Header Ads



இலங்கையர் ஒருவர் சுவிட்சர்லாந்தில், கொரோனா தாக்கி மரணம் - மற்றுமொருவருக்கு தொற்று


உலகளாவிய ரீதியில் வேகமாக பரவி குறுகிய காலப்பகுதிக்குள்ளேயே இன்றுவரை தினம் தினம் மக்கள் உயிரிழந்துவரும் நிலையில் சுவிட்சர்லாந்தில் ஒரு தமிழர் உயிரிழந்துள்ளதாக அப்பிரதேசவாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.

புங்குடுதீவைச் சேர்ந்த 61 வயது நிரம்பிய லோகநாதன் என்பவரே இவ்வாறு தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சுவிஸ் செங்காளன் ஜோனா என்னும் பகுதியில் ஒரு வெதுப்பகத்திற்கு அதாவது பேக்கரிக்கு மேலுள்ள குடியிருப்புத் தொகுதி ஒன்றில் 5 அறைகளில் ஒரு அறையில் தங்கியிருந்த மேற்குறித்த நபர் ஒரு வாரத்திற்கு முன்னர் சூரிச் நகருக்கு சென்று வந்ததுள்ளார்.

இந்நிலையிலேயே அவருக்கு கொரோனாவுக்கான ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டுள்ளன. அதையடுத்து வைத்தியசாலைக்கு தொடர்புகொண்டபோது வைத்தியர்கள் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதிப்படுத்தி வீட்டிலேயே 14 நாட்கள் தனிமைப்படுத்துமாறு தெரிவித்திருக்கின்றனர்.

அதனையடுத்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த அவர் இன்று -25- மாலை ஆகியும் அவருடைய அறையில் எந்தவொரு சலனமுமின்றி இருந்ததனால் பக்கத்து அறையில் இருந்தவர்கள் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து விரைந்து வந்த பொலிஸாரும் வைத்தியப் பிரிவினரும் அவர் இறந்துவிட்டதாக அறிவித்து அவரது சடலத்தை எடுத்துச் சென்றுள்ளனர்.

குறித்த நபரான லோகநாதன் அவர்களின் குடும்பத்தினர் புங்குடுதீவில் வசித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது. ஆனாலும் அவரின் சகோதரி ஒருவர் பேர்ண் பகுதியிலும் , மருமகள் உறவுமுறையில் உள்ள ஒருவர் பிரான்ஸ் நாட்டிலும் வசித்து வருகின்றனர்.

லோகநாதன் நீரிழிவு நோயாளி எனவும் அவர் ஒரு சுவிஸ் உணவகத்தில் வேலை செய்து வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

லோகநாதனுக்கு அந்நாட்டு மொழிப்பிரச்சினை உள்ளமையால் அவர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்குள்ளாகி இருக்கும்போது யாருடைய உதவியையும் நாடாது வைத்தியசாலைக்கும் தொடர்புகொள்ள முடியாமல் தவித்திருக்கலாம் என அப்பிரதேசவாசி மேலும் தெரிவித்திருந்தார்.

மேலும் அக் குடியிருப்புத் தொகுதியில் அறையில் தங்கியிருக்கும் மற்றொருவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவரும் ஒரு யாழ்ப்பாணத்து தமிழர் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. TW News

No comments

Powered by Blogger.