March 18, 2020

திருமணங்களையும், விருந்தோம்பல்களையும் தவிர்த்துக் கொள்க - பிச்சைக்காரர்களையும் அனுமதிக்க வேண்டாம்

- ஏ.எச்.ஏ. ஹுஸைன் -

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் முன்னாயத்த நடவடிக்கையாக அதிகாரிகள் தரப்பில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எம். அல் அமீன் தெரிவித்தார்.

பொது நிர்வாக அமைச்சின் 10ஃ2020 ஆம் இலக்க சுற்றுநிரூபத்தினை அமுலாக்கும் வகையில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதுவிடயமாக செவ்வாய்க்கிழமை 17.03.2020 ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் உயர்மட்ட அதிகாரிகள் கூட்டமொன்று இடம்பெற்றது.

சுகாதார வைத்திய அதிகாரி, ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, இராணுவ அதிகாரி, பிரதேச செயலக உயர்நிலை அதிகாரிகள், அரச அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஏறாவூர் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் உட்பட பொது நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானத்தின்பபடி,

அதன்படி ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் 'கொரோனா வைரஸ் ஒழிப்பு தகவல் நிலையம்' ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையத்துடன் இணைந்து  பணியாற்றுவதில் பொதுமக்கள் உச்ச பங்களிப்பினை வழங்குவதனூடாக முடிந்தவரை கொரோனா தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாத்து அதனூடாக முழு நாட்டையும் பாதுகாக்க முடியும்.

1. வெளிநாடுகளில் இருந்து வருகை தந்துள்ளவர்கள் பற்றி உடனடியாக கிராம சேவகர் அல்லது பிரதேச செயலகத்திற்கு தகவல் வழங்குதல், அவ்வாறு வருகை தந்தோர் தம்மை குறைந்தபட்சம் பதினான்கு நாட்கள் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளல்.

2. மத வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட பொது இடங்கள், பொது நிகழ்வுகளில் கூட்டாக சேர்வதை கட்டாயமாக தவிர்த்தல். இதனை மீறுவோர்பற்றி பிரதேச செயலகத்திற்கு அறிவித்தல்.

3. ஐவேளை தொழுகையை தனித்து நிறைவேற்றுவதுடன் மறு அறிவிப்பு வரும்வரை ஜம்மியத்துல் உலமாவின் வழிகாட்டலுக்கிணங்க வெள்ளிக்கிழமை ஜும்ஆ ஒன்றுகூடலை தவிர்த்தல். இது விடயத்தில் சட்ட ஒழுங்கு அமுலாக்கலுக்கு பொது மக்கள் ஒத்துழைத்தல்.

4. ஊர்ஜிதமற்ற தகவல்களை சமூகவலைத்தளங்களில் பரப்புதல் பகிர்தலை தவிர்ப்பதுடன் பயங்கர ஆட்கொல்லித் தொற்று நோய் விடயத்தை கேலிக்குட்படுத்தி பரப்புவதன் மூலம் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் பதிவிடுவதை தவிர்த்தல். இதனை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் வகையில் அவர்கள் பற்றிய தகவல்களை பிரதேச செயலகத்திற்கு வழங்குதல்.

5. பிச்சைக்காரர்கள், வெளியூர் தொழிலாளிகள் வீடுகளுக்குள்ளும் தொழிலகச் சூழலுக்குள்ளும் நுழைவதிலிருந்து தடுத்துக் கொள்வதுடன் அவ்வாறானவர்கள் தொடர்பில் உடனடியாக பிரதேச செயலகத்திற்கு அறிவித்தல்

6. திருமணங்களையும் விருந்தோம்பல் நிகழ்வுகளையும் தவிர்த்துக் கொள்வதுடன் அவசியமான நிகழ்வுகளில் வெளியார் அழைப்புக்களை முற்றாக தவிர்த்துக் கொள்வதுடன் குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து இரண்டு வாரங்களுக்குள் வருகை தந்தோரை விலக்கி தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

7. முடியுமானவரை ஒவ்வொரு குடும்பமும் தம்மை தனிமைப்படுத்திக் கொள்வதுடன் அவ்வாறு தனிமைப்படுத்திக் கொண்டவர்கள் 'ளுயகந ர்ழஅந' பதிவிற்காக கிராம உத்தியோகத்தரிற்கு அறிவித்தல். தேவையின்போது வெளிச்சென்று வர எவரேனும் ஒருவரை பயன்படுத்திக் கொள்வதுடன் அவர் வெளிச் செல்கையின்போதும் உள்வருகை நேரங்களிலும் கைகளையும் முகத்தையும் சுத்தப்படுத்திக் கொள்ளல்.

8. அநேகர் தொழில்புரியும் தொழில்தளங்களை உடனடியாக மறு அறிவிப்பு வரை மூடிவிடுதல்.

9. உணவுச்சாலைகளில், நுகர்வு பண்ட நிலையங்களில் நீண்ட நேரம் தரித்து உணவருந்துவதையும் கொள்வனவு செய்வதையும் தவிர்ப்பதுடன் உணவக, தொழில் நிலைய ஊழியர்கள் மாஸ்க்கையும் கையுறையையும் அணிவதை உறுதி செய்ய வேண்டும்.

10. மேற்குறிப்பிட்ட விடயங்களினை அலட்சியம் செய்வோராக நீங்கள் காணும் நபர்கள் அல்லது அமைப்புகளது தகவல்களை பிரதேச செயலகத்திற்கு அல்லது பொலிஸுக்கு அறிவியுங்கள்

கொரோனா வைரஸானது மிகப் பரந்த அளவில் சமூக பொருளாதார இழப்பினை உலகிற்கு ஏற்படுத்திவிட்ட நிலையில் இதன் தாக்கம் இலங்கையில் அதிகரித்தால் அதனை எதிர்கொள்ள முடியாத அபாயம் ஆய்வாளர்களினால் எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனவே இது விடயத்தில் சகல தரப்பினரும் கருத்து வேறுபாடுகளுக்கப்பால் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தயவாக எதிர்பார்க்கப்படுகிறது.

0 கருத்துரைகள்:

Post a comment