Header Ads



உபதேசங்களை செயற்படுத்துவது தொடர்பாக ஜனாதிபதிக்கு பௌத்த ஆலோசனை சபையின் பாராட்டு


சங்கத்தினரின் உபதேசங்கள் மற்றும் ஆலோசனைகளை செயற்படுத்துவது தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு பௌத்த ஆலோசனை சபை தமது பாராட்டுக்களை தெரிவித்துள்ளது. ஜனாதிபதி அவர்கள் பின்பற்றுகின்ற வழி முறைகள் சிறந்த மற்றும் நியாயமான சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு காரணமாக அமையுமென்று ஆலோசனை சபையின் உறுப்பினர் நாயக்க தேரர் தமது நம்பிக்கையை வெளியிட்டார். 

அரசாங்கத்தின் கொள்கைகளை செயற்படுத்துவதற்காக மகா சங்கத்தினரின் உபதேசங்கள் மற்றும் கருத்துக்களை பெற்றுக்கொள்வதன் பொருட்டு பௌத்த ஆலோசனை சபை ஒன்றை ஸ்தாபிப்பதற்கு ஐந்து மாதங்களுக்கு முன்னர் ஜனாதிபதி அவர்கள் தீர்மானித்தார். 

மகா சங்கத்தினருக்கும் ஜனாதிபதி அவர்களுக்குமிடையில் முதலாவது சந்திப்பு ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. அங்கு கொவிட் நோய்த் தொற்று தடுக்கும் செயற்பாடுகள் மற்றும் அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகளைப் பற்றி ஜனாதிபதி அவர்கள் நாயக்க தேரருக்கு தெளிவுபடுத்தினார். ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வாரத்தில் வெள்ளிக்கிழமை பௌத்த ஆலோசனை சபையை கூட்ட விரும்புவதாக தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், அதில் கலந்துகொள்ளுமாறு மூன்று நிக்காயக்களின் மகா சங்கத்தினருக்கும் அழைப்பு விடுத்தார். 

ஆலோசனை சபையின் உறுப்பினர் மூன்று நிக்காயக்களின் தேரர்கள் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ள பல்வேறு துறைசார்ந்த திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக ஆலோசனை மற்றும் உபதேசங்களை ஐந்து வாரங்களாக ஜனாதிபதி அவர்களுக்கு முன்வைத்தனர். 

நேற்று (18) மாலை 6வது தடவையாகவும் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடிய பௌத்த ஆலோசனை சபையின் மூலம் இதுவரை முன்வைத்த ஆலோசனைகளை செயற்படுத்துதல் தொடர்பாக மீளாய்வு செய்யப்பட்டது. 

தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த புராதன இடங்களை பாதுகாத்தல், குறைபாடுகளை களைந்து பிரிவெனா கல்வியின் மேம்பாட்டுக்கான செயற்பாடுகள், விகாரை காணிகளுக்கு சிக்கலற்ற பூஜா உறுதிப்பத்திரங்களை வழங்குதல், பௌத்த அறநெறிப் பாடசாலைக் கல்வி, தேசியக்கல்விக் கொள்கை, பாலர் அபிவிருத்தி, தேசிய பாதுகாப்பிற்கு முக்கியத்துவமளித்தல், போதைப்பொருள் தடுப்பு, சுற்றாடல் பாதுகாப்பு, சாசனத்தின் சிறப்பான செயற்பாட்டுக்கு வழிவகைகளை செய்தல், பௌத்த பல்கலைக்கழகங்களை கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வருதல் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளுக்கு அரசாங்கம் தமது அவதானத்தை செலுத்தி செயற்படுத்துதல் தொடர்பாக மகா சங்கத்தினர் பாராட்டுக்களையும் ஆசிர்வாதத்தையும் தெரிவித்தனர். 

வரலாற்றில் முதற் தடவையாக நான்கு இராஜாங்க அமைச்சர்களின் கீழ் கல்வி அமைச்சை கொண்டு வந்ததன் மூலம் பலமிக்க மற்றும் நிலையான எதிர்கால கட்டமைப்பை தயாரிப்பதற்கு ஜனாதிபதி அவர்கள் எடுத்த நடவடிக்கை ஆலோசனை சபையினால் பாராட்டப்பட்டது. 

தொல்பொருள் இடங்களில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள விகாரைகள் தொடர்பாக நீண்டகாலமாக நிலவி வருகின்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்காக தொல்பொருள் சட்டத்தை மறுசீரமைப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் பலரின் பாராட்டை பெற்றுள்ளதாக மகா சங்கத்தினர் சுட்டிக்காட்டினர். 

மாதத்திற்கொரு முறை கூடுகின்ற ஆலோசனை சபையின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், தமக்கும் அதிகாரிகளுக்கும் பல்வேறு துறை சார்ந்த விடயங்கள் தொடர்பாக தெளிவுகளை பெற்றுக்கொள்வதற்கு காரணமாக அமைந்ததெனவும் குறிப்பிட்டார். நிலவுகின்ற குறைபாடுகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் மேலும் குறிப்பிட்டார். 

பௌத்த ஆலோசனை சபையின் உறுப்பினர்களான மகா சங்கத்தினர் மற்றும் ஜனாதிபதியின் பிரதம ஆலோசகர் லலித் வீரதுங்க, அமைச்சுக்களின் செயலாளர்கள், நிறுவனங்களின் பிரதானிகள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.  


மொஹான் கருணாரத்ன, பணிப்பாளர், ஜனாதிபதி ஊடகப் பிரிவு

19.09.2020 

No comments

Powered by Blogger.