Header Ads



முஸ்லிம் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதிக் கமிஷன் இன்றேல், மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை உருவாகும்

- ஸ்ரீலால் செனவிரத்ன -

“அப்பாவிப் பெண்ணுக்கெதிராக வெறுப்பான இனவாதத்தை வெளிப்படுத்தும் சம்பத் வங்கியின் வர்க்கவாதம்“ எனும் தலைப்பில் கடந்த 02 ஆம் திகதி பாதிமா பர்ஸானா ரியாஸ் எனும் பெண்மணி சமூக ஊடகங்களில் பரவவிட்ட தெஹிவல சம்பத் வங்கியில் நடந்த சம்பவத்துடன் தொடர்புடைய வீடியோ காட்சிகள் பல்வேறு வடிவங்களின் ஊடாகவும் நாட்டினுள் முன்னோக்கி நகரும் தீவிரவாதத்தின் பல வடிவங்களையும் ஒரேயடியாக அம்பலப்படுத்துகிறது. “தெஹிவல சம்பத் வங்கியில் பேயாட்டம் ஆடிய முஸ்லிம் வஹாப்வாத ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத்தின் அங்கத்தவர்“ எனும் தலைப்பில் இதே நிகழ்வை கொழும்பு டுடே இணையத்தளம் வெளியிட்டிருந்தமை அதன் ஒரு வடிவத்தை அம்பலப்படுத்துகிறது. ஊடக வெளியில் தீவிரவாதம் போஷிக்கப்படும் விதத்தை இது காட்டுகிறது.

இந்த நிகழ்வுகளில் தெஹிவல கிளையின் பாதுகாப்பு அதிகாரியும் ஊழியர்களும் சம்பத் வங்கியின் நிர்வாக உத்தியோகத்தர்களும் பிரச்சினைக்கு முகம் கொடுத்த பெண்ணின் தரப்பும் நடந்து கொண்ட விதம் தீவிரவாதத்தைப் போஷிப்பதில் நிறுவன மட்டத்திலும் பொதுமக்கள் மட்டத்திலும் காட்டும் பங்களிப்பை அம்பலப்படுத்தும் ஒரு வடிவமாக அது அமைந்தது. நிகழ்வின் எதிர்வினையாக இருதரப்பினரதும் சமயத் தலைவர்கள் நடந்து கொண்ட விதம் மற்றுமொரு வடிவத்தை அம்பலப்படுத்துகிறது.

வீடியோவில் காட்டப்படுவதன்படி தலையையும் முகத்தையும் மூடிய கறுப்பு நிற அங்கி அணிந்து வங்கியின் கிளைக்கு ஏதோ ஒரு கொடுக்கல் வாங்கலுக்காக வந்த முஸ்லிம் பெண்ணுக்கு வங்கியின் பாதுகாப்பு அதிகாரியால் நிகழ்த்தப்பட்ட இடையூறே நிகழ்வுக்குக் காரணமாக அமைந்தது. வீடியோ காட்சி அந்த இடையூறின் பின்னர் அந்தப் பெண்மணிக்கு ஆதரவாக அந்த இடத்துக்கு வந்த இளைஞர் வீடியோ எடுப்பதற்காகவென்றே உருவாக்கிய காட்சியுடனேயே ஆரம்பிக்கிறது.

“இதுபற்றிப் பேசுவதற்கு உள்ளே எடுக்கிறார்களில்லை. இவங்களுடைய ஷோலை கழற்றிவிட்டு வரட்டாம். பத்து வருடங்களாக இவங்கட அக்கவுன்ட் சம்பத் வங்கியில் இருக்கிறது. இப்ப மட்டும் ஷோலைக் கழற்றிவிட்டு உள்ளே வரச் சொல்றாங்க. வங்கி மனேஜர் அப்படித்தான் சொல்லியிருக்கிறாராம். இதைப் பற்றிப் பேசுவதற்கு இன்சாஜாக உள்ள யாரையாவது வரச் சொன்னால் ஒருத்தருமே இங்க வாரங்கல்ல.“

