Header Ads



2 ஆண்டுகளில் கொரோனா முடிவுக்கு வரலாம் - WHO


கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவல் இரண்டு ஆண்டுகளுக்குள் முடிவுக்கு வரும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் ஆதனோம் கெப்ரியேசஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமையன்று ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 1918ஆம் ஆண்டு ஏற்பட்ட ஸ்பானிஷ் ஃப்ளு மறைய இரண்டாண்டுகள் ஆனதாக தெரிவித்தார்.

எனினும், தற்போதுள்ள தொழில்நுட்ப முன்னேற்றங்களை கொண்டு நோய்த்தொற்று பரவலை "குறுகிய காலத்தில்" கட்டுப்படுவதற்கான வாய்ப்புள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

"மனிதர்களுக்கிடையேயான தொடர்புகள் அதிகரித்துள்ளதால், வைரஸ் பரவலுக்கான வாய்ப்பு நிறைய உள்ளது" என்று அவர் கூறுகிறார்.

"அதே சூழ்நிலையில், நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்கான தொழில்நுட்பமும், அறிவும் நம்மிடம் உள்ளது. தற்சமயத்தில் நமக்கு தேச ஒற்றுமையும், உலகளாவிய ஒற்றுமையும் மிகவும் அவசியமானது."

கடந்த 1918ஆம் ஆண்டு ஏற்பட்ட ஸ்பானிஷ் ஃப்ளு பெருந்தொற்றால் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த சுமார் ஐந்து கோடி மக்கள் உயிரிழந்தனர்.

கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் இதுவரை உலகம் முழுவதும் கிட்டத்தட்ட எட்டு லட்சம் பேர் உயிரிழந்துள்ள நிலையில், 2.27 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து மருத்துவ பாதுகாப்பு கவச உடை ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த டெட்ரோஸ், "பெருந்தொற்று காலத்தில் செய்யப்படும் இதுபோன்ற ஊழல்கள் என்னைப் பொறுத்தவரை, கொலைக்கு நிகரானது. ஏனெனில், சுகாதார பணியாளர்கள் பாதுகாப்பு கவச உடைகள் இல்லாமல் பணிபுரிவது அவர்களது உயிரையும், நோயாளிகளின் உயிரையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குவதை போன்றது. எந்தவிதமான ஊழலையும் ஏற்றுக்கொள்ள முடியாது" என்று மேலும் கூறினார்.

No comments

Powered by Blogger.