Header Ads



பொய்யான செய்திகளை பரப்பி, மாணவர்களின் வாழ்க்கையுடன் விளையாட வேண்டாம்..

(எம்.மனோசித்ரா)

முழு நாடும் நீண்ட நாட்களுக்கு பிறகு வழமைக்கு திரும்பியிருந்தாலும், பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது சவாலுக்குரியதொரு விடயமாகும். எனினும் இது பற்றி வெகுவிரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்த கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும , சுகாதாரத்துறை மாத்திரமின்றி மாணவர்களின் போக்குவரத்து பாதுகாப்பு தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தலைமையில் செவ்வாய்கிழமை நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்;.

இதன் போது அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் ,

சுகாதாரத்துறையினர் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகள் கலந்துரையாடல் இடம்பெற்றது. சுமார் 69 நாட்களுக்கு பின்னர் முழு நாடும் வழமைக்கு திரும்பியுள்ளது. சமூகத்தை வழமைக்கு கொண்டு வரும் விடயத்தில் மாணவர்களை பாடசாலைக்கு அழைப்பது நன்றாக ஆராயப்பட வேண்டிய விடயமாகும். எனவே இந்த வாரம் சிறந்த ஆய்விற்குரிய வாரமாகும். நீண்ட நாட்களுக்குப் பின்னர் நாடு வழமைக்கு திரும்பிய பின்னர் எவ்வாறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன ? பொதுப் போக்குவரத்து எவ்வாறு செயற்படுத்தப்படுகிறது ? நாட்டில் புதிதாக ஏற்படக் கூடிய நிலைவரம் யாது ? உள்ளிட்ட முக்கிய விடயங்கள் பற்றி இந்த வாரத்திற்குள் எம்மால் ஒரு மதிப்பீட்டுக்கு வர முடியும்.

அதே போன்று மறுபுறம் பாடசாலைகளில் மாணவர்களின் சுகநலன்களை கணிப்பிடுவதற்கான மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்கு குறிப்பிட்டளவு காலத்தை ஒதுக்க வேண்டியுள்ளது. எனவே வெகுவிரைவில் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான தினத்தை உறுதியாக எம்மால் அறிவிக்க முடியும். கொரியாவில் சுமார் 4 மாதங்களுக்குப் பின்னர் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டன. அதே போன்று ஏனைய சில நாடுகளும் பாடசாலைகளை திறந்துள்ளன.

இலங்கையில் கொரோனா ஒழிப்பிற்கான போராட்டம் பாடசாலைகளை மூடியே ஆரம்பிக்கப்பட்டன. மாணவர்களை பாதுகாப்பாக வீடுகளில் இருக்கச் செய்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. எனினும் பாடசாலைகளை  திறந்த பின்னரே இந்த போராட்டத்தை நாம் முடிவுக்குக் கொண்டு வருவோம். முதலாவது நடவடிக்கையும் இறுதி நடவடிக்கையும் மிக முக்கியமாவையாகும். எனினும் நாம் இதற்கான நடவடிக்கைகளை படிமுறை படிமுறையாகவே முன்னெடுக்க தீர்மானித்திருக்கின்றோம். அவ்வாறான வழிமுறைகள் பற்றி கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்பட்டது.

தற்போது எமக்கு காணப்படும் பிரதான பிரச்சினை பொதுப் போக்குவரத்தை எவ்வாறு முகாமைத்துவம் செய்வது என்பதாகும். எம்மால் பாடசாலைகளை முகாமைத்துவம் செய்ய முடியும். எனினும் பாடசாலைகளில் மருத்துவ வசதிகளை ஏற்படுத்துதல் இலகுவானதல்ல. ஆனால் 43 இலட்சத்தை அண்மித்த மாணவர்கள் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர். அவ் அனைத்து மாணவர்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பொதுப் போக்குவரத்து முகாமைத்துவம் செய்யப்பட வேண்டும். அவ்வாறு செய்வதற்கு போதுமானளவு பேரூந்துகள் எம்மிடம் இல்லை. இது எமக்கு பாரிய சவாலாகும். எனவே இது தொடர்பில் போக்குவரத்து அமைச்சருடனும் கலந்துரையாட வேண்டியுள்ளது. போக்குவரத்து அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடி தீர்வொன்றை எடுக்க வேண்டியிருக்கிறது.

பாடசாலை மீள ஆரம்பிப்பதற்கான முதலாவது படிமுறை உயர்தர மாணவர்களை மாத்திரம் பாடசாலைக்கு அழைப்பதாகும். இந்நிலையில்  சமூக வலைத்தள ஊடகங்களில் மாணவர்களுக்கு அழுத்தம் பிரயோகிக்கும் வகையில் பல்வேறு செய்திகள் வெளியிடப்படுகின்றன. கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர் உயர் தர மாணவர்களுக்கான பரீட்சை நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அது போலியானதாகும். இவ்வாறான செயற்பாடுகள் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு பெரும் அழுத்தம் பிரயோகிக்கும் ஒரு செயற்பாடாகும். இதனை எவ்வாறு சரிசெய்வது? இந்த செய்தி பரப்பப்பட்டு 48 மணித்தியாலங்களின் பின்னர் பரீட்சைகள் ஆணையாளரினால் இதற்கு மறுப்பு தெரிவிக்க வேண்டியேற்பட்டது.

இவ்வாறு மாணவர்களின் வாழ்க்கையுடன் விளையாட வேண்டாம். பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான தினமும் இவ்வாறு வெளியிடப்பட்டிருந்தது. ஊடகமொன்றில் ஜூன் மாதம் முதலாம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இதனால் பெற்றோரும் பதற்றமடைகின்றனர். மாணவர்கள் மத்தியில் பதற்றம் அதிகரிக்கிறது. உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மனநிலையை இவ்வாறான செயற்பாடுகள் பாதிக்கும்.

எனவே ஒரு அரசியல்வாதியாக இன்றி மிகுந்த பொறுப்புடனும் மனிதாபிமானத்துடனும் கேட்டுக் கொள்கின்றேன். இவ்வாறான செயற்பாடுகளில் யாரும் ஈடுபட வேண்டாம். மாணவர்ளுடன் தொடர்புபட்ட விடயங்களை உங்களது தேவைக்காக பயன்படுத்த வேண்டாம் என்று பிரதான ஊடகங்கள் மூலம் சமூக ஊடகங்களிடம் கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.

No comments

Powered by Blogger.