Header Ads



இஸ்லாமிய தீவிரவாத செயற்பாடுகள் பற்றி, மைத்திரிபால விசாரிக்க வேண்டாமென்றார் - பூஜித் பரபரப்பு தகவல்


இலங்கையில் பரவிய இஸ்லாம் தீவிரவாத செயற்பாடுகள் தொடர்பாக பொலிசார் எவ்வித விசாரணையையும் மேற்கொள்ள வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தனக்கு ஆலோசனை வழங்கியதாக கடமையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் அவர் இன்று -23- சாட்சியமளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தனது சாட்சியத்தில் மேலும் தெரிவிக்கையில்

நாட்டின் சட்டம், சமாதானம் ஆகியவற்றை பாதுகாக்கும் அதிகாரத்தை கொண்டிருந்த தான் தேவையான சந்தர்ப்பங்களில் பாதுகாப்பு செயலாளரின் ஆலோசனைகளை பெற்று கொண்டதாக தெரிவித்தார். அத்தோடு எடுக்கப்படும் முடிவுகள் குறித்து ஜனாதிபதியையும் பாதுகாப்பு செயலாளரையும் அறிவுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி அவரிடம் கேள்வி எழுப்புகையில் நீங்கள் எந்த சந்தர்ப்பத்திலாவது ஜனாதிபதியின் ஆலோசனைகளை பெறாமல் பிரதமரின் ஆலோசனைகளை பெற்றுக் கொண்டீர்களா என வினவினார். ஒருபோதும் தான் அவ்வாறு செய்யவில்லையென்றும் அரசியல் ரீதியாக 2018 ஒக்டோபர் மாதம் ஏற்பட்ட 52 நாள் அரசாங்கம் போன்ற சந்தர்ப்பங்களில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையே காணப்பட்ட உறவுகள் சீர்குலைந்த போது அவர்கள் இருவருடனும் இணைந்து செயற்படுவது சிரமமாக இருந்தது என முன்னாள் பொலிஸ் மாஅதிபர் தெரிவித்தார்.

ஒரே விடயம் தொடர்பாக ஜனாதிபதியும் பிரதமரும் மாறுபட்ட ஆலோசனைகளை வழங்கினார்களா என எழுப்பப்பட்ட கேள்விக்கு, அவ்வாறான சந்தர்ப்பங்களில் ஜனாதிபதியின் உத்தரவுகளையே பின்பற்றியதாக தெரிவித்தார்.

19வது அரசியல் அமைப்பு சீர்த்திருத்தத்தில் சுயாதீன ஆணைக்குழுக்கள் வலுவான நிலையில் இருந்த போதிலும் வெளிச்சக்திகள் அழுத்தம் பிரயோகித்ததாக நீங்கள் கருதுகின்றார்களா என எழுப்பப்பட்ட கேள்விக்கு 2018ம் ஆண்டு ஆரம்பம் முதல் அழுத்தங்கள் காணப்பட்டதாகவும் பொலிசாரின் இடமாற்றங்கள் இடம்பெறும் போது பொலிஸ் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முன்னெடுக்க முடியவில்லையென்றும் உண்மையில் அவை நிறுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

யார் நிறுத்தினார் என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர் முன்னாள் ஜனாதிபதியென தெரிவித்தார். நீங்கள் கூறும் வகையில் உங்களுக்கு அக்காலத்தில் வாய் திறக்க முடியாது போயுள்ளது. இப்போதாவது கூறுங்கள் என ஆணைக்குழு தெரிவித்தது.

அதற்கு பதில் அளித்த பூஜித் ஜயசுந்தர 2018 ஒக்டோபர் 23ம் திகதி தேசிய பாதுகாப்பு கூட்டம் நடைபெற்றது. எனினும் மாலையாகும் வரை அதுபற்றி என்னை அறிவுறுத்தவில்லை. மாலை 4.30 அளவில் அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கபில வைத்யரட்னவை தொடர்பு கொண்டு இன்று பாதுகாப்பு குழு கூட்டம் இடம்பெறுமா என வினவினேன். அப்போது அவர் கூறினார் பூஜித் உங்களிடம் எனக்கு எதனையும் கூற முடியாமல் இருந்தேன் என்றும், நீங்கள் இப்போது வினவியதற்காக கூறுகின்றேன். உங்களை அழைக்க வேண்டாம் என ஜனாதிபதி கூறினார் என்றும் கூறியிருந்தார்.

