Header Ads



ஜனாசா எரிப்பு, நிரந்தரம் அல்ல...!


- Fazlin Wahid -

சவுதி அரேபியா நாட்டில் இஸ்லாமிய சட்டம் தான் முழுமையாக அமுல்படுத்தப்படுகின்றது. அதனை அமுல் படுத்தும் விதத்தில் சில முரண்பாடுகள் இருந்தாலும் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம் அது இஸ்லாமிய சட்டங்களை அமுல்படுத்தப்படும் ஒரு நாடு என்பதாகும். இதேபோல் ஈரான் நாடும் இஸ்லாமிய சட்ட வரையறைக்கு உட்பட்டதாக ஆட்சியை நடாத்துகிறது என்பதே பொதுவான கருத்து. சவுதியில் சுன்னி முஸ்லீம்களும் ஈரானில் ஷியா முஸ்லிம்களும் அதிகமாக உள்ளனர் .அதேபோல் பாகிஸ்தானை எடுத்துக்கொண்டால் அங்கும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இஸ்லாமிய சட்டமே முழுமையாக அமுல் நடத்தப்படுகின்றது .

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் இஸ்லாமிய சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஆட்சியே நடைபெறுகின்றது. சவுதியில் வாழும் ஒரு சிறுபான்மை இனத்தவர் சிலை வணக்கத்தை செய்தால் மரண தண்டனை வழங்கப்படுகின்றது. ஈரானிலும் இதே நிலையே .பாகிஸ்தானில் மத நிந்தனை என்று வரும்போது கூட மரண தண்டனை வழங்கப்படுகின்றது .எனவே ஒவ்வொரு நாட்டிலும் அந்த நாட்டில் இருக்கும் பெரும்பான்மை இனத்தவரின் ஆசாபாசங்களுக்கு இணங்கவே ஆட்சி அமைகின்றது. அந்தந்த நாட்டில் இருக்கும் பெரும்பான்மை இனத்தை திருப்திப்படுத்தும் முகமாகவே ஆட்சியாளர்களும் தீர்மானங்களை எடுப்பர். 

சிலை வணக்கம் தங்களது  மதத்துக்கு அப்பாலுள்ள விடயமென்று சவுதி அரேபியாவில் உள்ள பௌத்தர் ஒருவர் போராட முடியாது. ஈரானிலும் இதே நிலைதான். சவுதி மன்னர் சிலை வணக்கத்தை அனுமதித்தால் அவரது ஆட்சியே கவிழ்ந்துவிடும் எல்லா நாடுகளிலும் அதே நிலைதான்

இலங்கையைப் பொறுத்தவரையிலே சிறுபான்மை மக்களுக்கு அவரவர் மதங்களை பின்பற்றுவதற்கு மத சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த சுதந்திரமானது எல்லை படுத்தப்பட்டது. எந்த ஒரு சிறுபான்மை இனத்துக்கும் தனது மதத்துக்கு உரிய சட்டத்தை முழுமையாக அமல்படுத்தும் அதிகாரம் இல்லை. இது இலங்கையில் மட்டுமல்ல சர்வதேச ரீதியாக பல நாடுகளிலும் இருக்கும் நிலையாகும்..
ஆனால் இலங்கையிலுள்ள முஸ்லீம்களுக்கு அவர்களின் மத சுதந்திரம் ஏனைய நாடுகளிலுள்ள சிறுபான்மை இனத்தவருக்கு வழங்கப்பட்டிருக்கும் சுதந்திரத்தைவிட சற்று அதிகமாகவே வழங்கப்பட்டுள்ளது என்பதை காணலாம். விவாக விவாகரத்துச் சட்டம் வாரிசுரிமைச் சட்டம் போன்ற விடயங்களில் முழுமையான இஸ்லாமிய சட்டத்தை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் வழிவகுத்துள்ளது