இப்படி விளக்குகின்ற அந்த இளைஞருக்கு அருகில் சம்பவத்துக்கு முகம் கொடுத்த பெண்மணியும் நின்றிருந்தார். அவர் உடம்பை முழுமையாக மறைக்கின்ற மேலங்கியொன்றை அணிந்திருந்தார். தலையையும் மூடுகின்ற வகையில் மறைப்பொன்றை அணிந்திருந்த அவரது கையில் கறுப்புத் துணியொன்றிருந்தது. அது முகத்தை மறைப்பதற்காகக் கொண்டு வந்து பாதுகாப்பு அதிகாரிகளின் தலையீட்டால் நீக்கப்பட்ட நீக்கப்பட்ட துணி.

இளைஞரின் எதிர்ப்புக்கு மத்தியில் வங்கிக் கிளையின் வெளியே வந்த பெண்மணியொருவர் (பாதுகாப்பு அதிகாரி என பின்னால் தெரிய வந்தது) குறித்த பெண்மணியின் அடையாள அட்டையைக் கேட்டபோது இளைஞர் அதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தார். வேறு யாரிடமாவது வங்கியினுள் நுழையும் போது அடையாள அட்டையைப் பரிசோதிக்காமல் இந்தப் பெண்மணியிடம் மட்டும் ஏன் கேட்க வேண்டும் என அவர் கேட்கிறார். வங்கிக்கு வரும் சில வாடிக்கையாளர்களும் இளைஞருக்கு எதிர்ப்புக் காட்டுவதோடு சில நிமிடங்களாகத் தொடர்ந்த இந்தச் சூடான நிலை வங்கி ஊழியர் ஒருவர் வந்து முஸ்லிம் பெண்மணியை உள்ளே அழைத்துச் சென்றதுடன் நிறைவுறுகிறது. அவர் உள்ளே நுழையும் போது அடையாள அட்டை சோதிக்கப்படவும் இல்லை. அந்தப் பெண்மணியும் பாதுகாப்பு அதிகாரி களையச் சொன்ன முகக்கவசத்தையும் தலை மறைப்பையும் அணிந்து தான் உள்ளே சென்றார். இறுதிப் பகுதி சினிமாவில் முடிவது போல இளைஞர் நிகழ்வின் தொகுப்பொன்றை வழங்குவதுடன் முடிவடைகிறது.

நிகழ்வு தொடர்பில் சரியான மதிப்பீடொன்றை நீதிமன்றத் தீர்ப்பிலும் வழங்க முடியாத அளவுக்கு திறமையான வாதத்தை நான்கு பக்கங்களிலும் இருந்து முன்வைக்கும் அளவுக்குரிய வாதத்திறமை அங்கிருந்தது. இந்த வகையில் தான் ஊடக வெளியி்ல் இந்நிகழ்வு முன்சொன்ன விதத்தில் ஒருதலைப்பட்சமாக வெளியிடப்பட்டது. ஆனாலும் நடுநிலையிலிருந்து பார்க்கும் பொழுது அனைத்துத் தரப்பினதும் நடவடிக்கைகள் பொறுப்பற்றதாகவும் கவலை தருவதாகவும் இருந்தது.

