Header Ads



கொரோனா நெருக்கடியை இலங்கை கையாண்ட விதத்தை நேரில் பாராட்டிய அமெரிக்கத் தூதுவர்


(நா.தனுஜா)

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பொதுத்தேர்தல் வெற்றியின் பின்னர் முதற்தடவையாக அவரைச் சந்தித்த அமெரிக்கத்தூதுவர் அலைனா டெப்லிட்ஸ், முந்தைய அரசாங்கத்தின் மீதான மக்களின் நிராகரிப்பை தேர்தல் முடிவுகள் காண்பிப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

2020 ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெற்றுமுடிந்த பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று நாட்டின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றுக்கொண்ட பின்னர் முதற்தடவையாக நேற்று முன்தினம் அலரிமாளிகையில் அவரைச் சந்தித்த இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ், இருநாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர தொடர்புகளை மேலும் வலுப்படுத்திக்கொள்வது குறித்தும் கலந்துரையாடியிருக்கிறார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வரலாற்று வெற்றிக்குப் பின்னர் முதற்தடவையாக அவரைச் சந்தித்தேன். இதன்போது இலங்கைக்கு எமது உதவிகளையும் ஆதரவையும் தொடர்ந்து வழங்குவதற்குத் தயாராக இருப்பதாக உறுதியளித்தேன் என்று அலைனா டெப்லிட்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அதுமாத்திரமன்றி பொருளாதார முன்னேற்றம், நல்லிணக்கம், நல்லாட்சி மற்றும் உறுதியான இறையாண்மை ஆகிய விடயங்களுக்குப் பயனளிக்கக்கூடிய வகையில் இருநாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை எவ்வாறு அடுத்தகட்டத்திற்குக் கொண்டுசெல்ல முடியும் என்பது பற்றியும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக அமெரிக்கத்தூதுவர் தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்கா பொருளாதாரம், வாணிபம், ஆட்சிநிர்வாகம், பாதுகாப்பு, அபிவிருத்தி ஆகியவற்றில் இலங்கையுடனான ஒத்துழைப்புக்களை மேலும் விரிவுபடுத்திக்கொள்வதற்கு எதிர்பார்க்கிறது என்று இச்சந்திப்பு தொடர்பில் பிரதமர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. அதேவேளை பிரதமரின் தேர்தல் வெற்றியை 'மிகவும் வெற்றிகரமான தேர்தல் பிரசாரமும் குறிப்பிட்டுக்கூறத்தக்க முடிவுகளும்' என்று வர்ணித்த அமெரிக்கத் தூதுவர், முந்தைய நிர்வாகம் நிராகரிக்கப்பட்டுள்ளமையையே தேர்தல் முடிவுகள் காண்பிக்கின்றன என்றும் கூறியதாக அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

புதிய அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து செயற்படத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்ட தூதுவரிடம், கொவிட் - 19 வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட தாக்கத்தையடுத்து பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கே அரசாங்கம் முன்னுரிமையளித்து செயற்பட்டுவருவது பற்றி பிரதமர் விளக்கமளித்தார். இதன்போது கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடியை இலங்கை கையாண்ட விதத்தைப் பாராட்டிய அமெரிக்கத் தூதுவர் இலங்கை - அமெரிக்க பொருளாதாரத் தொடர்புகள் அமெரிக்காவிற்கு மிகவும் முக்கியமானதாகும் என்றும் எடுத்துரைத்தார். மேலும் இச்சந்திப்பின் போது இலங்கையில் புதிய முதலீடுகளை ஊக்குவித்தல், ஜனநாயகக் கட்டமைப்புக்கள் மற்றும் அரசநிர்வாகத்துடன் தொடர்புடைய திட்டங்களுக்கு ஆதரவளித்தல், ஆட்கடத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றைத் தடுப்பதற்கு முக்கியத்துவம் வழங்குவதுடன் பாதுகாப்புத்துறையில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கல் ஆகிய விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.