 அவ்வப்போது வரும் அரசாங்கங்கள் ஒரு சில விடயங்களில் இஸ்லாத்துக்கு முரணான முஸ்லிம் மக்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் விடயங்களில் கூட முஸ்லிம் மக்களின் அபிலாசைகளை பொருட்படுத்தாது சில சட்டங்களை அல்லது செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்கின்றது .1977ஆம் ஆண்டு தேர்தலில் அமோக வெற்றியீட்டிய ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் உலகிலுள்ள முஸ்லீம்களுக்கு எதிரியாக இருக்கும் பலஸ்தீன முஸ்லிம் மக்களை உயிருடன் எரியூட்டும் இஸ்ரேல் அரசாங்கத்தின் தூதுவராலயத்தை இலங்கையில் திறப்பதற்கு முன்னோடியாக இஸ்ரேல் நலன்காக்கும் பிரிவு என்று ஒன்றை ஆரம்பித்தது. அன்றைய அரசாங்கத்தில் ஏ சி எஸ் ஹமீட் ,எம்.எச். மொகமத் பாக்கீர் மாக்கார் போன்ற பலம் வாய்ந்த முஸ்லீம் அமைச்சர்கள் இருந்தாலும் அவர்களிடம் ராஜினாமா கடிதங்களை கையில் வைத்துக்கொண்டு ஜெயவர்தனா அவர்கள் செயற்பட்டார். அதன் பின்னர் வந்த தேர்தல்களில் முஸ்லிம் மக்கள் அதனை பொருட்படுத்தாது ஆயிரத்து தொள்ளாயிரத்து 94 வரை UNP அரசாங்கத்தையே ஆதரித்து வந்தனர். அந்த 17 வருட ஆட்சிக்காலத்தில்தான் கிழக்கு மாகாணத்திலே முஸ்லிம் மக்கள் கிராமம் கிராமமாக படுகொலை செய்யப்பட்டனர். உயிருடன் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். ஆர் பிரேமதாசா ஜனாதிபதி அவர்கள் வழங்கிய ஆயுதங்களைக் கொண்டு கிழக்கில் 600க்கும் மேற்பட்ட முஸ்லிம் பொலிஸ்ஸ் உத்தியோகத்தர்கள் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டனர்
அத்தனை அராஜகங்களையும் சகித்துக்கொண்டு. முஸ்லிம் மக்கள் தொடர்ந்தும் ஐக்கிய தேசிய கட்சி மீதான தமது ஆதரவையும் விசுவாசத்தையும் குறைக்கவில்லை .காரணம் அன்று ஆட்சியில் இருந்தது  ஐக்கிய தேசியக் கட்சி என்பதனாலாகும்.

 தேர்தல்களில் முஸ்லிம் மக்கள் அதிகளவாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்தாலும் சுதந்திர கட்சியின் பக்கமும் ஓரளவு வாக்குகளை ஜனாதிபதித் தேர்தலிலும் ஏனைய தேர்தல்களிலும் வழங்கினர்.ஆனால் இரண்டாயிரத்து 2015 ஜனாதிபதித் தேர்தலிலும் அதன் பின்னர் வந்த பொதுத் தேர்தல்களிலும் 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலிலும் 95 வீதத்துக்கும் அதிகமான முஸ்லிம் மக்கள். யு என் பி தலைமையிலான கட்சிக்கு ஆதரவு அளித்துள்ளனர்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலிலே கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் அமோக வெற்றி ஈட்டினார். அவரின் வெற்றியில் சிறுபான்மை சமூகம் மிகச்சிறிய அளவிலேயே தமது பங்களிப்பை செய்துள்ளனர் என்பது தெளிவான ஒரு விடயம்.

தமக்கு முஸ்லிம் மக்கள் அல்லது சிறுபான்மை மக்கள் ஆதரிக்க வில்லை என்பதற்காக கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் சிறுபான்மை மக்களுக்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இந்நாட்டில் வந்த நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதிகளில் மிகச் சிறந்த ஆளுமை கொண்ட ஒருவர் என்றால் அது மிகையாகாது. மக்கள் நலன்களை முன்னிறுத்தி தமது அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றார் எல்லா விடயங்களிலும் அந்தந்த விடயங்களில் அனுபவம் வாய்ந்த துறைசார் வல்லுநர்களின் ஆலோசனையின் படியே செயற்படுகின்றார் வெறுமனே அரசியல்வாதிகளின் ஆலோசனைக்கு ஏற்ப தமது தீர்மானங்களை அவர் மேற்கொள்வதில்லை. 