குறிப்பாக இஸ்லாமியத் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதல் தொடரின் பின்னர் அவ்வளவு காலமும் நிலவிய சிங்கள முஸ்லிம் சகோதர உறவு மீண்டும் ஒன்றிணைக்க முடியாத அளவு சுக்கு நூறாகியது. அதுவரை வெறும் சிங்கள பௌத்த தீவிரவாதத்துக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்த முஸ்லிம் எதிர்ப்பு இதன் மூலம் செல்லுபடியானதாக்கப்பட்டதோடு, அனைத்து முஸ்லிம்களும் தீவிரவாதிகள் என்ற சந்தேகத்துடன் பார்க்கும் அளவுக்கு சிங்களவர்கள் மட்டுமன்றி தமிழர்களும் தள்ளப்பட்டார்கள். ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் நாட்டில் முஸலிம் சமூகத்துக்கெதிராக உருவாகவிருந்த பாரிய தாக்குதல் கருதினால் மல்கம் ரஞ்சித் உட்பட பொறுப்பான சமயத் தலைவர்களின் சிறப்பான தலையீட்டினால் தடுக்கப்பட்டது. ஆனாலும் அங்கு உருவான முஸ்லிம் எதிர்ப்பு இப்பொழுதும் கூட சமூகத்தின் அடிமட்டம் வரை பரவி வருவதோடு எந்த வேளையிலென்றாலும் கிளர்ந்தெழும்பி பாரிய சேதமொன்றை உருவாக்கும் நிலையிலேயே இருக்கிறது. இந்த நிலையில் நாட்டின் அனைத்துப் பிரஜைகளும் நிறுவனங்களும் அரசும் இது போன்ற பாரிய அனர்த்தங்களைத் தவிர்க்கும் நோக்கிலேயே செயல்பட வேண்டும். இதற்காக அனைத்துத் தரப்பும் ஏதொவொரு விட்டுக் கொடுப்பைச் செய்ய வேண்டியிருந்தாலும் எந்தத் தரப்பும் தமது பொறுப்பை நிறைவேற்றுவதாகத் தெரியவில்லை. இவ்வாறானதொரு பாரிய அழிவுக்கு ஏதோவொரு வகையில் அனைத்துத் தரப்பும் வழியமைக்கிறார்கள் என்பதே கண்ணுக்குப் புலப்படாமல் தெரிகிறது.

முஸ்லிம் பெண்கள் அண்மைக்காலமாக அணியும் முழு உடம்பையும் மறைக்கும் கறுப்பு மேலங்கி தொடர்பில் ஏனைய சமூகங்களிடையே எதிர்ப்புணர்வு இருப்பது முஸ்லிம் சமூகம் அறியாததல்ல. இவ்வாறான பின்னணியில் உச்சபட்சமாக சமூகத்தின் எதிர்ப்புக்குள்ளாகாத வண்ணம் செயற்படும் பொறுப்பு முஸ்லிம் சமூகத்துக்கு இருந்தாலும் எந்தளவு தூரத்துக்கு அவர்கள் இதனை நிறைவேற்றுகிறார்கள் என்பது சர்ச்சைக்குரியது. இதற்கு முன்னர் வத்தளை அங்காடியொன்றில் இது போல ஆடை அணிந்த முஸ்லிம் பெண்ணொருவருக்கும் ஒருவர் எதிர்ப்புத் தெரிவித்ததால் சர்ச்சைக்குள்ளானதோடு அது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகவும் மாறியது. இந்த விடயத்தில் முஸ்லிம் தரப்பு சொல்லுகின்ற நியாயம் என்னவென்றால் தமக்கு விருப்பமான ஆடையை அணிந்து தெருவில் செல்லும் உரிமை தமக்கு இருக்க வேண்டும் என்பது. அதற்குத் தடையாக இருப்பது மனித உரிமை மீறல் என்பது. இதற்கு முஸ்லிம் எதிர்ப்புத் தரப்பினர் தமக்கு விருப்பமான ஆடையை அணிந்து வீட்டில் இருக்கலாம், தெருவில் செல்லும் போது பொது இடங்களில் சஞ்சரிக்கும் போது யாருக்கும் அதற்கான அவகாசம் இல்லை என்கிறார்கள். இரண்டு பக்கங்களிலும் வாதங்கள் இருந்தாலும் சமூக நல்லிணக்கத்துக்காக ஒவ்வொருவரும் நிறைவேற்ற வேண்டிய தத்தமது பொறுப்புக்கள் என்னவெனத் தேடிப் பார்த்து அதனை நிறைவேற்ற வேண்டியது        மிக முக்கியமானதல்லவா ?

