Header Ads



அற்பசொற்ப சலுகைகளுக்காகவும், இலாபங்களுக்காவும் ஏமாந்துவிட வேண்டாம் - ரிஷாட்

சுதந்திர தினத்தன்று தமிழிலே தேசியகீதம் இசைக்கப்போவதில்லை என மமதையுடனும் பெருமையுடனும் பெரும்பான்மை இனத்தை திருப்திப்படுத்துபவர்கள், தமிழ் பேசும் சமூகத்துக்கும் தமிழுக்கும் எவ்வாறு அந்தஸ்தை வழங்கப் போகிறார்கள்? என்று முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கேள்வியெழுப்பினார்.

முசலி, காயக்குழி கிராம மக்களுடன் இன்று (02) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது உரையாற்றிய அவர், மேலும் கூறியதாவது,

“அரசியலமைப்பில் தமிழும் சிங்களமும் அரசகரும மொழியாகும் என குறிப்பிடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட போதும், இந்த அரசு தமிழை இரண்டாந்தர மொழியாக, வேண்டாவெறுப்புள்ள மொழியாக பாராமுகமாக நோக்குவதனால், காலாகாலமாக இருந்துவந்த சம்பிரதாயங்களையும் நடைமுறைகளையும் தடைசெய்து, தமிழ் மொழியை இருட்டடிப்புச் செய்ததன் உள்நோக்கம்தான் என்ன? ஒவ்வொரு காரியத்திலும் பெரும்பான்மை இனத்தவரையும் பேரினவாதிகளையும் திருப்திப்படுத்துவதன் மூலம், பொதுத் தேர்தலிலும் வாக்குகளை அதிகரிக்கச் செய்து,  தமது கட்சிக்கான பிரதிநிதிகளை அதிகரிக்கவே திட்டம்தீட்டுகின்றார்கள். சிறுபான்மை சமூகத்தின் பிரதிநிதித்துவத்தை குறைப்பதும் அதன்மூலம், அந்த மக்கள் சார்ந்த பிரதேசங்களில் பெரும்பான்மை கட்சிகளுக்குச் சார்பான பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் நோக்கிலேயே, இவர்கள் வடக்கு, கிழக்கில் ஏஜெண்டுகளை களமிறக்கியுள்ளனர்.

அற்பசொற்ப சலுகைகளுக்காகவும் இலாபங்களுக்காவும் நீங்கள் ஏமாந்துவிட வேண்டாம். புத்திசாலித்தனமாக சிந்தியுங்கள். எங்கள் மீது எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் அடிமைசாசனத்துக்கு நாங்கள் அங்கீகாரம் வழங்குவோராக இருக்கக்கூடாது. நமது வாக்குகளை செல்லாக்காசாக ஆக்கினோமானால் எதிர்காலத்தில் வருந்தவேண்டி நேரிடும்.

எதிரணியில் இனவாதிகளின் கொட்டம் அதிகரித்ததனாலேயே, ஜனாதிபதி தேர்தலில் நாம் அவர்களுக்கு ஆதரவளிக்கவில்லை. சிறுபான்மை சமூகத்தை அடக்கிஒடுக்க வேண்டுமென்ற அவர்களின் நிகழ்ச்சி நிரலை தெளிவாகக் கண்டோம். அவர்களின் காய்நகர்த்தல்களை உணர்ந்துகொண்டோம். வெறித்தனமான அவர்களின் சிந்தனை வெளிப்படையாக தெரிந்ததனாலேயே அவ்வாறான முடிவை எடுத்தோம். சிறுபான்மை சமூகத்துக்கான கட்சிகளையும் சமூகத்துக்காக முன்னின்று குரல் கொடுத்தவர்களையும் அழித்தொழிக்கும் திட்டம் அவர்களிடம் இருந்தது. இனவாதத்தை முடிந்தளவு எவ்வளவு தூரம் கக்க முடியுமோ அவ்வாறு கக்கி, ஜனாதிபதி தேர்தலில் வெற்றிகொண்டனர்.

எம்மைப் பொறுத்தவரையில், வன்னி மாவட்ட கிராமங்களில் அபிவிருத்திப் பணிகளில் முன்னின்று உழைத்திருக்கின்றோம். அநேகமான திட்டங்களில் அடிக்கல் நாட்டுவதற்கோ திறப்பு விழாவிற்கோ நாம் வருகைதந்து, விளம்பரம் தேடாமல் இருந்திருக்கின்றோம். அதுமாத்திரமின்றி, மக்களுக்கான எமது பணி வியாபித்திருக்கின்றது. அரசியல் ஆதாயம் பெறுவதற்கோ அல்லது புகழுக்காகவோ நாம் இவற்றை மேற்கொள்ளவில்லை. அத்துடன், அபிவிருத்திப் பணிகளில் சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற பாரபட்சமின்றி செயற்பட்டிருக்கின்றோம்” என்றார்.

No comments

Powered by Blogger.