Header Ads



ரிமோட் மூலம் இயங்கும், நவீன தீயணைப்பு வாகனம் - அபுதாபியில் அறிமுகம்


அபுதாபி தீயணைப்புத்துறையில் புதிதாக போசன் நாட்டில் இருந்து வாங்கப்பட்டுள்ள டி.ஏ.எப். 35 என்ற நவீன தானியங்கி தீயணைப்பு வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் எடை 3,800 கிலோ.

இந்த வாகனம் சக்கரங்கள் பொருத்தப்பட்டு சிறிய வாகனம் போல உள்ளது. இதன் சக்கரங்கள் ராணுவ பீரங்கி வண்டியில் உள்ளது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இரும்பினால் சக்கரங்கள் செய்யப்பட்டுள்ளதால் எவ்விதமான கரடுமுரடான பகுதிகளிலும் நுழைந்து சென்றுவிட முடியும்.

இந்த வாகனத்தில் டீசலால் இயங்கும் என்ஜின் உள்ளது. அதன் மூலம் தானே நகர்ந்து செல்லும் வகையில் நவீன தொழில்நுட்பத்தில் இது உருவாக்கப்பட்டுள்ளது. தீ எரியும் இடத்தை உணர்ந்து தானாக நகர்ந்து சென்று தீயை அணைக்கும்.

இதன் பின்புறத்தில் உள்ள இணைப்பில் தீயணைப்பு வாகனங்களில் இருந்து தண்ணீர் குழாயை இணைத்து விட்டால் போதும். அதில் உள்ள மோட்டார் மூலமாக தண்ணீரை உறிஞ்சி, தீயை நோக்கி பீய்ச்சியடித்து தீயை சில நிமிடங்களில் முற்றிலுமாக அணைத்து விடும்.

தண்ணீரை அதிவேகத்தில் பீய்ச்சியடிக்க சக்திவாய்ந்த கம்பரசர் மோட்டார் உள்ளது. அதில் இருந்து தண்ணீரானது பெரிய டிரம்மில் இருந்து கொட்டுவதுபோல வேகமாக வெளியேறுகிறது. அதாவது ஒரு நிமிடத்தில் 1,500 லிட்டர் முதல் 4 ஆயிரத்து 500 லிட்டர் தண்ணீரை 200 அடி தொலைவுக்கு இது பீய்ச்சியடிக்கும் சக்திவாய்ந்தது ஆகும்.

நிற்கும் இடத்தில் இருந்து 1,640 அடி தொலைவுக்கு முன்னும் பின்னும் நகர்ந்து இந்த வாகனம் பணிபுரியும். இதனை தொலைவில் இருந்து ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்க முடியும்.

இந்த வாகனம் அபுதாபியில் உள்ள சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பயன்படுத்தப்பட்டது. மிக துரிதமாக செயல்பட்டு சில நிமிடங்களில் இந்த வாகனம் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தது.

இந்த தகவலை அபுதாபி தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.