June 16, 2020

நான் ஒருபோதும் இனவாத அடிப்படையில் செயற்பட்டதில்லை - சுமனரதன தேரர்

தமிழ் அரசியல்வாதிகள் காணாமல் போனவர்களை விளம்பரம் செய்து தங்களது இருப்பினை உறுதி செய்து கொள்ள முயற்சிப்பதாக மட்டக்களப்பைச் சேர்ந்த அம்பிட்டிய சுமனரதன தேரர் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர்ந்து வாழும் சிரேஸ்ட ஊடகவியலாளரொருவரின் முகநூல் பக்கத்தில் நேரலையாக இணைந்து கொண்டு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கொக்கட்டிக்சோலை, வெல்லாவெளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல தசாப்தங்களாக தமிழ் மக்கள் எவ்வளவு பேர் வாழ்ந்தார்கள் அவர்களது வாழ்க்கைத் தரம் எவ்வாறு இருந்தது என்பது தமக்கு நன்றாகத் தெரியும்.

போர் இடம்பெற்ற காலத்திலும் அதன் பின்னரும் தமிழ் மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு முடியாத ஓர் நிலைமை ஏற்பட்டுள்ளது.

பிள்ளைகளுக்கு சரியான கல்வியை புகட்ட முடியவில்லை, சொத்துக்களை விருத்தி செய்ய முடியவில்லை.

யுத்தம் இடம்பெற்ற காலத்தினைப் போன்றே யுத்தம் இடம்பெற்றதன் பின்னரும் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நாட்டில் அரசியலில் ஈடுபட்டு வரும் எவரும் இந்த கிராமங்களின் உட்பிரதேசங்களுக்குச் செல்வதில்லை.

ஏற்கனவே கட்டியெழுப்பிய அரசியல் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதில் அதிக சிரத்தை எடுத்துக் கொள்கின்றார்களே தவிர மக்களின் நலனில் இவர்கள் கவனம் செலுத்துவதில்லை.

இதன் மூலம் அப்பாவி தமிழ் மக்களுக்கு எவ்வித நலன்களும் கிடைக்கப் போவதில்லை.இவ்வாறான அரசியல்வாதிகளின் ஊடாக தமிழ் மக்களுக்கு நம்பிக்கையான நாளைய தினத்தை உருவாக்கித் தர முடியும் .

30 ஆண்டுகளாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை தமிழ் அரசியல்வாதிகள் காணாமல் ஆக்கப்பட்டவர்களை முன்னிலைப்படுத்தி பயன்படுத்திக் கொள்கின்றனர்.

கணவனை இழந்த பெண்கள் மற்றும் காணாமல் போனவர்களை பயன்படுத்தி தமிழ் அரசியல்வாதிகள் அரசியல் செய்கின்றனர்.

பௌத்த பிக்கு என்ற ரீதியில் இவ்வாறு மக்கள் துன்புப்படும் போது அதனை வேடிக்கை பார்க்க முடியாது எனவும், நாட்டை அபிவிருத்தி பாதைக்கு இட்டுச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தாம் ஒரு போதும் இனவாத அடிப்படையில் செயற்பட்டதில்லை எனவும் சிலரது அநீதியான செயற்பாடுகளுக்கு எதிராக குரல் கொடுத்துள்ளேன்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் தாம் நிச்சயமாக வெற்றியீட்டுவேன்.

பௌத்த பிக்குகள் தங்களது உணவைக் கூட யாசகம் செய்து உட்கொள்வதாகவும், தாமும் அவ்வாறு செயற்பட்டு வருவதாகவும் தமக்கு கிடைக்கும் தானத்தை கூட ஏழை எளியவர்களுக்கு வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில பௌத்த பிக்குகள் ஆடம்பரமாக வாழ்ந்த போதிலும் தாம் அவ்வாறு சொத்துக்களை குவிப்பதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

4 கருத்துரைகள்:

இன்னும் கொஞ்சம் முயற்சி செய்தால் ஒரு ஐம்பது வாக்குகள் பெறலாம்

ஆடு நணையுது என்று ஓநாய் அழுத கதை போலுள்ளது

பரதேசிக்கு சிம்மாசனம் தேவையோ...

Then why did he slap the Christian paster if he is talking racism. All Election motive.

Post a comment