July 30, 2020

மட்டக்களப்பு மாவட்ட தேர்தலில் வெற்றிபெறப்போகும் பஷீர் சேகுதாவூத்

- Abu Zaid -

மட்டக்களப்பு மாவட்டத்தின் தேர்தல் களம் மிகவும் சூடுபிடித்துள்ள இந்த நிலையில் அங்கு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அதிக பிரயத்தனத்துடன்  தங்களது தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். கடந்தகால தேர்தல் முடிவுகளை வைத்து பார்க்கும்போதும் இம்முறையும் தேர்தல் பெறுபேறுகளில்  பாரிய மாற்றங்கள் நிகழ வாய்ப்பில்லை. கடந்த முறை போல் இம்முறையும் தமிழரசுக் கட்சி 3 ஆசனங்களை இலகுவாக கைப்பற்றக் கூடிய வாய்ப்பு நிலவுகிறது, நான்காவது ஆசனத்திற்கு பிள்ளையான் தரப்பிக்கும்  சஜித் உடைய ஐக்கிய மக்கள் சக்திக்கும் போட்டி நிலவுவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது, ஏனெனில் சஜித் உடைய அணி மாத்திரம்தான் இம்முறை போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு மத்தியில் தமிழ் தரப்பு வாக்குகளை பெற்றுக் கொடுக்கக்கூடிய ஒரே ஒரு சாத்தியப் பாடான சூழலை கொண்டுள்ளது. இம்முறை மட்டக்களப்பில் பிள்ளையான் தரப்பினர்  வேட்பாளர் தெரிவில் மிகவும் கவனமாக மக்கள் செல்வாக்குள்ள நபர்களையே களமிறக்கி  உள்ளனர் இதனால் அவர்களுக்கான வாக்கு வங்கி கணிசமாக அதிகரிக்கும் என எதிர்வு கூறப்படுகிறது. 

எனவே நான்காவது உறுப்புரிமை பிள்ளையானுக்கு செல்வதாக இருந்தால் அடுத்ததாக வரும் ஐந்தாவது ஆசனத்தினை பெறக்கூடிய  தரப்புகள் யார் என்பதே மிகவும் கடினமான போட்டியாக உள்ளது இந்நிலையில் முஸ்லிம் தரப்பினர் 3 பிரிவுகளாக தேர்தல் களத்தில் நிற்கின்றனர் இவர்களில் முன்னிலையில் டெலிபோன் சின்னத்தில்   போட்டியிடும் அமீர் அலி அவர்களும் அடுத்ததாக முஸ்லிம் காங்கிரஸ் தரப்பில் போட்டியிடும் நசீர் ஹாபீஸ் அவர்களும் காணப்படுவதுடன் கடைசியாக ஹிஸ்புல்லா தரப்பினர் காணப்படுகின்றனர்; ஆயினும் தாமே வெல்லக்கூடிய தரப்பினர் என்று இவர்கள் தமது வாக்காளர்களை நம்ப வைக்க மிகவும் பிரயத்தனம் செய்கின்றனர். அவர்களுடைய விளக்கங்களும் அதனை செவியுறுவோருக்கு நம்பத்தகுந்த வகையிலேயே அமைந்துள்ளது.  ஆயினும் களநிலவரங்களை முன்னைய தேர்தல் முடிவுகளோடு ஒப்பிட்டு அலசி ஆராயும் ஒருவர் சரியான எதிர்வு கூறலை மேற்கொள்ளமுடியும். 

ஐக்கிய மக்கள் சக்தி  அமைத்துள்ள கூட்டில் வாக்குப் பலம் பொருந்திய அமீர் அலி அவர்களும் காத்தான்குடியைச் சேர்ந்த அப்துர் ரஹ்மான் அவர்களும் மேலும் சஜித் பிரேமதாச விற்கான தமிழ், முஸ்லிம்  மற்றும் சிங்கள ஆதரவு தளங்களும் கணிசமான வாக்குகளை அந்த தரப்பிற்கு பெற்றுக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இங்கே களத்தில் முஸ்லிம் காங்கிரசும் பஷீர் சேகுதாவூத் அவர்களுடைய ஐக்கிய சமாதான கூட்டமைப்பும் மிகுந்த சவால்களை எதிர்நோக்க கூடும் ஆயினும் இங்கு பிரதானமாக அவதானிக்கக் கூடிய விடயம் என்னவெனில் முஸ்லிம் காங்கிரஸில் இருந்தும் ஏனைய தரப்புகளில் இருந்தும் வெளியேறிய அல்லது வெளியேற்றப்பட்ட அரசியல் பிரமுகர்கள் சேர்ந்து உருவாக்கிய ஐக்கிய சமாதான கூட்டமைப்பு எந்த வாக்குப் பலமும் இல்லாமல் அல்லது  எந்த ஒரு தேர்தலிலும் தமது வாக்குப் பலத்தை  நிரூபிக்காத கட்சியாக இருந்த பொழுதும் இம்முறை அக்கட்சியின் செயலாளர் பஷீர் சேகுதாவூத் அவர்களின் இராஜதந்திர யுக்தி யினால்  ஹிஸ்புல்லாவை உள்வாங்கி ஒரு கணிசமான வாக்கு வங்கியை தனது கட்சிக்கு பெற்றுக் கொடுக்கும் வேலையை கன கச்சிதமாக செய்து முடித்துள்ளார். 