நிறுவன மட்டங்களில் காரியங்கள் நடக்கும் விதமும் பிரஜைகள் நடந்து கொள்ளும் விதமும் வெவ்வேறானதல்ல. இந்த நிகழ்வில் பாதுகாப்பு அதிகாரியின் ஆரம்ப நிலைப்பாடு சரியென்றால் பின்னர் வங்கி அதிகாரிகள் நடந்து கொண்ட விதம் பிழையானது. வங்கி அதிகாரிகள் நடந்து கொண்ட விதம் பிழையென்றால் பாதுகாப்பு அதிகாரியின் நிலைப்பாடு பிழையானது. ஆரம்பத்தில் முகக்கவசம், தலை மறைப்புக்களை நீக்காமல் வங்கிக்குள் வருவதற்கு இடம் கொடாமல் நடந்து முடிந்த பின்னர் நுழைவதற்கு அனுமதிப்பது முரண்நகையானது.

இது தொடர்பில் தெரிந்து கொள்வதற்காக பல தடவைகள் தெஹிவல சம்பத் வங்கிக் கிளையைத் தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் அது சாத்தியமாகவில்லை. பின்னர் பாதுகாப்பு அதிகாரி நடந்து கொண்ட விதம் சரியானது என வங்கி அறிக்கை வெளியிட்டிருந்தது. வங்கி மீதான அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் அந்த அறிக்கையினூடாக மறுத்திருந்தனர். எவ்வாறாயினும் நாட்டில் தனியான முஸ்லிம் வங்கியொன்று இருப்பதுவும் அரச வங்கிகளில் கூட தனியான முஸ்லிம் அலகொன்று திறக்கப்பட்டிருப்பதுவும் இரகசியமல்ல. அதேபோல சம்பத் வங்கி சிங்கள பௌத்தர்களின் வங்கியாகக் கருதப்படுவதுவும் இரகசியமல்ல. பிரஜைகளுக்கு எந்தவிதத்திலும் குறைச்சலின்றி நாட்டில் நிறுவன மட்டங்களிலும் இனவாதமும் தீவிரவாதமும் இப்படித் தான் ஊட்டி வளர்க்கப்படுகிறது.

இந்தச் சம்பவத்தின் பின்னர் சம்பத் வங்கியிலுள்ள கணக்குகளை நீக்கிக் கொள்ளும் படி ஜம்இய்யதுல் உலமா முஸ்லிம் சமூகத்துக்கு அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியானாலும் இந்தத் தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனாலும் சமூக வலைத்தளங்களிலான கலந்துரையாடல்களில் சம்பத் வங்கியிலுள்ள கணக்குகளை முஸ்லிம்கள் நீக்கிக் கொள்ள வேண்டும் என முஸ்லிம்கள் அறிவுறுத்தப்பட்டதாகப் பேசப்பட்டது. இது தற்போது நடைமுறைப்படுத்தப்படுவதாக இருக்கலாம். முஸ்லிம் எதி்ர்ப்பில் முன்னணியில் இருக்கின்ற பிக்குகள், முஸ்லிம் வங்கிகளை மட்டுமன்றி மத்ரஸாக்கள் போன்ற கல்வி நிறுவனங்களையும் மூடிவிட வேண்டும் என்று சொல்கிறார்கள். இவை வஹாப்வாதத்தின் அடையாளங்கள் என அவர்கள் கூறுகிறார்கள்.

இவ்வாறு அனைத்து வழிகளிலும் இனவாதமும் தீவிரவாதமும் வளர்க்கப்படும் பின்னணியில் அரச தரப்பும் மௌனம் சாதித்து வருகிறது. ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ தான் சிங்கள பௌத்த வாக்குகளால் வெற்றி பெற்ற ஜனாதிபதி என அடிக்கடி நினைவூட்டிக் கொண்டிருக்கிறார். ஆனாலும் ஏனைய இனங்களுக்கும் மதங்களுக்கும் வேறுபாடு காட்டப் போவதில்லை எனவும் அவர் கூறுகிறார். ஆனாலும் பெருவாரியான பிரச்சினைகளின் போது விஷேட ஜனாதிபதி ஆணைக்குழு நியமித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி இந்த விடயத்தை எப்படித் தவறவிட்டார் என்பது கேள்விக்குறியதே. உண்மையில் இந்த விடயத்தை விசாரித்து நாட்டின் இனங்களுக்கிடையேயான நீண்ட கால நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தும் செயற்பாடொன்று அரச தலையீட்டில் தாமதிக்காது முன்னெடுக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் அதிக காலம் செல்வதற்கு முன்பே தமிழர்களுக்கு நடந்த 83 கறுப்பு ஜூலை போன்ற வரலாற்றுத் தவறு மீண்டும் முஸ்லிம்கள் தொடர்பில் நடப்பதற்கு இடமிருக்கிறது. இதுவரைக்கும் அந்த நெருப்பை மூட்டுவதற்குத் தேவையான வைக்கோல் அளவுக்கதிகமாகவே திரட்டி வைக்கப்பட்டிருக்கிறது.

