Header Ads



உளவு நடவடிக்கை பிரிவு, பொறுப்பதிகாரி கைது - நடந்தது என்ன..?


(எம்.எப்.எம்.பஸீர்)

பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப் பொருள் கடத்தல் காரர்களுக்கே மீள் விற்பனைசெய்தமை தொடர்பிலான விவகாரத்தில், பொலிஸ் விஷேட அதிரடிப் படையினருக்கு உள்ள தொடர்பு வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில்,  அதிரடிப் படையின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 மன்னார் பொலிஸ் விஷேட அதிரடிப் படை முகாமின், உளவு மற்றும் நடவடிக்கை பொறுப்பதிகாரியாக செயற்பட்ட  உப பொலிஸ் பரிசோதகரான அஜித் பிரேமலால் எனபவரே இவ்வாறு சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனயவுத் திணைக்களத்தினரால் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

 அவரை தற்போது நான்காம் மாடியில்  1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடை சட்டத்தின் 6 ( 1) ஆம் பிரிவின் கீழ் தடுத்து வைத்து விசாரணை செய்துவருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன கூறினார்.

பாரிய போதைப் பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பாதாள உலகத் தலைவர்களுடன் இணைந்து போதைப் பொருள் கடத்தல், விற்பனையில் ஈடுபட்டமை, ஆயுதங்களை ஒன்றுதிரட்டியமை தொடர்பில் இந்த விசாரணைகள் இடம்பெறுவதாகவும், பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்கலுக்கு அமைய  அவர் கைது செய்யப்பட்டதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன  சுட்டிக்காட்டினார்.

' பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப் பொருளை கடத்தல் காரர்களுக்கே மீற விற்பனை செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட போதைப் பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையைச்சேர்ந்த சில அதகாரிகள் ஆதாரங்களுடன் பாதுகாப்பு பெற்றுக் கொடுத்துள்ளமை தெரியவந்துள்ளது. அவர்களையும் விரைவில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவோம்.' என   பிரதி சொலிஸ்டர் ஜெனரால் திலீப பீரிஸ் கொழும்பு பிராதான நீதிவான் லங்கா ஜயரத்னவிடம்  கடந்த ஜூலை 21 ஆம் திகதி  நீதிமன்றில் வைத்து அறிவித்திருந்தார்.

 இவ்வாறான பின்னணியிலேயே, சி.ஐ.டி.யின் உதவி பொலிஸ் அத்தியட்சர்  மெரில் ரஞ்சன் லமாஹேவாவின் கீழான சிறப்புக் குழு நேற்று முன் தினம் சி.ஐ.டி.க்கு குறித்த அதிரடிப் படை வீரரை அழைத்து நள்ளிரவு வரையிலும் விசாரணை நடாத்திய பின்னர் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு அமைவாக  பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ்  நேற்று முன் தினம் இரவு 10.30 மணியளவில்  குறித்த உப பொலிஸ் பரிசோதகரைக் கைது செய்துள்ளனர்.

 தெற்கிலிருந்து கொழும்புக்கு, போதைப் பொருளினை கொண்டுவரவும், சில போலியான ஹெரோயின் சுற்றி வலைப்புக்களை முன்னெடுக்கவும்  கைது செய்யப்பட்டுள்ள போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருடன் இணைந்து எஸ்.ரி.எப். அதிகாரிகள் சிலர்  செயற்பட்டுள்ளமை வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே இந்த கைது  நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான பின்னனியில் இந்த  விவகாரத்தில் இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 11 பேர்  பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர். ஏனைய 13 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில்  வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

Powered by Blogger.