உலகளாவிய ரீதியில் இருக்கும் இன்னும் உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் ககொரோனா விடயத்திலும் அவர் சுகாதாரத் துறை சார்ந்தவர்களின் ஆலோசனைப்படியே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் அதனால்தான் இலங்கையில் கொரோனா  இன்றுஉலகில் மற்ற எல்லா நாடுகளையும் விட சிறப்பாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தக்  நோயின் காரணமாக உயிரிழந்த உடல்களை எரிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை நிபுணர்கள் விடாப்பிடியாக உள்ளனர் அந்த நிபுணர்கள் என்ன நோக்கத்தில் அவ்வாறான பரிந்துரையை செய்தது என்பது அவர்களுக்குத்தான் தெரியும். உலக சுகாதார ஸ்தாபனம் உடல்களை புதைப்பதற்கு அனுமதியளித்துள்ளது என்ற விடயமும் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய இருந்தாலும் நிபுணர்களின் கருத்து என்பதால் இதற்கு மாறாக ஜனாதிபதி அவர்கள் தனது தீர்மானத்தை எடுப்பதற்கு தயாராக இருக்கவில்லை. 

உடல்களை எரிக்கும் விடயத்தில் முஸ்லிம் சமூகம் தமது மத அடிப்படையில் அது முரணானது  என்ற காரணத்தினால் ஏற்றுக்கொள்ளும் நிலைப்பாட்டில் இல்லை.அதே நேரம் சுகாதார நிபுணர்களின் பரிந்துரைக்கு  மாறாக சடலங்களை புதைக்க முடியும் என்ற  தீர்மானத்தை ஜனாதிபதி எடுத்து இருந்தால் சிலவேளைகளில்.கொவிட்19 மேலும் நாடளாவிய ரீதியில் பரவுவதற்கு காரணம் முஸ்லிம் சமூகம் என்ற குற்றச்சாட்டை எம் மீது பெரும்பான்மை சமூகம் போடவும் முடியும்..அதன் மூலம் மேலும் எமது சமூகம் எதிர்ப்புகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை உருவாகியிருக்கலாம்.முள்ளை முள்ளால் தான் அகற்ற வேண்டும்.இந்த உடல் எரிப்பு என்ற விடயம் தற்காலிகமான தீர்வு ஆகும்.இவ்வாறு இறுதிச் சடங்குகள் நடைபெறும் முறையில் பெரும்பான்மை சமூகமும் பூரண திருப்தி அடையவில்லை.ஏனைய சமூகங்களின் நிலையும் அவ்வாறுதான்.ஏனைய சமூகங்களுக்கும் எமக்கும் இடையிலுள்ள வேறுபாடு இஸ்லாமிய சட்ட திட்டங்களுக்கு முரணான செயற்பாடுகளுக்கு நாங்கள் எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை என்பதாகும்.

சில நேரங்களில் நாங்கள் விரும்பாத அனுமதிக்கப்படாத விடயங்களை கட்டாயம் ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும்.ஆபத்தான வேளைகளில் பன்றியிறைச்சியைக் கூட உண்பதற்கு இஸ்லாம் அனுமதித்துள்ளது.பள்ளிவாயல்களைமூடி ஐவேளைத் தொழுகையை மட்டுமல்ல ஜும்மா தொழுகைகளையும் தவறிவிட்டோம்.இன்றும் தொழுகையில் சமூக இடைவெளிகளைப் பேண வேண்டிய கட்டாய நிலை காரணமாக ஷைத்தான்களை இடையில் வைத்துக் கொண்டுதான் தொழுகின்றோம்.இவையெல்லாம் நிரந்தரமானது அல்ல என்று புரிந்து கொள்ளும் சமூகம் ஜனாசா எரிப்பு  விடயத்தில் மட்டும் சற்று ஆவேசத்துடன் செயற்பட்டது.ஏனைய விடயங்களை தாங்கக் கூடிய எமக்கு ஒருவரின் பிரிவு தாங்க முடியாததுதான்.இதனை வைத்து குறுகிய அரசியல் லாபத்தை தேட முனைகின்றனர் சிலர்.

