Header Ads



லீசிங் மாபியாக்களால் கொல்லப்படும் முன், சுனில் இறுதியாக கூறியது என்ன..?

- ஹரிணி செல்வராஜ் -

இலங்கையிலுள்ள அப்பாவி மக்களை மாபியா அல்லது பாதாள உலக கோஷ்டிகளிடமிருந்து காப்பாற்றுமாறு இலங்கை சுயதொழிலாளர்களின் தேசிய முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன இறுதியாக முகநூல் நேரடி ஒளிபரப்பு ஊடாக ஜனாதிபதியிடம் வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.

அதேநேரம், இந்த முகநூல் ஊடாக சுனில் ஜயவர்தன என்ன கூறினார்? இதோ விபரம்..

'கொரோனா பிரச்சினையிலிருந்து நாடு விடுபட்டு , முச்சக்கரவண்டியொன்றை பயன்படுத்துவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னரே சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. பிக் மீ, ஊபர் போன்றவற்றிற்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டது. அரசாங்கமும் பிக் மீ, ஊபர் ஆகியவற்றில் செல்லுமாறு கூறுகின்றது. ஜனாதிபதி அவர்களுக்கு இது தெரியவில்லையா?

கௌரவத்திற்குரிய ஜனாதிபதி அவர்களே!... நீங்கள் மக்களுக்கு லீசிங் நிவாரணமொன்றை வழங்குவதாக ஏமாற்றி, அந்த ஏமாற்றத்திற்கு மக்கள் சிக்குண்டுள்ளனர். மிரிஹான பகுதியில் உங்கள் வீட்டிற்கு முன்பாக இந்த நிறுவனம் உள்ளது.

முச்சக்கரவண்டியை செலுத்துவதற்கான அனுமதி வழங்கப்பட்டு ஒரு வார காலம் கூட கிடையாது. சிறு தொகையை கூட உழைக்க முடியாத நிலையில் இவர்கள் உள்ளனர். 50 அல்லது 100 ரூபா என உழைத்து தமது குடும்பத்தை நடத்தி செல்லும் இந்த சந்தர்ப்பத்தில் இந்த இடத்தில் அப்பாவி ஒருவரின் வாகனம் சூறையாடப்பட்டுள்ளது. பாதாள உலக கோஷ்டி உறுப்பினர்களை பயன்படுத்தி, அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தி வாகனங்களை சூறையாடிச் செல்கின்றனர். அந்த நடைமுறையொன்று தற்போது செயற்பட்டு வருகின்றது. நீங்கள்

பாதாள உலக நடவடிக்கைகளை இல்லாது செய்ய முயற்சிக்கின்றீர்கள். பாதாள உலக செயற்பாடுகள் லீசிங் நிறுவனத்திற்குள்ளேயே செயற்படுகின்றன. லீசிங் செயற்பாடுகளை முன்னெடுப்பவர்களே பாதாள உலக கோஷ்டித் தலைவர்கள். சிறு அளவில் செயற்படுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுத்து போதுமானதாக இருக்காது. இவ்வாறானவர்கள் மீதே நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறானவர்களை கொலை செய்து, தொங்க விட வேண்டும். பாதாள உலக நடவடிக்கைகளே அப்பாவி மக்களை சூறையாடுகின்றது.

கௌரவத்திற்குரிய ஜனாதிபதி அவர்களே! போதைப்பொருள் பாதாள நடவடிக்கைகளை விடவும், அப்பாவி மக்களை சூறையாடும் பாதாள உலக செயற்பாடுகளே மோசமானது. இந்த நபருக்கு குடும்பத்தை கொண்டு செல்ல முடியாதுள்ளது. பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப முடியாதுள்ளது. இவர்களுக்கு உணவு உட்கொள்ள முடியாதுள்ளது. இந்த நாட்டிற்குள் இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. உங்களின் லீசிங் நிவாரணத்திற்கும், அவர்களுக்கும் தொடர்பு கிடையாதாம். இவர்களுக்கு பல்வேறு கட்டளைகள் இருக்கின்றனவாம். அவற்றையே இவர்கள் செயற்படுத்துகின்றார்களாம்.

ஜனாதிபதி அவர்களே. நாம் தற்போது ஜனாதிபதி செயலகத்துடன் கதைத்தோம். அங்குள்ள விடயத்திற்கு பொறுப்பான அதிகாரியை தெளிவூட்டினோம். அவர் மீண்டும் எனக்கு அழைப்பை மேற்கொண்டு, ஜனாதிபதி செயற்பாடுகளை முன்னெடுக்கும்

குழுவிற்கு இந்த விடயத்தை தெளிவூட்டுவதாக அவர் உறுதியளித்தார். இவ்வாறான முறையற்ற விடயங்கள் இந்த நாட்டிற்குள் செயற்படுத்தப்படுகின்றன. நாடு தற்போதே திறக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பாதாள உலக செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன. வாகனங்களை சூறையாடப்படும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்களே, இந்த விடயம் தொடர்பில் உடனடியாக தலையீடு செய்யுங்கள். அப்பாவி மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் உடனடியாக தலையீடு செய்யுங்கள். இல்லையென்றால், இந்த நாட்டிலுள்ள எட்டு லட்சத்து 50 ஆயிரம் வாகனங்கள் உள்ளன. அவற்றில் 99 வீதமானவை லீசிங் மூலம் பெற்றுகொள்ளப்பட்டுள்ளன. இந்த லீசிங் செய்த அனைவரும் இந்த பிரச்சினையை தற்போது எதிர்நோக்கி வருகின்றனர். இந்த மூன்று மாத காலத்தில் இலங்கையிலுள்ள அனைவருக்கும் லீசிங் கொடுப்பனவு செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. பணம் செலுத்த முடியாத நிலையிலுள்ள வாகனங்களே இன்று இலங்கையில் உள்ளன. இந்த அனைத்து வாகனங்களையும் லீசிங் நிறுவனங்களிடம் ஒப்படைத்தால் பிரச்சினை முடிவடையும். தயவு செய்து ஜனாதிபதி இந்த விடயத்தில் தலையீடு செய்யுங்கள். இந்த மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்துங்கள். செல்வந்தர்களின் வாகனங்களின் மீது இவர்கள் கை வைக்க மாட்டார்கள். முச்சக்கரவண்டி போன்ற சிறு வாகனங்களின் மீதே கை வைக்க ஆரம்பித்துள்ளார்கள். மக்கள் மீது தாக்குதல் நடத்தி, திட்டி, வாகனங்களை கையகப்படுத்துகின்றனர்.

இந்த விடயம் தொடர்பில் உங்களின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன். இன்று அல்லது நாளை இந்த பிரச்சினைக்கு தீர்வை காணுங்கள். இந்த தகவலை நாம் எடுத்துகொண்டு நாளை ஜனாதிபதி, உங்களின் வீட்டு முற்றத்திற்கு வர போகின்றோம். இந்த நிறுவனம் உங்களின் வீட்டுக்கு அருகிலேயே உள்ளது. உங்களின் வீட்டு முற்றத்திற்கு குழுவாக நாம் நாளை வருகைத் தந்து எதிர்ப்பை வெளியிடவுள்ளோம். மிக்க நன்றி.

- என்று கூறியிருந்தார் சுனில்

  தமிழன்

No comments

Powered by Blogger.