Header Ads



சுகாதார பிரிவினரின் பாதுகாப்பு கருதி விசேட செயற்திட்டங்கள்


கொரோனா வைரஸ் பரவும் வீதம் அதிகரித்து காணப்படுவதால் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் எடுக்கப்படவேண்டிய விசேட நடவடிக்கைகள் தொடர்பான தீர்மானங்களை எடுப்பதற்கான செயற்திறன் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்த விசேட செயற்திறன் குழு சுகாதார தேசிய வைத்திய பிரிவினரால் நிறுவப்பட்டது.

இந்த கூட்டம் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னி ஆராச்சி தலைமையில் நடைபெற்றது.

இதில் வைத்திய நிபுணர்கள், வைத்திய சேவை அதிகாரிகள் மற்றும் விசேட வைத்தியர்கள் அடங்கிய 35 பேர் கலந்துகொண்டனர்.

இங்கு ஊரடங்கு தளர்த்தப்பட்ட மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகளுக்கு தேவையான சகல வசதிகள் பற்றி ஆராயப்பட்டது.

அத்துடன் இந் நோயாளிகளை பரிசோதனை செய்யும் வைத்தியர்கள் உட்பட வைத்தியசாலையின் அனைத்து பிரிவினரின் பாதுகாப்பு கருதி குறிப்பிட்ட சில நிர்வாகக் குழுவினர் மூலம் சேவைகளை பெறுவது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உடைகள் மற்றும் உபகரணங்களை பெற்றுக் கொடுப்பது தொடர்பாகவும் இவ் விசேட கலந்துரையாடலில் ஆராயப்பட்டது.

கொரோனாவைக் கட்டுப்படுத்தும் செயற்திட்டத்தின் போது பிரதேச மட்டத்தில் பெரும் சேவையை நடத்தும் சுகாதார அதிகாரிகள் காரியாலயங்களுக்கு அவசியமான வாகன வசதிகளையும், அதிகளவில் பரிசோதிக்கப்படுகின்ற PCR அளவை மேலும் அதிகமாக பரிசோதிக்க தேவையான உபகரணங்களை பெற்றுக் கொள்வதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கியிடம் பெற்றுக்கொள்ளும் கடனுதவி தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

கொவிட்19 வைரஸை கட்டுப்படுத்துவதற்கான சுகாதார அமைச்சின் கீழ் நடைபெறும் சுகாதார அவசரப் பிரிவு பிரதேச மட்டத்தில் நடைமுறைபடுத்த அரச நிர்வாக மற்றும் உள்துறை அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடி தேவையான அறிவுரைகளை வழங்கி இச் செயற் திட்டத்தை மேலும் அதிகரிப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. 

No comments

Powered by Blogger.