 எதிர்க்கட்சி ஆட்சியில் இருந்தால் கூட இவ்வாறான நிலை தோன்றியிருக்கலாம்.அடுத்து வரும் 5 ஆண்டுகளுக்கு நாட்டை ஆளப் போவது கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கமே.முஸ்லிம் சமூகம் அரசை எதிர்த்து ஏதாவது சாதிக்க நினைக்கும் என்றால் அது வெறும் பகற் கனவே.நாங்கள் அரசாங்கக் கட்சியுடன் இணைந்து பயணம் செய்வதன் மூலம் மட்டுமே மத, கல்வி , கலாச்சார , பொருளாதார துறை அபிவிருத்திகளை உரிமையுடன் கோரலாம். அடுத்து வரும் ஐந்து வருடங்கள் நாம் புறக்கணிக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட , ஓரங்கட்டப்பட்ட சமூகமாக இருப்பதா அல்லது தலை நிமிர்ந்து வாழும் சமூகமாக இருப்பதா என்பதைத் தீர்மானிக்கப் போவது ஜனாதிபதியின் கட்சிக்கு வழங்கும் ஆதரவைப் பொருத்தே உள்ளது..ஆகவே வெறுமனே வாக்கு வேட்டைகளுக்காக வரும் கோஷங்களை வைத்து ஆவேசத்துக்கு உள்ளாகாமல் சிந்தித்து செயல்படும் சமூகக் கடமை நம் ஒவ்வொருவருக்கும் உண்டு.அது சமூகத்தின் நன்மையை முன்னிலைப் படுத்தியதாக இருக்க வேண்டும்.

8 comments:

  1. யாழ் முஸ்லீம் இணையம் இந்த நாத்திகவாதியின் அரைவேக்காட்டுத்தனமான கட்டுரைகளை பிறப்பித்து முஸ்லீம் சமூகத்திற்கு நீங்கள் கூறவருவது தான் என்ன? முகநூலில் பத்துபேர் கூட வாசிக்காத இவனுடைய கட்டுரையை ஒரு பொறுப்பான ஊடகமான நீங்கள் மட்டும் தூக்கிப்பிடிப்பது வருத்தமாக உள்ளது

    ReplyDelete
  2. ஓர் முஸ்லிம் இறந்தால் குளிப்பாட்டுவது, கபன் ஆடை அணிவிப்பது, தொழுவிப்பது மற்றும் நல்லடக்கம் செய்வது இறைவனது கட்டளைகளாகும்.

    தகுந்த காரணங்கள் இன்றி இக்கட்டளைகளை செய்யாது விடுவது அவ்வூரார் மீதே பாவமாகிறது. 

    Covid-19 ஆல் பாதிக்கப்பட்டு இறந்த உடல்களை இலங்கை அரசாங்கம்,  ஐக்கிய நாடுகள் சபையின் பணிப்புரைகளையும் மீறி, இந்த உலகத்தின் எந்த அரசாங்கமும் செய்யத் துணியாத வகையில், சம்பந்தப்பட்ட குடும்பத்தினரது அடிப்படை மார்க்க ரீதியான உரிமைகளையும் மீறி பலவந்தமாக எரிக்கின்றது. 

    அதற்கு அவர்கள் கூறும் காரணம் அவ்வுடல்களை உயிரியல் ஆயுதங்களாக (Biological weapons) நாம் பாவிக்க முடியுமாம்.  அவ்வாறு எந்தவொரு நடவடிக்கையிலும் இந்நாட்டில் எந்த முஸ்லிமும் ஈடுபட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை. 

    அவ்வாறு அவர்கள் சந்தேகித்தால், பாதுகாப்புப் படையின் மேற்பார்வையில் நல்லடக்கம் செய்ய அனுமதித்திருக்கவும் முடியும்.

    குடும்பத்தில் ஒருவரது பிரிவு என்பது  அவர்களது வாழ்வில் தாங்கக் கடினமான அதி கவலை தரும் தருணமாகும்.  இவ்வாறான சந்தர்ப்பங்களில் இன மத வேறுபாடின்றி அனுதாபம் தெரிவிக்கும் மனிதாபிமானத்தையே நாம் கண்டு வந்திருக்கிறோம்.  அப்பேர்ப்பட்ட நிலையில் இருக்கும் அவர்களது கவலையை தூசிக்கும் கணக்கெடுக்காது அந்த ஜனாஸாவை வெந்த புண்ணில் வேலை குத்துவது போன்று பலாத்காரமாக எரிப்பதை எவர்தான் தங்கிக் கொள்வர்? இந்தக் காட்டிமிராண்டித்தை எவ்வாறு நியாயப்படுத்த முடியும்? 

    அற்ப உலக ஆதாயங்களுக்காக  இவர்களுக்காக வக்காலத்து வாங்கும் விரல்விட்டு எண்ணக்கூடிய முஸ்லிம்கள் எந்த முகத்தோடு அல்லாஹ்வைச் சந்திக்கப் போகிறார்கள்?

