Header Ads



தாயாரில்லாமல் இது எனக்கு 52-வது இரவு: 7 வயது பிரித்தானிய சிறுவனின் கடிதத்தால் நெகிழ்ந்த அமீரகம்

ஐக்கிய அமீரகத்தில் குடியிருக்கும் பிரித்தானிய சிறுவன், அங்குள்ள தலைவருக்கு கைப்பட எழுதிய கடிதத்தால் நீண்ட இரண்டு மாதங்களுக்கு பின்னர் தாயாருடன் சேர்த்து வைக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய அமீரகத்தின் ராஸ் அல் கைமா மாகாணத்தில் 7 வயது மகன் ஆர்ச்சி மற்றும் கணவர் ரிச்சார்டுடன் குடியிருந்து வந்துள்ளார் பிரித்தானிய தாயார் ஜெசிகா ஃபிட்ஸ்ஜான்.

கொரோனாவால் தந்தை இறந்ததை அடுத்து, இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளும் பொருட்டு ஜெசிகா கடந்த மார்ச் மாதம் பிரித்தானியா திரும்பியுள்ளார்.

இதனிடையே கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில், ஐக்கிய அமீரகத்தின் அனைத்து மாகாணங்களும் சர்வதேச விமான சேவையை ரத்து செய்தது.

இதனால் ஜெசிகாவுக்கு ஐக்கிய அமீரகம் திரும்ப முடியாமல் போனது. தாயாரின் அருகாமையின்றி சிறுவன் ஆர்ச்சி தவித்துப் போயுள்ளான்.

இந்த நிலையில், கடந்த திங்களன்று ராஸ் அல் கைமா ஆட்சியாளரான ஷேக் சவுத் பின் சக்ர் அல் காசிமிக்கு சிறுவன் ஆர்ச்சி கைப்பட ஒரு கடிதம் எழுதியுள்ளான்.

அதில், பிரித்தானியாவில் சிக்கியுள்ள தமது தாயாரை ஐக்கிய அமீரகத்தில் அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளான்.

மட்டுமின்றி தாயாரில்லாமல் 52 நாட்கள் தனியாக தூங்கி எழுந்துள்ளேன் என அந்த கடிதத்தில் சிறுவன் ஆர்ச்சி குறிப்பிட்டுள்ளான்.

கடிதத்தின் தன்மையை உணர்ந்த ஆட்சியாளர் அல் காசிம், உடனடியாக சிறுவனின் கோரிக்கையை நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளார்.

மேலும், ஒரு தைரியமான சிறுவன் என்பதால் உங்களைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறேன் என கைப்பட கடிதம் ஒன்றில் பதிலளித்த ஆட்சியாளர் அல் காசிம்,

தாயாரை வீட்டிற்கு அழைத்து வருவது உங்களை மகிழ்விக்கும் என நம்புகிறேன் எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது ஜெசிகாவை ஐக்கிய அமீரகத்தில் அனுமதித்துள்ள அல் காசிம் நிர்வாகம், அவர் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது.

1 comment:

Powered by Blogger.