Header Ads



தேர்தல் பிரச்சாரம் – தேர்தல் விஞ்ஞாபனம் குறித்து கட்சிகள் கருத்து


தேர்தலிற்கான புதிய திகதி அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்திற்கு தயாராகி வருகின்றன.

தங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பிரதான கட்சிகளின் தலைவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சியின் பிரச்சார நடவடிக்கைகள் அடுத்த வாரம் ஆரம்பமாகும் என தெரிவித்துள்ள கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றி எங்கள் பிரச்சார நடவடிக்கைகள் அமைந்திருக்கும் என தெரிவித்துள்ளார்.

ஐக்கியதேசிய கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் நாட்களில் உருவாக்கப்படும் கூடிய விரைவில் அது வெளியாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

அரச ஊடகங்கள் மற்றும் ஏனைய அலைவரிசைகளை பயன்படுத்தி தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்வதற்கான சாதகமான நிலை ஆளும் கட்சிக்கு காணப்படும் என தெரிவித்துள்ள அவர் ஐக்கியதேசிய கட்சி மக்களை வெற்றிகரமாக சென்றடைவதற்காக ஏனைய ஊடகவழிமுறைகளை பயன்படுத்த முயலும் என தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழு தான் தெரிவித்தபடி தேர்தல் திகதியை அறிவித்தமைக்காக நன்றி தெரிவிக்கின்றோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தலைவர் சேனக டி சில்வா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வாரங்கள் அனைத்து கட்சிகளும் அனைத்து வேட்பாளர்களும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுகின்றார்களா என்பதை வெளிப்படுத்தும் என தெரிவித்துள்ள அவர் நேற்று கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களிற்கு அவர்கள் எவ்வாறு சுகாதார வழிமுறைகைள பின்பற்றவேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு செயலமர்வை ஏற்பாடு செய்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கட்சியின் கொள்கை விளக்கம் அடுத்த வாரமளவில் வெளியாகலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

2019 ஜனாதிபதி தேர்தலில் ஜேவிபியின் தலைவர் வெளியிட்ட கொள்கை பிரகடனத்தையே தொடர்ந்தும் பின்பற்றப்போவதாக அந்த கட்சி தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.