Header Ads



ஹஜ் பயண ஏற்பாடு, சிறப்பு வசதி எதிர்பார்க்கும் பிரிவில் 500 பேர்

புனித ஹஜ் பயணத்துக்கான ஏற்பாடுகளை கவனிக்கும் அரசாங்க ஹஜ்குழுவின் நிபந்தனைகளுக்கு ஹஜ் முகவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். இதனடிப்படையில் இவ்வருட ஹஜ் பயண ஏற்பாடுகளுக்கான நடவடிக்கைகளை அரசாங்கத்தின் நேரடிக் கண்காணிப்பில் முன்னெடுக்க முகவர்கள் உடன்பட்டிருப்பதாக அரசாங்க ஹஜ் குழுவின் தலைவர் மர்ஜான் பழீல் தெரிவித்தார்.

 ஹஜ்முகவர்களுடனான சந்திப்பின்போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

கலாசார மத விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் நேரடிக் கண்காணிப்பில் அரசாங்க ஹஜ் குழு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக அதன் தலைவர் மர்ஜான் பழீல் கூறினார். வெள்ளியன்று நடைபெற்ற கூட்டத்தின் போது பின்வரும் முடிவுகள் எட்டப்பட்டுள்ளன. ஹஜ் பயணிகள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். முதலாவது பிரிவில் 2,000பேர் 5இலட்சத்து 75,000ரூபா கட்டணத்திலும் இரண்டாவது பிரிவில் 1,000பேர் 6இலட்சத்து 50,000ரூபா கட்டணத்திலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சிறப்பு வசதிகளை எதிர்பார்க்கும் பிரிவில் 500பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான கட்டணம் 7இலட்சத்து 50,000ரூபா எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் அனைத்து ஹஜ் பயணிகளுக்கும் உரிய வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டுமெனவும், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தங்குமிட வசதிகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டுமெனவும் முகவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இச் சந்திப்பில் முஸ்லிம் சமய விவகார திணைக்களப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.பி.எம். அஷ்ரப், பிரதமரின் சமய விவகார ஆலோசகர் பர்ஸான் மன்சூர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அஜ்வாத் பாஸி

No comments

Powered by Blogger.