Header Ads



மங்கள சமரவீரவை கைது செய்யுமாறு கோரிக்கை

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவை கைது செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சரும் ஆளும் கட்சியின் உறுப்பினருமான மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

நாவலப்பிட்டி நகரில் கிருமி நாசனி தெளிக்கும் நடவடிக்கைகளில் கலந்துக்கொண்ட அவர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

மங்கள சமரவீர அரச அதிகாரிகளையும், மக்களையும் நாட்டையும் தவறாக வழிநடத்தியுள்ளார் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மங்கள சமரவீர அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்ததுடன் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நேரத்தில் ஜனாதிபதிக்கு அரச பணத்தை பயன்படுத்த முடியாது எனவும் அது சட்டவிரோதமானது எனவும் கூறியிருந்தார்.

அப்படி அரச பணத்தை பயன்படுத்தினால், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்து, ஜனாதிபதியின் குடியுரிமை இரத்துச் செய்ய முடியும் எனவும் மங்கள தனது கடிதத்தில் கூறியிருந்தார்.

எனினும் ஜனாதிபதிக்கு இருக்கும் அரச நிதியை கையாளும் அதிகாரம் தொடர்பாக அரசியலமைப்புச் சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாக மகிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டுள்ளார்.

இப்படியான நிலைமையில் மங்கள சமரவீர நாட்டை தவறாக வழிநடத்தியுள்ளதாகவும் இவ்வாறான பொய்யான குற்றச்சாட்டை சுமத்தும் நபர்களுக்கு எதிராக நட்டத்தை அமுல்படுத்த வேண்டும் எனவும் அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.