இம்முறை ஹிஸ்புல்லா அவர்கள் தேர்தலில் தோல்வி அடைகின்ற பொழுது அவர் முற்றுமுழுதாக தனது அரசியல் பலத்தினை இழக்க  நேரிடலாம் என எதிர்பார்க்க படுகிறது; ஆயினும் வென்றாலும்  தோற்றாலும் தனது கட்சிக்கான ஒரு வாக்குப் பலத்தினை நிரூபிக்கும் வாய்ப்பினை ஐக்கிய சமாதான கூட்டமைப்பு பெற்றுக் கொள்ளும், இது; கட்சியினதும் அதனது செயலாளர் பஷீர் சேகுதாவூத் அவர்களினதும்  அரசியல் எதிர்காலத்தை  மீண்டும் சக்தி பெறச் செய்யும். அதுமட்டுமல்லாமல் அவர் எதிர்வரும் தேர்தலில் ‘ஹிஸ்புல்லா வென்றாலும் எமது  கட்சி சார்பாக நான்தான் முடிவெடுப்பேன்’  என்பதை மிக தெளிவாக குறிப்பிட்டு வருகின்றார் இன்னும் ‘ஹிஸ்புல்லா அவர்கள் தனது பெயரினை மீள்நிறுத்தி தன்மீது  ஏற்படுத்தப்பட்டுள்ள சந்தேகப் பார்வையினை  களைவதற்கு இன்னும் சில வருடங்கள் செல்லும்’ என பஷீர் சேகுதாவூத் அவர்கள் எதிர்வு கூறுகிறார் இது ஹிஸ்புல்லா விடயத்தில் தான் ஒரு சிக்கலான சமன்பாட்டினை வைத்திருக்கிறார் என்பதனை எமக்கு கோடிட்டு காட்டுகிறது.  எனவே இந்தப் பாராளுமன்ற தேர்தலில் ஹிஸ்புல்லாவினை மிக கவனமாக பாவிக்கின்ற இராஜதந்திர நடவடிக்கையினை பஷீர் மேற்கொண்டுள்ளது தெளிவாக புலப்படுகிறது. 

இந்த தேர்தலில்  எவ்வாறேனும் வெற்றிபெற வேண்டும் என்கின்ற முனைப்பில் ஹிஸ்புல்லா மிக அதிகமாக சிரமப்படுவது, செலவு செய்வது வெளிப்படையாக தெரிகிறது ஆயினும் அவர் எதிர்பார்க்கும் வாக்கு பலம் அவரது செல்வாக்கு தளமான காத்தான்குடியில் மாத்திரமே உள்ளது என்பது வெளிப்படை உண்மையாகும். கடந்தகால தேர்தல் பெறுபேறுகளை வைத்துப் பார்க்கும்போது ஹிஸ்புல்லாஹ்  சுமார் 60  வீதமான வாக்குகளை காத்தான்குடி மற்றும் அதனை சூழவுள்ள இடங்களில் பெற்றுக் கொண்டாலும் அது சுமார் பதினெட்டாயிரம் வரையான வாக்குகளையே அவருக்கு பெற்றுக்கொடுக்கும் இந்த வாக்குகளை மாத்திரம் வைத்துக்கொண்டு ஹிஸ்புல்லாஹ் வெற்றி பெறுவதென்பது  குதிரைக் கொம்பு போன்ற விடயமே! ஆகவே இந்த தேர்தலில் எவர்  வென்றாலும் தோற்றாலும் தான் வெற்றி பெறுகின்ற சூட்சுமத்தை பஷீர் சேகுதாவூத் கையாண்டிருக்கிறார் எதிர்காலத்தில் தனது கட்சியின் வாக்கு பலம் சுமார்  25000 இற்கு மேற்பட்ட வாக்குகளை கொண்டிருப்பதாக நாட்டிற்கு காட்டி ஒரு பிரபலமான கட்சியாக அவரது கட்சியினை பரிணமிக்க செய்யக்கூடிய முஸ்தீபுகளை அவர் மேற்கொள்ள கூடும். எனவே  அரசியலில் ஓய்ந்திருந்த பசீர் சேகுதாவூத் மீண்டும் அரசியலில் ஒரு சுற்று வருவார் என எதிர்பார்க்க முடியும். இதனை புரிந்து கொள்பவர்கள் நமதூர் வழக்கிலுள்ள “ஊரான் கோழி.....’ எனத் தொடங்கும்  பழமொழியினை நினைத்துப் பார்ப்பதை தவிர்க்க முடியாது. 

1 கருத்துரைகள்:

யதார்த்தம்.

Post a comment