    இஸ்லாமிய சமூகம் என்பது ஓர் உடலுக்கு ஒப்பானது.  130 கோடி முஸ்லிம்களைப் பகைத்துக் கொண்டும் உள்நாட்டிலேயே எதிரிகளை உருவாக்கிக் கொண்டும் ஒரு நாட்டை எவ்வளவு காலத்துக்கு எவ்வாறு ஓட்டப் போகிறார்கள் என்பதுதான் கேள்வி.

    இறை கட்டளைக்கு எதிராக போர் தொடுத்துள்ளோரை அவனே பார்த்துக்கொள்வான்.

    ReplyDelete
  3. அடிமை என்றால் இப்படி தான் இருக்க வேண்டும்...

    ReplyDelete
  4. பொதுஜன பெரமுனையை தோற்றுவித்தவர்களிலும்அதற்கு ஆதரவு தெரிவிப்பவர்களிலும் உள்ள கடும்போக்காளர்கள் கடந்த காலங்களில் இருந்து சொல்லி வருவதெல்லாம் இந்த நாட்டிலே எல்லோருக்கும் ஒரே சட்டம்தான் இருக்க வேண்டும் அவ்வாறான நடைமுறையை ஏற்படுத்த வேண்டும் என அடிக்கடி கூறிவந்தார்கள்.ஆனால் தற்போதுள்ள அரசியல் சட்டங்கள் அதற்கு இடமளிக்க கூடியதாக இல்லை.அத்துடன் பாராளுமன்றமும் இல்லை.ஆனால் கொரோனாவை வைத்து அதன் மூலம் மரணித்த உடல்களை எரிப்பதன் ஊடாக எல்லோருக்கும் ஒரே சட்டம் என்ற பெளத்த கடும் போக்காளர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான முன்னேற்பாடாக இது அமைகின்றது என்ற அச்சம் முஸ்லீம் சமூகத்துக்கு ஏற்பட்டுள்ளது.ஏனென்றால் 180 க்கும் அதிகமான நாடுகள் பின்பற்றாத ஒன்றை எமது நாடு மட்டும் விடாப்பிடியாக செய்கின்றது என்பதை எக்காரணங்கள் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது.இதன் மூலம் பௌத்த கடும்போக்காளர்களின் கோரிக்கைகளை கோத்தபாய,மகிந்த அரசு நிறைவேற்ற ஆரம்பித்து விட்டது என்ற சந்தேகமும் எம்மை ஆட்கொண்டுள்ளது இதன்மூலம் சிறுபான்மை சமூகங்கள் இவ்வரசுக்கு பூரணமான ஆதரவு வழங்கினாலும் அல்லது வழங்கா விட்டாலும் இந்த அரசு பௌத்த கடும்போக்காளர்களை போசிக்கின்ற விடயத்தில் பின்வாங்காது என்பதுதான் உண்மை.சகோதர் பஸ்லின் வாஹிட் முதலில் இதை புரிந்து கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. இவ்வெழுத்தாளரின் இந்த ஆக்கத்தில் ஏகப்பட்ட முரண்பாடுகள் இருக்கின்றன. முதலில் Fazlin Wahid அவரகள் எதனை வாசகர்களுக்கு அர்ப்பணம் செய்ய விரும்புகின்றார். சவூதியிலும் ஈரானிலும் முஸ்லிம்களைத் தவிர யாரும் அங்கு குடிமக்களாக இல்லை. ஆயினும் அங்கு சிலைகளை வணங்கிய எவருக்கும் மரணதண்டனை வழங்கப்பட்டதாக குறிப்புக்கள் எதுவும் இல்லை. தவறான கருத்துக்களை பிறழ்வான கண்ணோட்டத்தில் கொடுக்க முனைவதனை தவிர்த்துக் கொள்ளுங்கள். இலங்கையில் ஜனாசாக்களின் எரிப்பினை சிஙகள பௌத்த புத்திஜீவிகளே எதிர்த்து அறிக்கை விட்டுள்ளனர். ஆதாரமற்ற கருத்துக்கள் தொடர்ந்து சமர்ப்பிக்கப்பட்டால் Jaffna Muslim மே உங்களை ஓரங்கட்டிவிடும். கொஞ்ஞம் அவதானமாக கருத்துக்களை ஆதாரங்களுடன் சொல்ல வாருங்கள்.