அதனால் பாதுகாப்பு குழு கூட்டத்தில் எந்தவொரு விடயத்தையும் என்னால் அறிந்துகொள்ள முடியவில்லை. எனினும் எந்தவொரு எழுத்துமூல அறிவித்தலும் எனக்கு வழங்கப்படவில்லையென அவர் தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதல் போன்ற அழிவொன்று இதன் காரணமாகவா ஏற்பட்டது என ஆணைக்குழு வினவிய போது, இல்லை அவ்வாறு கூற முடியாது, 2012 மற்றும் 2013 ம் ஆண்டுகளில் சர்வதேச ரீதியில் ஏற்பட்ட செயற்பாடுகளினால் எமது நாட்டுக்கு ஏற்பட்ட அழுத்தங்களுக்கு முடிவெடுக்காமையினால் மொத்த செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவித்தார்.

ஏன் உங்களை பாதுகாப்பு கூட்டத்துக்கு அழைக்கவில்லையென வினவிய போது, பதில் அளித்த அவர் ஐ.பி. நிஷாந்த சில்வாவின் இடமாற்றமே முக்கிய காரணம் என தெரிவித்தார்.

நீங்கள் இதுவரை பகிரங்கமாக கூறாத சம்பவங்கள் எதுவும் உண்டா என வினவிய போது, அதற்கு பதில் அளித்த அவர் இஸ்லாம் தீவிரவாதம் குறித்து அதுவரை பொலிஸ் பயங்கரவாத ஒழிப்பு பிரிவே விசாரணைகளை மேற்கொண்டது. அதன் பணிப்பாளராக இருந்த முன்னாள் பொலிஸ் அத்தியட்சகர் நாலக்க சில்வாவை நான் ஜனாதிபதிக்கு அறிமுகப்படுத்தினேன். நாம் இருவரும் சென்று உலகிலும் இலங்கையிலும் செயற்படும் இஸ்லாம் தீவிரவாதம் குறித்து அவருக்கு தெளிவுப்படுத்தினோம்.

இறுதியில் இதுவொரு உணர்வுபூர்வமான விடயம் என்றும் மிக அவதானமாக செய்ய வேண்டுமென்றும், இது முஸ்லிம்களின் பிரச்சினை என்றும் சிரியாவில் மட்டுமே இது இடம்பெற்றுள்ளதாகவும், முஸ்லிம் அமைச்சர்கள் அரசாங்கத்தில் இருப்பதாகவும் அவர்களினால் அரசாங்கத்துக்கு அழுத்தங்கள் ஏற்படலாம் என்றும் இறுதியாக ஜனாதிபதி என்னிடம் தெரிவித்தார்.

பின்னர் ஒருதினம் பாதுகாப்பு கூட்டம் நடைபெற்றது. எனினும் அப்போது இஸ்லாம் தீவிரவாதம் குறித்து விசேட கரிசணை காட்டவில்லை.

இதுகுறித்து பொலிஸார் பகிரங்க விசாரணை நடத்த வேண்டுமென்றும் அரச புலனாய்வு துறையின் நிலந்த இதுபற்றி கண்காணித்தால் போதுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார். நிலந்த அதனை செய்வார் என்றும் அவர் கூறினார்.

இதேநேரம் முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தரவின் சாட்சியங்களை செவிமடுப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று பி.ப ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு வருகை தந்தார். சுமார் அரை மணிநேரம் சாட்சியங்களுக்கு செவிமடுத்த முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பின்னர் அங்கிருந்து வெளியேறினார்.

அத்துடன் முன்னாள் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளருக்கு நாளை மு.ப ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டது.

இதேநேரம் பா.உ ஹரின் பெர்ணான்டோ, ஆணைக்குழுவில் தெரிவித்த கூற்று தொடர்பாக அதி மேற்றாணியார் வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பாக அவர்களுக்கும் நாளை முற்பகல் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.