியைகள் நடத்தப்படுவது இனம் அல்லது மத அடிப்படையில் தீர்மானிக்கக் கூடியதல்ல என்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர், சுகாதார அமைச்சினால் அதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் ஆலோசனைக்கிணங்கவே அந்த தீர்மானம் மேற்கொள்ளப்படுமென்றும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று -10- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையில் அமைச்சர்கள் பலராலும் பல்வேறு கருத்துக்கள் இது தொடர்பில் முன்வைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்; சர்வதேச சட்டங்களுக்கிணங்க கொரோனா வைரஸ் மரணம் ஏற்படுகையில் சுற்றாடல் மற்றும் மனித சுகாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இறுதிச்சடங்குகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

கொரோனா வைரஸ் சட்டங்களுக்கிணங்க தனிமைப்படுத்தலுக்காக முடக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் இறுதிச் சடங்குகளில் குடும்பத்தினர் இருவர் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.

அத்துடன் சடலத்தை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க முடியாது. சடலம் சுகாதார துறையின் ஆலோசனைக்கமையவே அடக்கம் செய்யப்படுமென அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் அதற்கான அனுமதியை வழங்கியுள்ளதா? என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அதற்கு அரசாங்கமோ அமைச்சரவையோ அனுமதி வழங்காது. சுகாதாரத் துறையினர் மூலம் பெற்றுக் கொடுக்கப்படும் பரிந்துரைகளுக்கிணங்க செயற்படுவதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதென்றும் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும் அதற்காக அரசாங்கத்தின் அனுமதி பெற்றுக் கொடுக்கப்படும்.கொரோனா வைரஸ் தொற்றினால் மரணமடைந்தவரின் உடல் அடக்கம் செய்யப்படும் போது அதற்காக வரண்ட பிரதேசங்களை தெரிவு செய்வது அதனூடாக வெளியேறும் கிருமிகள் பூமிக்கடியிலுள்ள நீரில் கலப்பதை தவிர்ப்பதற்காகவே. அதற்கான அனுமதியை பல சர்வதேச நாடுகள் வழங்கியுள்ளதாக அமைச்சரவையில் சுகாதார அமைச்சர் தெளிவுபடுத்தியதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.


லோரன்ஸ் செல்வநாயகம்

No comments

Powered by Blogger.