    ReplyDelete
  7. There are no native idol worshippers in middle east countries except migrant workers. In Muslim countries such as Malaysia, Indonesia etc there is religious freedom for non Muslims.
    In Sri lanka burning of janaza is political reason in contradiction to religious freedom in the constitution. Local JMO is not expert in health matters to over rule WHO experts on burial.

    ReplyDelete
  8. சவூதி அரேபியாவில் முஹம்மது(ஸல்)அவர்களால் இஸ்லாமிய அரசு தாபிக்கப்பட்ட ஹி.10ஆம் ஆண்டு முதல் அங்கு சிலை வழிபாடு தடைசெய்யப் பட்டிருப்பதை யாவரும் அறிவர். அந்த அரசின் எல்லைகள் வியாபிக்கும் பிரதேசங்கள் எங்கிலும் இது அமுலிலிருக்கும்.அது புனித குர்ஆனையும்,ஸுன்னாவையும் அடிப்படையாகக் கொண்ட சரீஆ சட்டம் ஆகும்.இந்த சட்டத்தின் கீழ் சிலைவழிபாடு தடை செய்யப்பட்டுள்ளது.இந்நாட்டினுட் பிரவேசிப்பவர்கள் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடல் வேண்டும். அவ்வொப்பந்தத்தின் நிபந்தனைகளை மீறுவோர் தண்டிக்கப் படுவர்.இந்த அடிப்படையிலேயே போதைப் பொருட் பாவனை,சிலை வழிபாடு முதலிய குற்றங்களுக்கும் அங்கு தண்டனை வழங்கப் படுகின்றது. அதற்காக ஜனநாயக நாடாகிய இலங்கை சமய அடிப்படை உரிமையையும், கொரோனா வைரஸ் தாக்கத்தினால் மரணிப்போரின் இறுதிக் கிரியைகளை நிறைவேற்றுவற்கு ஐ.நா.களின் இரு பரிந்துரைகளுள் இந்தியா உட்பட வேறெந்த நாடும் பின்பற்றாத எரியூட்டும் முறையை,இறுதிச் சமயக் கிரியையைக் கூட அநுமதிக்காமலும்,உலக முஸ்லிம் நாடுகளின் அதிருப்தியைப் பொருட்படுத்தாமலும்,துறைசார் நிபுணர் குழுவொன்றின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுமாறு பல தரப்புகளாலும் விடுக்கப்பட்ட வேண்டுகோள்களுக்குச் செவிமடுக்காமலும் முஸ்லிம் ஜனாஸாக்களை அரசாங்கம் எரியூட்ட அரசியல் தீர்மானம் மேற்கொண்டமை இந்நாட்டின் சமூக,சமயப் பற்றுள்ள முஸ்லிம்களின் மனதில் மங்காத வடுவாகிவிட்டது.எரியூட்டப்பட்ட இரு சடலங்களில் கொரோனாத் தொற்று ஏற்பட்டிருக்கவில்லை எனக் கண்டறியப் பட்டதா க பின்னர் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்மை கவனிகக்கத் தக்கது.இதனை அங்கீகரிக்காத ஒரே அரசியல் கட்சி ஜே.வி.பீ. மாத்திரமே!

    1977ல் பதவிக்கு வந்த ஐ.தே.க. அரசாங்கம் முஸ்லிம் ஐ.தே.க.முஸ்லிம் பா.உ.னர்களிடம் மாத்திரமன்றி ஐ.தே.க.பா.உ. எல்லோரினதும் இராஜினாமாக் கடிதங்களையும் வாங்கியிருந்தார் என்பனைச் சட்டத்தரணியான பஸ்லின் வாஹித் அறியவில்லை போலும்!

    முஸ்லிம் நாடுகளான பாகிஸ்தான்,பங்கலாதேஷ்,மலேசியா,இந்தோனேசியா ஆகிய முஸ்லிம் நாடுகளில் சிறுபான்மை பௌத்தர்களின் சமய,கலாசார,பண்பாட்டுப் பாரம்பரியங்கள் யாவும் நன்கு பேணிப் பாதுகாக்கப்படுகின்றன. என்றுமே அங்கு பௌத்தர்களுக்கெதிராக எந்த அசம்பாவிதமும் முஸ்லிம்களால் ஏற்படவில்லை.

    ReplyDelete

Powered by Blogger.