Header Ads



அங்கொட லொக்காவின் கை ரேகை இந்தியாவுக்கு அனுப்பிவைப்பு


( எம்.எப்.எம்.பஸீர்)

இலங்கையில் பல்வேறு குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்த பாதாள உலகத் தலைவனான ‘அங்கொட லொக்கா’ உயிரிழந்துள்ளாரா என்பதை உறுதிப்படுத்துவதற்கான மரபணு பரிசோதனைக்கு தேவையான மாதிரி மற்றும் கைவிரல் அடையாளங்கள் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர்   சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.  

வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய தூதரகம் ஊடாக இவை, குறித்த விவகாரம் தொடர்பில் தற்போது விசாரணைகளை முன்னெடுக்கும் சி.பி.ஐ. எனப்படும் இந்திய மத்திய குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். பொலிஸ் தலைமையகத்தில் இன்று  பிற்பகல் இடம்பெற்ற விஷேட செய்தியாளர் சந்திப்பின் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன இதனை கூறினார்.

கொலை, கொள்ளை, கப்பம் கோரல் உள்ளிட்ட பல திட்டமிட்ட குற்றங்கள் தொடர்பில்  பொலிஸாரால் தேடப்பட்டு வந்த, பிரபல பாதாள உலகத் தலைவன்  அங்கொட லொக்கா என அறியப்படும் மத்துமகே லசந்த சமிந்த பெரேராவின் மரணம் தொடர்பில் 27 வயதான அமானி தான்ஜி , 36 வயதான சட்டத்தரணி சிவகாமி சுந்தரி மற்றும் எஸ்.தியாகேஷ்வரன் ஆகிய மூவர்  சந்தேகத்தில் இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.  

அங்கொட லொக்கா நஞ்சூட்டி கொலைச் செய்யப்பட்டு அவரது உடல் எரிக்கப்பட்டு விட்டதாக இலங்கை ஊடகங்கள் வெளியிட்ட தகவலை அடுத்து, இலங்கை பொலிஸார் 2002 ஆம் ஆண்டில் 25 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைகள் தொடர்பில் பரஸ்பர தகவல் பறிமாற்றுச் சட்டத்தின் கீழ் இந்தியாவின் உதவியை அது குறித்து உறுதி செய்ய கோரியிருந்தது.

இந் நிலையிலேயே இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த இந்திய பொலிஸார்  அங்கொட லொக்கா என கருதப்படும் நபரின் உடலை எரிக்க, அவர் தொடர்பில் போலி ஆவணங்களைத் தயாரித்த குற்றச்சாட்டில் தியாகேஸ்வரனும் சிவகாமி சுந்தரி என்ற சட்டத்தரணியையும் கைது செய்தனர்.

27 வயதான அமானி தான்ஜி என்ற பெண் இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு சென்று கோயம்புத்தூர் - சேரன்மாநகரில் அங்கொட லொக்காவுடன் வசித்து வந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்த நிலையில் அவரையும் பொலிஸார் கைது செய்திருந்தனர்.

அங்கொட லொக்கா, இந்தியாவில் கொலை செய்யப்பட்ட பின்னர்  அல்லது  மரணமடைந்த பின்னர் அவரது உடல் மதுரையில் எரிக்கப்பட்டதாக கூறப்பட்ட விடயம் தொடர்பில் தற்போது இந்திய மத்திய குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

 இவ்வாறான நிலையில் இந்த விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. சி.பி.ஐ. எனப்படும் இந்திய மத்திய குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் 07 குழுக்கள்  இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், இது தொடர்பில் இரு வழக்குகளை கோவை  குற்றவியல் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள அவர்கள், இவ்விவகாரத்தில் பொலிஸாரால்  கைது செய்யப்பட்ட இரு பெண்கள் உள்ளிட்ட மூவரை தமது பொறுப்பில் எடுத்து தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி கோரியுள்ளதாகவும்  அறிய முடிகின்றது.  அது தொடர்பில் கோவை  குற்றவியல் நீதிமன்றின்  முடிவு நாளை மறுதினம்  12 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.

 மரணம் தொடர்பாக ஒரு  வழக்கும் போலி ஆவணங்களை பயன்படுத்தி தங்கியிருந்ததாகக் மற்றொரு வழக்கும் கோவை குற்றவியல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக  அறிய முடிகின்றது.


 கடந்த ஜூலை மாதம் 3 ஆம் திகதி பிரதீப் சிங் என அடையாளத்தைக் கொண்டிருந்த அங்கொட லொக்கா, நெஞ்சு வலி காரணமாக கோயம்புத்தூரில் வைத்தியசாலையொன்றில் அமானி தான்ஜி , என்ற குறித்த பெண்ணால் அனுமதிக்கப்பட்டிருந்தார். மயக்க நிலையில் இருந்த லொக்கா அவ்வாறே உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி செய்தி வெளியிட்டிருந்தன. எனினும் இலங்கையின் ஊடகங்கள் அவர் விஷம் கொடுக்கப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக செய்தி வெளியிட்டிருந்தன.

இந்த நிலையிலேயே , கைது செய்யப்பட்டுள்ள மூவரையும் 07 நாட்களுக்கு தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்கான அனுமதியை வழங்குமாறு இந்திய மத்திய குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கோரப்பட்டுள்ளது.

 இந் நிலையில்  உண்மையில் அங்கொட லொக்கா உயிரிழந்துவிட்டாரா அல்லது உயிரிழந்துவிட்டதாக கூறி நாடகமாடுகின்றாரா என்பதை உறுதி செய்ய விசாரணைகளை சி.பி.ஐ. ஆரம்பித்துள்ளது. அந்த விசாரணைகளுக்காகவே, தற்போது அங்கொட லொக்காவின் கைவிரல் ரேகை,  டி.என்.ஏ. மாதிகள்  அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

 அங்கொட லொக்கா, இறந்த பின்னர் எரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் போதும்,கடந்த ஜூலை மாதம் 3 ஆம் திகதி பிரதீப் சிங்  என்ற அடையாளத்துடன் அவர் உயிரிழந்திருந்ததாக வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவல்களுக்கு அமைய மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.

 பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவரின் தகவல் பிரகாரம்,

 இலங்கையிலிருந்து அனுப்பப்பட்டுள்ள அறிவியல் கூறு மாதிகள்,  அங்கொட லொக்கா என கருதப்படுபவரின் சடலம் தகனம் செய்யப்பட முன்னர் பெறப்பட்ட  உடல் மாதிரியில் உள்ள டி.என்.ஏ.கூறுகளுடன்  ஒத்திசைகின்றதா என ஆரயப்படவுள்ளது. என சுட்டிக்காட்டினார்.

 இந்தியாவின் எப்.பி.ஐ. விசாரணைகள் பிரகாரம், இறந்தது அங்கொட லொக்கா என அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டால், அது குறித்த சட்ட பூர்வ நடவடிக்கைகள் இலங்கையில் முன்னெடுக்கப்படும் என  அந்த அதிகாரி சுட்டிக்காட்டினார். 

No comments

Powered by Blogger.