நன்றி – ராவய     +  மீள்பார்வை

5 comments:

  1. May Alkah bless our country.

    ReplyDelete
  2. ஆளடையாளத்தை நிரூபிக்க, தனது முகக் கவசத்தை (நிகாபை) நீக்க உடன்பட்ட அச்சகோதரியிடம் தனது சோலையும் (தலை மறைப்பையும்) நீக்குமாறு கேட்டதே இங்குள்ள பிரச்சினை.

    முகம், கரங்கள் தவிர்ந்த ஏனைய தலைமுடி உட்பட்ட பகுதிகளை  பொது வெளியில் மறைப்பது முஸ்லிம் பெண்களுடைய அடிப்படைக் கடமை.  பிற ஆண்களால் கவரப்படாதிருப்பதற்காகவே அவர்கள் இவ்வாறும், இன்னும் கருப்பு நிறத்திலும் அணிகின்றனர்.

    இச்சின்ன விடயத்தை சரியாக உரியவர்களுக்குப் புரிய வைப்பதே 'ராவய' போன்ற ஊடகங்களுக்கு மதிப்பைத் தரும்.

    ReplyDelete
  3. இந்த மகிபால், எல்லாவற்றிலும் அதிகப் பிரசங்கித் தனமாகவே நடந்து கொள்வது போன்றுள்ளது.
    கறுப்புச் சீலையால் தான் சுற்ற வேண்டும் என்ற சட்டம் எங்கிருந்து வந்த்தோ தெரியவில்லை.
    அரசியலிலும் இவ்வாறு தான் தவழுகின்றார்.ஓதலில் சற்று சறுக்கலாக்கும்.

    ReplyDelete
  4. கட்டுரையில் முஸ்லிம் தீவிரவாதம் என இலங்கையில் சிங்களவரும் ஈஸ்ட்டர் தாக்குதலின் பின் தமிழர் சிலரும் குறிப்பிடுவது வஹாப்வாதம் என கோடிடப் படுள்ளது.இதுபற்றி ராவய விளக்கமாக எழுதுவது முக்கிய மாகும்.

    ReplyDelete
  5. @ Brother Mohamed Lafir

    இதர நிறங்கள் கவர்ச்சிகரமாக இருக்கும்.  அணிவோரைக் காணத் தூண்டும்.  அதனால்தான் இங்கு கருப்பு ஓர் தெரிவாகிறது.  பெண்களை மறைப்பது தொடர்பான குர்ஆன் வசனம் இறங்கியதில் இருந்து அது நடைமுறையில் உள்ளது.

    சரணாகதி அரசியலையும், அநீதிக்கு உடந்தையாவதையும், கோழைத்தனத்தையும் இஸ்லாம் என்றுமே விரும்பியதில்லை.  முஸ்லிம்கள் எவரும் தம்மை எரிக்க தாமே வாக்கு கொடுப்பார்களா?

    புனித குர்ஆனை ஓதுவதோடு நிறுத்திக் கொள்வதால்தான் இத்தனைப் பிரச்சிகளுக்கும் காரணம். அதன் பொருள் அறிந்து நடப்பதற்காகவே அது அருளப்பட்டுள்ளது.  அது அகில உலகத்தாருக்குமான பொதுச் சொத்து.

    அதனைக் கற்பது, போதிப்பது, பிரச்சினைகளுக்கு அதிலிருந்து தீர்வுகள் பெற்றுக் கொடுப்பது ஓர் முஸ்லிமின் கடமையாகும்.

    ReplyDelete

Powered by Blogger.