Header Ads



சம்பந்தன் தொடர்பில் அரசு, விழிப்பாகவே இருக்க வேண்டும்

பிரிவினைவாதப் போரை முன்னெடுக்கும் சம்பந்தன் தொடர்பில் அரசு விழிப்பாகவே இருக்கவேண்டும். 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் உள்ள தடைகளை தகர்த்துக்கொள்வதற்காகவே பிரதமரைப் பாராட்டும் வகையில் சம்பந்தன் கருத்து வெளியிட்டு வருகின்றார் என பேராசிரியர் மெதகொட அபேதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

பிரதமர் மஹிந்த ராஜபக்சவை மிகவும் சிறப்பாக வர்ணிக்கும் வகையில் பப்பாவில் ஏற்றுவது போன்று சம்பந்தன் வெளியிட்ட கருத்துகளை ஆங்கில பத்திரிகையொன்றில் காணக்கூடியதாக இருந்தது. எமது பிரதமரை சிறப்பான வார்த்தைகளால் வர்ணிப்பது தவறு கிடையாது.

ஆனால், சம்பந்தன் எதற்காக வர்ணிக்கின்றார் என்பது பற்றியே நாம்சிந்திக்கவேண்டும்.

இளம் வயதுடைய மனைவி வசிக்கும் வீட்டுக்கு ஒருவர் வருவாராம். ஒருநாள் அவ்வாறு அவர் வந்திருந்தபோது, அப்பெண்ணின் கணவரும் வந்துவிட்டாராம். இதனையடுத்து அவர் கட்டிலின்கீழ் சென்றுள்ளார். அந்நபர் தப்பிச் செல்லவேண்டும் என்பதற்காக, என்றுமில்லாதவாறு வயதுபோன தனது கணவரைக் கட்டியணைத்தாராம் அந்த இளம் மனைவி.

இப்படி பாசமில்லாத அந்த இளம் மனைவி, தனது வயதுபோன கணவனைக் கட்டியணைத்ததன் பின்னணியில் சம்பவம் இருந்தது. எனவே, சம்பந்தனின் அணுகுமுறையும் இப்படிதான். அதாவது பிரிவினைவாதம் மூலம் போரை முன்னெடுக்கமுடியாது என்பது சம்பந்தனுக்குத் தெரியும்.

எனவே, 13வது திருத்தச் சட்டம் நடைமுறையாவதில் உள்ள தடைகளை தகர்த்தெறிவதற்கான முயற்சியில் சம்பந்தன் ஈடுபட்டுள்ளார். இதன்காரணமாகவே தேனொழுகுவதுபோல் உரையாற்றுகின்றனர். ஆனால், அவர்களின் கபடதனம் ஜனாதிபதி, பிரதமரிடம் எடுபடாது. அதேபோல் நாமும் விழிப்பாக இருந்து அதனை தடுத்து நிறுத்தவேண்டும்.

அதேவேளை, தற்போதுள்ள அரசமைப்பு மாற்றப்படவேண்டும். புதிய அரசமைப்பு உருவாக்கப்படும் என ஜனாதிபதியும் கூறியுள்ளார்.

அரசமைப்பை உருவாக்கும் பணியை நாடாளுமன்றத்துக்கு மட்டும் வழங்கக்கூடாது. அரசமைப்பு ரீதியில் எமது நாட்டுக்கு உள்ள அச்சுறுத்தல்கள் புதிய அரசமைப்பில் நீக்கப்படவேண்டும்.

அதற்கான வழிகாட்டல்களை நாம் முன்னெடுக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் பிரிவினைவாதிகள் குழப்பிவிடுவார்கள் என்று கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.